Thursday, February 28, 2008

12வது பொதுத் தேர்தல் - மார்ச், 8.

நாடு சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல்லின மக்களும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை ஆணித்தரமாக உலகிற்கு எடுத்துரைக்கும் கௌரவத்தைப் பெற்றுள்ளது. 1957ஆம் ஆண்டு தனிநபர் வருமனம் RM 800க்கும் குறைவாகவே இருந்தது.தற்போது RM 40,000 எட்டியுள்ளது. அதே காலக்கட்டத்தில் நாட்டின் பட்டுவாடா மதிப்பு (GDP) RM 500 கோடியிலிருந்து RM 90,000 கொடியாக உயர்ந்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 63 இலட்சமாக இருந்த மலேசிய மக்கட்தொகை, இன்று 2.6 கோடியாக வளர்ந்துள்ளது. இதில் 7 இலட்சமாக இருந்த இந்தியர்கள் இன்று 20 இலட்சமாகக் கூடியுள்ளனர். இருப்பினும் விழுக்காட்டு வளர்ச்சியில் 11.3 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

பொருளாதாரத்துறை என்றில்லை, பல்வேறு துறைகளில் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. நியாயமாக, இந்த வளர்ச்சியில் அனைத்துத் தரப்பினர்க்கும் பங்குண்டு. இன பாகுபாடு அற்ற நிலையில், நாட்டின் நிலைத்தன்மையைத் தாரக மந்திரமாகக் கொண்டு, முன்பு கூட்டணியாக இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் மலேசியாவை ஆட்சி செய்யும் பொறுப்பை உண்டாக்கிக் கொண்டது.

1957 முதல் இன்றுவரை 11 பொதுத்தேர்தல்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி வெற்றிபெற இந்தியர்கள் தங்களின் வற்றாத ஆதரவையும் பெரும்பான்மையான வாக்குகளையும் அளித்து, இந்தியர்களே இந்நாட்டின் முன்னணி விசுவாசி என்ற முத்திரையையும் பெற்றுள்ளனர்.
இந்நிலை வரும் 12வது பொதுத் தேர்தலில் நீடிக்குமா ? அதிருப்தியும் விரக்தியும் அடைந்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் தொடர்ந்து தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்களா ? எதிர்கட்சியினர் இந்தியர்களின் வாக்குகள் பெற மிகத் தீவிரமாக பிரச்சாரங்களை முடக்கியுள்ளது. தேசிய முன்னணியில் முக்கிய( இந்திய ) பங்காளிக் கட்சியான ம.இ.காவுக்கு பிளவுபடாத ஆதரவை நல்குமா ?

அமைதியான, அடக்கமான, அரசாங்கத்திற்கு கட்டுப்பட்ட, பெரும்பான்மையில் உழைக்கும் வர்க்கமாக இருந்த இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சியில் தங்களை இணைத்துக்கொள்ள உண்டாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் சீரமைப்புத் திட்டங்களைக் கொண்டிருந்தன. வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது, தொழியியல் துறைகளில் இனப்பாகுபாட்டைக் குறைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டிருந்தன. ஆனால், அவையாவும் 'பூமிபுத்ராக்களுக்காகவே' நடைமுறைப்படுத்தப்பட்டன். இந்தியர்களுக்கு என 'வழங்கப்பட்ட' வாய்ப்புகள் பெரும்பாலும் பணக்காரர்கள் அல்லது நடுத்தர வர்க்கத்தினருக்கே கிடைத்தது. பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கமாக இருந்த இந்தியர்களின் நிலையில் பெரிய மாற்றம் உருவாகவில்லை. அவர்களது அடிப்படைப் பிரச்னைகளாக பிரப்புப் பத்திரம் இல்லாமை, குடியுரிமை வழங்கப்படாமை, அரசாங்க பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகள், அதில் ஒவ்வொரு ஆண்டும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, சொந்த வீடு இல்லாத நிலை, நில உரிமையற்ற கோயில்கள், குறைந்த சம்பள வேலைகள், கல்வி பயிலும் வாய்ப்புகள், தகுதி இருந்தும் அரசாங்க இலாகாக்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படாமை என பல சூழ்ந்துள்ளன.

இதற்கிடையில் 25/11 சம்பவம் நிகழ்ந்து அதிர்ச்சியலை ஓய்ந்தபாடில்லை.

இம்மாத ஆரம்பத்தில் (பிப்ரவரி,2) பிரதமர் திடீரென்று அறிவிப்பு செய்தார்:
இந்தியர்களுக்கு உதவ திட்டங்கள்:

இந்திய சமுதாயத்தை அரசாங்கம் ஒருபோதும் ஓரம் கட்டாது.

அரசு சேவையில் இந்தியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கவுள்ளோம்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்க உதவி தொடரும்.

இந்தியர்களுக்கு உதவ நான் எப்போதும் தயார்.

தலைவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும்!

விழிப்படைந்த இந்திய சமூகம் மிகக் கூர்மையாக எல்லாவற்றையும் கவனித்து வருகிறது.நாட்டின் 12-வது பொதுத் தேர்தல் வரும் மார்ச்-8இல் நடைபெறும்.

0 comments: