Saturday, February 9, 2008

இன்பமாக வாழ என்ன செய்யலாம்..?

சாதாரணமாக மனிதனுடைய உள்ளத்திலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து பெறக்கூடியதுதான் இன்பமான வாழ்க்கை. உண்மையில், மனிதனுக்கு வறுமை என்பது இல்லை. மேம்போக்காக எடுத்துக்கொள்ளாமல், சற்று ஆழ்ந்து யோசித்தால் இவ்வுண்மை புலப்படும். இப்புவியில் பிறந்த ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே, அவனது இறுதி காலம் வரையிலும் எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் ஒருவரைப் பார்த்து அவரைப்போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். அவன் தன்னிடம் உள்ள ஆற்றலை உணர்ந்து, வளர்த்துக் கொள்ளும் திறமை பெறாமையும், செயல்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டாமையுமே, சோர்வு, விரக்தி, வறுமை உண்டாவதற்குரிய காரணங்களாகும்.

மனத்தை அலைபாய விடுவது, அதைக் கட்டுபாட்டில் வைக்காமல் தேவையில்லா தாழ்வு எண்ணங்களையும், எதிர்மறையான விசயங்களையும் தேக்கி களங்கப்படுத்திக் கொண்டும், தனக்குத் தானே ஒரு எல்லை கட்டிக் கொண்டும், அதிலேயே மனதைச் சிக்க வைத்துக் கொண்டும் அங்கலாய்ப்பதாலேயே 'மனநிறைவு' எற்படாமைக்கு மற்றொரு காரணம்.

இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது..?

முதலில் இயற்கையை நேசியுங்கள். இயற்கையுடன் பேசுங்கள்; ஒன்றித்து விடுங்கள். சுருக்கமாச் சொன்னால், இயற்கை லயத்துடன் வாழ்வை ஓட்டுங்கள். இயற்கையுடன் பேசுவதா...? ஆம். மனதுடன் பெசுவது ஒரு கலை. தற்கருத்தேற்றம் வழி நேர்மறை எண்ணங்களை சுலபமாக மனதிடம் போட்டு வைத்தால் அது பாட்டுக்கு வேலையைச் செய்யும். சுயமுன்னேற்றப் பயிற்சிகளிலோ அல்லது புத்தகங்களில் படித்தோ இருப்பீர்கள்.

சற்றேரக்குறைய அதே போல்தான். நம்மைச் சுற்றி இந்த இயற்கையிடம் பேசுவதும் ஒரு கலைதான். சரி, நான் பேசுகிறேன்; இயற்கை பேசுமா...? என்றால் அதற்குப் பதில் நீங்கள் எவ்வளவு தீவிரமுடன் இயற்கையுடன் இணைகிறீர்கள் என்பதில் இருக்கிறது. சும்மா ஒரு வாரத்திற்கு ....இயற்கைப் பிரதிநிதிகளான மண்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் ஆரம்பியுங்கள்.

இயற்கையானது ஆயிரமாயிரம் இன்பங்கள் உள்ளடக்கியுள்ள ஒரு கூட்டமைப்பு என்பதை நன்றாக உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. உயர்வு உங்கள் சிந்தையில் ஆரம்பிக்கட்டும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.....இயற்கயின் பதில் கிடைத்தால் அதற்கென்றே ஒரு தனி 'வலைப்பூ' ஆரம்பிப்பீர்கள்!