அடடே....இவரும் சிறுகதை எழுத வந்துவிட்டாரே.....என்று எண்ணிவிடாதீர்கள்!
இச்சிறுகதை என் நண்பர், தமிழ் ஆர்வலர் திரு. பால.இளங்கோவன் என்பவரின் கன்னி முயற்சி. அவருக்கு ஆதரவு தரவேண்டும் என்ற எண்ணத்தாலும், அவர் மேலும் எழுதுவதற்கு இந்த வலைப்பு ஊடகம் உத்வேகத்தை வழங்கும் என்ற சிந்தனையாலுமே இந்த முயற்சி.
குறிப்பு: இச்சிறுகதை அவர் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
========================================================
"நினைவுகள்"- சிறுகதை - ஆக்கம் : பால. இளங்கோவன்( குளுவாங்,ஜொகூர், மலேசியா.)
========================================================
சூரியனின் முதல் கீற்று பூமியில் விழுவதற்கு இன்னும் ஏறக்குறைய மூன்று மணிநேரம் இருக்கும் இரவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தன் கண்சிமிட்டும் பணியை சரியாகவே செய்து கொண்டுருக்கும், நட்சத்திர குவியல்களின் ராஜாங்க வேலை அது. மொத்தத்தில், பூமி இன்னும் தன் இரவு உறக்கத்திலிருந்து கண்விழிக்காத நிசப்த அதிகாலை நேரம். நிதர்சனமான நிசப்தத்தைச் சப்தமாக்கிக்கொண்டு இரயில் தனது பயணத்தை தெற்கிலிருந்து வடக்கே கோலாலம்பூர் மாநகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
கிம்மாஸ்(Gemas) இரயில் நிலையத்தில் இருந்து அதிகாலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த இரயில், ஜொகூரை நோக்கி தன் பயணத்தில் ஈடுபட்டிருந்த இன்னொரு இரயிலுக்கு முதல் வழிவிடும் பொருட்டு கிம்மாஸுக்கு அடுத்து உள்ள ஆயிர் கூனிங் (Air Kuning) என்னும் இடத்தில் நின்றது. வழக்கமாக எந்த விரைவு இரயிலும் அங்கு நிற்பது கிடையாது. ஆனால் தவிர்க்க இயலாத நிலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரயில் அங்கே நிற்கும், எப்போதாவது. இன்றும் அவ்வாறே நின்றது. புறப்பட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இரயில் நின்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளிலும் இரவுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்த சில விழிகள் ஆங்காங்கு எழுந்து விடியல் இருட்டில் விழிகொண்டு ஊடிருவிக் கொண்டிருந்தன. சில மணித்துளிகளுக்குள், இரவு பயணத்திற்கு பொறுப்பு வகித்த பயண நிலைய அதிகாரி, இரயில் நின்றதற்கான காரணத்தை நடந்து கொண்டே பயணிகளுக்குத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக கடந்து கொண்டிருந்தார்.
சங்க காலத்து இலக்கியங்களில், முரசொலி கேட்டு, புஜம் உயர்த்தி போருக்குக்கெழும் வீரனைப்போல், அதிகாலை நிசப்தத்தை, சத்தமாக்கிய அதிகாரியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான், சங்கர். அதுவரை இருந்த அவனது ஆனந்த உறக்கம் அறுந்து விழுந்தது. இருந்தபோதும், அதிகாலை வேளையல்லவா, அக்னிக் குஞ்சின், அக்னி ஓமம் இன்னும் ஆரம்பிக்காத அமைதியான வேளை. கண்விழித்த சங்கர் மனமெங்கும், ஓர் ஆனந்தம்..மெல்லியதாய் படர்ந்து வியாபித்திருந்தது. அந்த இரவு இரயில் பயணத்தில் தற்காலிகத் தடையை முன்னிட்டு, தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்து இரயில் பெட்டியின் கதவருகே வந்த சங்கர் பெட்டியின் கதவைத் திறந்தான். அதிகாலை சில்லென்று வீசிய குளிர்காற்று அவனது மிச்சம் மீதி இருந்த உறக்கத்தையும், அவனது உள்ளத்து சோர்வையும் வாரி எடுத்துச் சென்றது. பூமியில் புதிதாய் பிறந்த குழந்தை போல் ஆனது அவனது மனம், இரயில் பெட்டியில் இரு படிகளைத் தாண்டி இரயில் நிலையத்திற்கும், இரயில் வண்டிக்கும் இடையில் நடைபாதையில் கால் பதித்தான் சங்கர்.
தொடர்ந்து வீசிக் கொண்டிருந்த சில்லென்ற தென்றலில் முழுமையாகக் குளிர்ந்தான் சங்கர். உறக்கம் கலைந்ததும், அவனுக்கு நாவரட்சி ஏற்பட்டது. இரயில் நிலையத்தில் அப்படியொன்றும் இரவு நேரத்து டீ, காப்பிக் கடை இருப்பதற்கான சுவடுகள் எதுவுமே இல்லாமல் இருள் சூழ்ந்திருந்தது.
சுற்றும் முற்றும் மீண்டும் தன் பார்வையை அகலமாக்கினான். மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில், ஒரு வீடு, அந்த வீட்டில் ஆள் புலங்குவதற்கான அறிகுறிகள் இருப்பதை, இரவும் விடியலும் ஒன்றாக நலம் விசாரித்துக் கொள்ளும் அந்த அதிகாலை நேரத்தில் கண்டான். காலம் தாழ்த்தாமல் தன் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த வீடு நோக்கி நடந்தான், சங்கர். வீட்டுக் கதவைத் தட்டினான், ஹலோ! என்ற வார்த்தையுடன். யாரும் கதவைத்திறந்ததாக இல்லை. ஒரு வினாடி மௌனித்து மீண்டும் தட்டினான். அப்பொழுது யாரும் கதவைத் திறக்கவில்லை.
வாசலில் இருந்து பின்வாங்கினான். வீட்டின் பின்புறம் அந்த அதிகாலை........ ( தொடரும் )
3 comments:
குறிப்பு: இச்சிறுகதையின் ஆக்கம் திரு.பால. இளங்கோவன்.
தமிழ் அயயாவுக்கு வணக்கம்
உங்கள் நன்பனின் சிறுகதை
மிகவும் நன்றாக வளர
தமிழனின் வாழ்த்த்துக்கள்
இவண்- சென்னை குரல்
சென்னை குரலோனுக்கு நன்றி!
Post a Comment