Thursday, February 28, 2008

25/11 ஓர் அலசல்

அன்றைய மாபெரும் பேரணியில் பங்கு பெற்றவர்கள் மாண்புக்கு உரியவர்கள். மலேசியா சரித்திரத்திலேயே சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் சுமார் 50 ஆயிரம் பேர் தலைநகர் கோலாலம்பூரில் அரசின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 'ஒற்றுமையாக' அணி திரண்டனர். உண்மையிலேயே, நாட்டின் முழுக்
கவனத்தையும் ஈர்த்த 'மக்கள் சக்தியின்' எழுச்சிப் பேரணி மலேசிய அரசை
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

24/11 வரை இந்தியர்கள் ஒற்றுமை குலைந்தவர்கள் என்று கருதப்பட்டார்கள். ஆனால், தம் உரிமைக்காக எத்தகைய சோதனையையும்
தாங்கக்கூடியவர்கள் என்று உணர்த்தினர் இந்தியர்கள்!

ஓர் இலட்சம் இந்தியர்களின் கையெழுத்தைத் தாங்கிய மகஜரை 25.11.2007இல் அம்பாங் தெருவில் பிரிட்டிஷ் தூதரகத்திடம் இந்தியர்கள் மாபெரும்
பேரணியாகச் சென்று வழங்குவது எனத் தீர்மாணிக்கப்பட்டது. அதற்கான போசீசாரின் அனுமதி கோரி இண்ராப்பின் தலைவர்கள் மனு செய்திருந்தனர்.
அம்மனு போலீசாரால் நிராகரிக்கப்பட்டதுடன், மேலும் இண்ராப்பின் தலைவர்கள் பேரணியில் கலந்துகொண்டு பிரிட்டிஷ் தூதரகத்தின் முன்
தோன்றுவதைத் தடுப்பதற்காக வழக்குமன்றத்தின் தடையுத்தரவும் பெறப்பட்டது. அவ்வுத்தரவை மீறுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டது. அத்தகைய பேரணி சட்ட விரோதமானது என்று ஊடகங்களின் வழி அதிகப்பட்ச நினைவூட்டல் வேறு.

இந்தியர்களை பயமுறுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உச்சக்கட்ட 'நட(வ/வே)டிக்கை' என்ன வென்றால், பிரிட்டிஷ் தூதரகத்தைச்
சுற்றி சுமார் 4 கி.மீ தூரத்திற்குப் போலீஸ் வளையம் உருவாக்கப்பட்டது. தலைநகரின் பல இடங்களில் சாலை தடுப்புகள் போடப்பட்டன. தெற்கே
ஜொகூரிலிந்தும் வடக்கே கடாரத்திலிருந்தும் நம் மக்கள் பேருந்து, சொந்த வாகனம் கொண்டு பேரணியில் கலந்துகொள்ள வரும் வழியில் எத்தனை
எத்தனை முடுக்கட்டைகள், தடங்கல்கள். வேண்டுமென்றே சாலைத் தடுப்பு உருவாக்கி, சாலையில் வாகன நெரிசலை ஏற்படுத்தி நயவஞ்சக
நாடகமாடியது காவல்துறை. நெடுஞ்ச்சாலையில் முதல்நாள் இரவு பயணித்த பேருந்தை நிறுத்தி, குறிப்பாக இந்தியர்களை கீழிறங்கச்சொல்லி
அவர்களது அடையாள அட்டை எண் குறிப்பெடுக்கப்பட்டது. நவம்பர் 25, 2007 விடிந்தது. தடையுத்தரவுகள், சாலைத் தடுப்புகள், கண்ணீர்ப்புகைகள், இரசாயணம் கலந்த தண்ணீர் வீச்சுகள் ஆகிய எல்லாவற்றையும் மீறி, அரசின் ஆணைகளைத் துச்சமாக எண்ணி இண்ட்ராப்பின் நியாயமான கோரிக்கையை ஏற்று பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அம்பாங் தெருவை ஆட்கொண்டனர்.

அன்று அரசாங்கத்தின் 'வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைத்தது'. சீனர்களின் புருவத்தை உயர்த்தியது. ம.இ.கா- மலேசிய இந்தியர் காங்கிரஸ்
தலைத்துவத்தின் தலை உச்சியின் ( ஒட்டவைத்த/ நட்டுவைத்த )சிண்டைப்பிடித்து ஆட்டவைத்திருக்கிறது.
இது எதிர் கட்சியினரின் சதி நாடகம். நாட்டின் நிலைத்தன்மையை குலைக்க திட்டம்தீட்டியுள்ளனர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அறிக்கைகளில்
வெளிப்பட்டன.

ஒரே நாட்டிலிருந்து கொண்டு சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்துவிட்டு, பெறும்பான்மையினர்க்குச் சிறப்புச் சலுகைகள் சர்வ சாராரணமாக
நடைமுறையாக்கப்பட்டதன் விழைவே மூலக்காரணம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரிகள்தாம். நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களிடமிருந்தும்
வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், வரியிலிருந்து மேம்பாட்டுத் திட்டங்களில் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகவல்லவா வழங்கப்பட்டிருக்க
வேண்டும்? கடந்த 50 ஆண்டுகளாக மலாய்ச் சமூகத்திற்கு சிறப்புச் சலுகைகள் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது.
சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் இதைத்தான் கேட்டார்கள், கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். உதாரணத்திற்கு:

எல்லாத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் முழு மானியம் இல்லை.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலருக்குப் பல்கலைக்கழகத்தில் இடமில்லை.
அரசாங்கத்தில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு பதவி உயர்வு சாத்தியமில்லை.
அரசாங்கக் குத்தகைகளில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பே இல்லை.
அரசாங்கத்தின் அக்கறையின்மை. இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சி தலைமைப் பொறுப்பாளர்களின் சுயநலத்தன்மை, சமுதாய அக்கறையின்மை எல்லமும்தான்.
கோயில்கள் உடைக்கப்படும்போது இந்தியர்களின் உணர்வுகளுகக்கு மதிப்பளிக்காது வளர்ச்சித்திட்டம் எனும் காரணத்தை முதன்மைப்படுத்துவது. இது போன்ற பல்வேறு சூழல்களை மலேசிய இந்தியர்கள் சந்தித்து வருவது அப்பட்டமான உண்மை.
நாடு 50 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தியர்கள் இரண்டாம்தர குடிமக்கள் எனும் உணர்வே நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது.

மலேசிய இந்தியர்கள் இனப் பாகுபாட்டின் வழி ஓரங்கட்டப்படுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.