Wednesday, June 24, 2009

அன்பும் நட்பும்



உயிரின் உறைவிடமே அன்பு. அன்பு இல்லாதவர்கள் எலும்பும் தோலும் வெறுமனே போர்த்திக்கொண்டு உலவும் தசைப் பிண்டங்கள் என்கிறார் வள்ளுவ மாமுனிவர்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.( குறள் 80 )

நம் உடலின் 'உள் உறுப்பாகிய' அன்பு என்னும் மின் ஆற்றல் இல்லாமல் வெளி உறுப்புகளாகிய ஐம்பொறிகளால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவப் பெருந்தகை.தொடு உணர்வுக்குத் தோல், சுவையுணர்வுக்கு வாய், நுகருணர்வுக்கு மூக்கு, பார்வைக்குக் கண் மற்றும் கேட்பதற்குச் செவி என ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய 'மனம்' எனும் ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான்.

அன்பு எப்படிப் பட்டதாய் இருக்க வேண்டும்? தேவைக்காகக் காட்டும் அன்பா ? இயல்பாய் மலரும் அன்பா ?

தேவக்காகக் காட்டும் அன்பு, தேவை முடிந்ததும் மறைந்து விடும். உண்மை அன்பு இயல்புகளால் இணைந்தது; ஒத்துப் போவதால் மலர்ந்தது.
தேவைக்காக் காட்டும் அன்பு ஏதோ ஒரு நோக்கத்தைச் சார்ந்தது. காரியம் நிறைவுபெற்றதும் மறையும். உண்மை அன்பு என்பது 'வேண்டுதல் வேண்டாமை இலான் அடி....' என்று திருக்குறள் வெளிக்கொணரும் கடவுள் த‌ன்மையை ஒத்தது.

அத்தகைய உண்மை அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தப்பட்டது.

அன்பின் அருமையை, மனம் உருகி வெளிப்படும் கண்ணீர் ஊரரிய உணர்த்திவிடும். அத்தகைய‌ அன்பை வெறும் தாழ்ப்பாள் இட்டா அடைக்க முடியும் ? அன்பு உடைமை எனும் அதிகாரத்தில் முதற்குறளாக வருகிறது இவ்வாறு...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும். ( குறள் 71 )

உண்மை அன்பு இயல்பாய் மலரும். மலர் பேசும் மொழி உலகறியும். மலரின் தன்மை பருவம் வந்ததும் மலர்வது; அவ்வளவுதான்.
அதை விடுத்து, "ஏன் மலர்ந்தது? எப்போது மலர்ந்த‌து? யாருக்காக மலர்ந்த‌து ? என்ற தர்க்கவாத வினாக்கள் எல்லாம் தேவையில்லாதது.

அதேபோல்தான் உண்மையான அன்பு, அதன் விளைவாய்ப் பிறக்கும் நட்பு கூட இப்படித்தான். உண்மையான நண்பர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. 'இங்குதான் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்' என்ற நினைப்பு மட்டும் இணைக்கும் உறவுப்பாலத்தை! எண்ண அலைகள், உணர்வலைகளாக இருவருக்கிடையே ஓடிக்கொண்டே இருக்கும். ஒத்த‌ சிந்தனை கொண்டவர்களின் எண்ண ஓட்டமும் அத்தகையது.

உண்மை அன்பை உணர்வோம்; அந்த அன்பின் வழி பிறக்கும் உண்மை நண்பர்களை அடையாளம் காண்போம். தன் தேவைகளுக்காக மட்டும் பழகும் போலி நட்புகளைப் புரிந்து கொள்வோம். இயல்பாய்ப் பொங்கும் அன்பே நிலைத்து வாழும்.

Monday, June 22, 2009

தகவல் யுகத்தில் கல்விப் புரட்சி



உலகமயமாயிருக்கும் இன்றைய கணினி யுகத்தில் தமிழ் மின்னாக்கம் பெற்று இன்தமிழ் மின்தமிழாய் இணையத்தில் பவனிவருகின்றது. உலகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வழி துரித வளர்ச்சியைப் பெற்று வரும் இத்தருணத்தில் கல்வித் துறையில் கணினி மற்றும் இணையத்தின் வளர்ச்சியானது பிரமிக்கவைக்கின்றது.


கணினிவழி மொழி கற்பித்தல் கல்வித்துறையில் பல பரிணாமங்களைத் தாண்டி விட்டது. ஒருவர் புதிய பாடமொன்றைக் கற்றுக் கிரகித்தலின் காலம் வழக்கமான கற்றலைவிட கணினி மற்றும் பல்லூடகத்தின் துணை கொண்டு கற்கும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று ஜேம்ஸ் கூளிக் ( 1985,1988 ) எனும் கல்வியாளர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில், கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்லூடகத் துணைக்கருவிகளின் வருகை கல்வியுலகில் விவேகமான கற்றல் கற்பித்தல் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது.


தகவல் தொழில்நுட்பத் துறையை இரு அடிப்படைக் கூறுகளாகப் பகுக்கலாம். ஒன்று அறிவுக்கூறு; மற்றொன்று தொழில்நுட்பக்கூறாகும்.

தொழில்நுட்பக்கூறானது மின்னியல் ஊடகங்களான கணினி, தொலைத்தொடர்பு சாதனம், பல்லூடகத் தகவல் பெறுவழி மற்றும் இதைச்சார்ந்த புதிய தகவல் தொடர்பு நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.


கணப்பொழுதில் செய்தி பரவலாக்கம் என்பது சர்வசாதாரணமாகிவிட்ட இத்தகவல் யுகத்தில் இந்த அதிவிரைவுத் த‌கவல் பரிமாற்றமும் பரவலாக்கமும் புத்தாக்கச்சிந்தனைக்கு வழிவகுக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால், தகவலுக்கும் அறிவிற்கும் தனித் தன்மையை ஏற்படுத்துகின்றது.இந்தத் தகவலும் அறிவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அதன் தொடர்பான பணிகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன.


நுண்ணறிவு (Intelligence) கலந்த மனித அறிவானது(Human Knowledge) சிந்தனையாற்றலை(Thinking Skills முடக்கிவிடும்

வல்லமைபெற்றுள்ளது. இந்த மூன்றின் கலவைதான் தகவல் யுகத்தில், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்போகின்றன.


21ஆம் நூற்றாண்டின் கல்விப் புரட்சிக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் பல்லூடகப் பரவலாக்கமும் பெரும் பங்காற்றிவருகின்றன. தகவல் யுகம் எதிர்பார்க்கும் பண்புகளைக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதே கல்வித்துறையில் பாடத்திட்டதின் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை கல்வியாளர்கள் உண‌ர்ந்திருக்கிறார்கள்.


தகவல் யுகத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கல்வி முறையே இன்று தேவை என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பழைய கல்வி முறையையே பயன்படுத்திவரும் நாடுகள், தகவல் யுகம் கொண்டுவரும் அதிவிரைவு மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் வளர்ச்சி பெறாமல் போய்விடும் அபாயம் உண்டு.


இன்றைய தகவல் யுகத்தில் பயின்றுவரும் மாணவர்கள் பன்மடங்கு அதிகமான தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள், சவால்களையும் எதிர்நோக்குகிறார்கள். இந்நவீன தொழில்நுட்பப் பயன்பாடு விளைபயன்மிக்க மாற்றங்களை, புத்தாக்கச் சிந்தனைகளை மனிதவள மேம்பாட்டிற்கு ஏற்படுத்தவேண்டுமானால், தகவல் யுகத்திற்கான கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Saturday, June 20, 2009

நாள் காட்டியும் கண்ணதாசனும்



நாள்காட்டி கிழிக்கும் போது பாட்டு வருமா?
இன்று வந்ததே.. கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு!
இன்று கண்ணதாசன் பிறந்தநாள். (உண்மையா? )
நாள்காட்டி உபயம் தெரியவந்தது.

தத்துவ ஞானிகளின் கூற்று எப்போதுமே பொய்த்தது இல்லை.அறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பட்ட ஓர் அழகிய ஆடை என்கிறார்கள் வாழ்க்கையை!


இந்த வாழ்க்கைப் பயணத்தில் தடை நேர்கிறது என்றால்....அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் 'தொழில்நுட்பச் சிக்கல்' ஏற்பட்டுள்ளது என்று தெளிவு பெறுங்கள் என்கிறார்கள்.


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் விளங்காத விசயங்கள் கூட‌ எளிதாகப் புரிந்துவிடும்.


உணர்ச்சிசார்ந்த சிக்கல்களுக்குக் கொஞ்சம் அறிவைக் கலந்தால் சரியாகிவிடும்; அறிவு சார்ந்த சிக்கல்களுக்குக் கொஞ்சம் உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.

கவியரசு கண்ணதாசன் பாடல்களிலும் இந்தச் சூட்சுமம் நிறைந்துள்ளது.

80களில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் என்று சொல்லத் தெரியாமல் எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று நண்பர்களுடன் அரட்டையடித்த காலங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

அது ஒரு கானாக் காலம்....

வாழ்க்கை பற்றிய பயமறியா விடலைப் பருவம்.உண்மையிலேயே வாழ்க்கையென்றால் என்னவென்று தெரியாது ...ஆனாலும் ஏதோ தெரிந்தது போல் காட்டிக் கொள்வதற்கு துணைகொடுத்தது கண்ணதாசன் பாடல்கள்தான்.
அப்படி அடிக்கடி அசைபோட்ட பாடல் இதுதான்...

வாழ்க்கையே அலைபோலே.....
நாமெல்லாம் அதன்மேலே...
ஓடம்போலே ஆடிடுவோமே......வாழ்நாளிலே...

சும்மா நையாண்டி செவதாக எண்ணிக்கொண்டு பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

போனால் போகட்டும் போடா..
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..
போனால் போகட்டும் போடா...!

ஆனாலும் உற்சாகம் குறையாமல் சுதந்திர மனப்பான்மையுடன் இரம்மியமாய்ப் பாடிய‌ பாடலும் உண்டு.


காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!

சில சம்யங்களில் சோகம் கப்பிப் கொண்டு சோம்பி இருக்கும் போது ஒருகணத்தில் மனசு அதுபாட்டுக்கு நம்பிக்கையூட்டும் பாட்டைத் தட்டி விடும்....

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

அண்மைக் காலத்தில் மக்களின் மனதில் நம்பிக்கையூட்டி பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒரு கலக்கு கலக்கிய பாட்டு உண்டென்றால் அது "ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடல்தான். இப்பாடல் கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா" பாடலை ஒத்தது; ஒரு வகை தொடர்ச்சி என்று கூட சொல்லலாம்.

புதிய பாடல்களின் வரிகள் பெரும்பாலானவை அவ்வளவு விரைவில் மனதில் தங்காது.( புதிய பாடல் அபிமானிகள் பொறுத்துக் கொள்ளவும் ) ஆனால் கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தைக் கடந்து நினைவில் நிற்கிறது.

இன்னொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால்...அதன் இசையும் மனசின் இன்னொரு 'ட்ரெக்'கில் ஓடிக்கொண்டிருக்கும்.

இப்படித்தான் இன்று விட்டு விட்டு கண்ணதாசன் பாடல்கள் 'ஹம்மிங்' செய்து கொண்டிருக்கையில் புதிய‌பாடல் ஒன்றும் 'க்ரொஸ் ட்ரெக்' செய்தது....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

காலத்தைக் கடந்து வாழும் கண்ணதாசன் புகழ் புதிய படாலாசிரியர்களையும் விட்டு வைக்க வில்லை போலும்.

பி.கு: நாள்காட்டியில் அச்சுப்பிழையா? ஏனெனில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24 என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். எது எப்படி இருப்பினும், வாழ்க அவரது புகழ்!
*வாழ்க்கை நெருக்கடிகளைக் குறைக்க இலக்கியமும் இசையும் கூட துணைபுரிகின்றது.

Tuesday, June 16, 2009

ஆசிரியம் - கல்வியியல் புத்தக வெளியீடு


கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 14.06.2009 )மாலை 5.00க்கு மலேசியா, கோலாலம்பூரிலுள்ள துன் சம்பந்தன் கட்ட‌டத்தின் 'சோமா' அரங்கில் 'மலேசியாவில் தமிழ்க் கல்வியும் கற்றல் கற்பித்தலும்' எனும் கருப்பொருளுடன் அடங்கிய கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான 'ஆசிரியம்' வெளியீடு கண்டது.

இந்நூலின் ஆசிரியர் சுல்தான் ட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ஆவார்.

த‌‌மிழ்ப்ப‌ள்ளியில் த‌ன்னுடைய‌ ஆர‌ம்ப‌க் க‌ல்வியை தொட‌ங்கிய‌தாலும், தமிழாசிரிய‌ராக‌ப் ப‌யிற்சிப் பெற்றுப் ப‌ணியாற்றிய‌வ‌ர் என்ற‌ நிலையிலும், ஆய்வு நிலையில் நூலாசிரியர் தொகுத்த‌ க‌ட்டுரைக‌ள் யாவும் ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ருக்கும் ப‌ய‌ன‌ளிக்கும் வ‌கையில் அமைந்துள்ள‌து.

க‌‌ட‌ந்த‌ 1992ஆம் ஆண்டு முத‌ல் ப‌ல்வேறு மாநாடுக‌ளில் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளும், சிற‌ப்பு நிக‌ழ்வுக‌ளுக்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளும் ம‌ற்றும் ம‌லேசியாவில் த‌மிழ்க்க‌ல்வி க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌ல் தொட‌ர்பான‌ ப‌ல்வேறு வ‌ர‌லாற்றுச் சான்றுக‌ள் அட‌ங்கிய‌ நூல் 'ஆசிரியம்'. மலேசியத் தமிழ்க் கல்வியியலில் முதல் தமிழ் நூல் என்றுகூட‌ குறிப்பிட‌லாம்.
நீண்ட‌ வ‌ர‌லாற்றினைக் கொண்ட‌ ம‌லேசிய‌த் த‌மிழ்க் க‌ல்வி ம‌ற்றும் க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌ல் ப‌ற்றிய‌ வ‌ள‌ர்ச்சியினை, ச‌வால்க‌ளை, செல்நெறிக‌ளை ஆசிரிய‌ர் ப‌ட‌ம் பிடித்துக் காட்டியுள்ளார். இம்முய‌ற்சிம‌லேசியா ம‌ற்றும் இத‌ர‌ நாடுக‌ளிலுள்ள‌ த‌மிழ் ஆய்வாள‌ர்க‌ளின் வ‌ர‌வேற்பைப் பெறும் என்று நம்புகிறார், இணைப் பேராசிரிய‌ர் முனைவ‌ர் என்.எஸ்.இராஜேந்திர‌ன் அவ‌ர்க‌ள்.
உமா பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலை ம‌லேசிய‌ அமைச்ச‌ர் டாக்ட‌ர் சுப்ர‌ம‌ணிய‌ம் அவ‌ர்க‌ள் வெளியீடு செய்தார்.