Friday, February 29, 2008

கவிதை....இடைநிலை பள்ளியில் நம்மாணவர் நிலை!

இடைநிலைப் பள்ளியில் நம் இந்திய மாணவர்களில் சிலர் அடாவடித் தனமாக இருப்பதாகவும், ஆசிரியர்களை மதிக்காமல் சேட்டைகள் புரிபவர்களாகவும் இருப்பதை முன்பு கேட்டிருக்கின்றேன். தற்போது நேரடியாகப் பார்த்தும் வருகின்றேன். எல்லா மாணவர்களும் இப்படி இல்லை என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் பிரச்னையை எதிர்நோக்குகிறார்கள். விடலைப் பருவ மாணவர்களிடம் தமிழாசிரியர்கள் படும் பாட்டை.......எங்களூர் இளங்கவிஞர் - தமிழ்போதிக்கும் ஆசிரியர் - திரு.வாஞ்சிதேவன் சோமசன்மா தம் ஆதங்கத்தை கவிதையாய் வடித்துள்ளார்.


அக்கவிதையை உங்களுக்காக.....இதோ:
====================================
வீணாகும் மாணாக்கர்.

சிறகடிச்சிப் பறக்கமட்டும் துடிக்கிறீங்க - ஆனா
சிந்தனையை முடுக்கிவிட மறுக்குறீங்க !
அரட்டையிலும் ஆட்டத்திலும் கிடக்குறீங்க - நீங்க
சிரத்தைவச்சா பள்ளியில படிக்குறீங்க ?


திரைப்படத்தை நடைமுறையா நெனக்குறீங்க - கருத்தைச்
சிதறடிச்சு காதலுன்னு கொணிக்குறீங்க!
மறைகழன்ற மனுசனைப்போல் உடுத்துறீங்க - கையில்
மட்டையோடு அடிதடின்னு படுத்துறீங்க !


கதையளக்க வாயைநல்லா பிளக்குறீங்க - பிறர்
கரைசேர வாய்ப்பிழந்து தவிக்குறீங்க !
உதைபட்டும் வதைபட்டும் சிரிக்குறீங்க - மான
உணர்வற்றுப் பிழைபட்டுச் சறுக்குறீங்க !


தலைமுறைக்கே தலைகுனிவாய் இருக்குறீங்க - தவற்றை
சுட்டிக்காட்டும் தரப்பினரை வெறுக்குறீங்க !
பிழைபொறுத்தா தலையிலேறிக் குதிக்குறீங்க - பாவம்
பெத்தவங்க கனவிலேறி மிதிக்குறீங்க !


படிக்கிறப்ப திறமையுடன் உயர்ந்திடுங்க - அறிவு
படைச்சவர்க்கே தலைவணங்கும் உலகிதுங்க !
முடிவுபண்ணி அடாவடியை நிறுத்திடுங்க - நெனப்பை
முழுசாகக் கல்வியின்பால் செலுத்திடுங்க !

ஆக்கம் : கவிஞர் வாஞ்சிதேவன்,சோமசன்மா.

குறிப்பு: நாடறிந்த தலைசிறந்த கவியரசு சோமசன்மா அவர்களின் புதல்வர் ஆசிரியர் திரு. வாஞ்சிதேவன் அவர்கள். தற்போது குளுவாங்கில், இடைநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தீர்ந்தபாடில்லை!


மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னை என்றுதான் தீருமோ ? என்று ஆங்காங்கே மக்கள் வேதனையுடன் புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு
ஆண்டும் பள்ளித் தவனை தொடங்கும் போது இப்பிரச்னை குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. வருடம் தொடங்கி
இன்றோடு இரண்டாம் மாதம் முடிகிறது. ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் குறைந்தது 350இல் இருந்து 400வரைக்குமான ஆசிரியர்கள் நிரபப்பட

வேண்டும் என்ற தேவை நேர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது; வேதனையளிக்கிறது.

ஏன் தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் இந்த நிலை. தேசிய பள்ளிகளில் தேவைக்கும் அதிகமாகவே காணப்படுகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பலமுறை மாவட்டக் கல்வி இலாக்காவிடம் தெரியப்படுத்தியும் இந்த நிலை ஏற்படுகின்றது என்றால் யாரைக் குறைச் சொல்வது? ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கும் இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைத்தானே காட்டுகிறது ?கல்வி வல்லுநர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பிரச்னை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாநில கல்வி இலாக்கா, தேசிய கல்விப் பிரிவு இலாக்கா மற்றும் கல்வி அமைச்சு உடனடியாக பிரச்னைக்குத் தீர்வு காண
வேண்டும் என்பதுதான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

இப்பிரச்னையை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்திற்கு புகார்கள் கிடைத்த வண்ணம் இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் லோக் இம் பெங்
அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தங்கு தடையின்றி நடைபெறவும், தமிழ் மாணவர்களின் பாடத் திட்டங்களும் இதர புறப்பாட
நடவடிக்கைகளும் எவ்வித சுணக்கமும் இன்றி நடைபெற இந்த ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

அரசாங்கம் - கல்வி அமைச்சின் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன. 2006-2010 வரையிலான நாட்டின் கல்விப் பெருந்திட்டத்தின் வழி, நாட்டிலுள்ள ஆரம்பப் பள்ளிகள் அது தேசியப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, தமிழ்-சீனப் பள்லிகளாக இருந்தாலும் சரி அல்லது சமயப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, அவற்றின் அடைப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாவிடில், நோக்கம் நிறைவேறாது. மற்ற பள்ளிகளில் மட்டும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி விட்டு, தமிழ்ப்பள்ளிகளைக் கண்டும் காணாமல் இருந்தால், மாணவர்களுக்கு இழைக்கும் துரோகம்; இனத்தை இம்சிக்கும் நயவஞ்சகம். அரசாங்கம் இனியும், தமிழ்ப்பளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யதான் இந்தியர்களின் 'கட்சி' இருக்கிறதே - கேட்கும் போதெல்லாம் வாரி வழங்கியிருக்கிறோமே என்று பொறுப்பை பிறர் மீது தினித்தால்......என்னத்தச் சொல்வது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே......நேற்று இந்தியர்களைப் பிரதிந்திக்கும் ஒரே கட்சிக்கு வாழ்நாள் தலைவரின் கூற்று அவமானத்திற்குரியது.
"கடவுள், தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்ல கூலி கொப்பார்! " எனும் தோரணையில் வசைப்பாடுகிறார். கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜொகூர் மாநிலத்தில் 5
ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி ஒன்றில் இடப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் பெற்றோர்கள் "சாகும் வரை உண்ணாவிரதம் "- அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டித் தர வேண்டும்!" என்று அறிக்கைவிட்ட பின்னர், அரசாங்கம் 'கட்டித் தருகிறோம்' என்று எப்படியோ அந்த
போராட்டத்தை கைவிட வியூகம் அமைத்தனர். எவ்வளவு காலம்தான் மக்கள் பொறுத்திருப்பர் ?

ஒரு பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் தேவை. அதன் மூலமே நிறைவான கல்வியை அங்கு உறுதி செய்ய முடியும் எனும் அடிப்படை விசயத்தைக்
கூடவா அறியாமல் இருப்பார்கள்? கல்வி இலாக்காவில் முக்கியப் பொறுப்பளர்களுக்கு இதைவிட வேறு வேலைகள் முக்கியமாகப் படுகின்றதோ?
தமிழ்ப்பள்ளியில் படிப்பவர்களும் 'மலேசிய' மாணவர்கள்தான்.

Thursday, February 28, 2008

12வது பொதுத் தேர்தல் - மார்ச், 8.

நாடு சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல்லின மக்களும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை ஆணித்தரமாக உலகிற்கு எடுத்துரைக்கும் கௌரவத்தைப் பெற்றுள்ளது. 1957ஆம் ஆண்டு தனிநபர் வருமனம் RM 800க்கும் குறைவாகவே இருந்தது.தற்போது RM 40,000 எட்டியுள்ளது. அதே காலக்கட்டத்தில் நாட்டின் பட்டுவாடா மதிப்பு (GDP) RM 500 கோடியிலிருந்து RM 90,000 கொடியாக உயர்ந்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 63 இலட்சமாக இருந்த மலேசிய மக்கட்தொகை, இன்று 2.6 கோடியாக வளர்ந்துள்ளது. இதில் 7 இலட்சமாக இருந்த இந்தியர்கள் இன்று 20 இலட்சமாகக் கூடியுள்ளனர். இருப்பினும் விழுக்காட்டு வளர்ச்சியில் 11.3 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

பொருளாதாரத்துறை என்றில்லை, பல்வேறு துறைகளில் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. நியாயமாக, இந்த வளர்ச்சியில் அனைத்துத் தரப்பினர்க்கும் பங்குண்டு. இன பாகுபாடு அற்ற நிலையில், நாட்டின் நிலைத்தன்மையைத் தாரக மந்திரமாகக் கொண்டு, முன்பு கூட்டணியாக இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் மலேசியாவை ஆட்சி செய்யும் பொறுப்பை உண்டாக்கிக் கொண்டது.

1957 முதல் இன்றுவரை 11 பொதுத்தேர்தல்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி வெற்றிபெற இந்தியர்கள் தங்களின் வற்றாத ஆதரவையும் பெரும்பான்மையான வாக்குகளையும் அளித்து, இந்தியர்களே இந்நாட்டின் முன்னணி விசுவாசி என்ற முத்திரையையும் பெற்றுள்ளனர்.
இந்நிலை வரும் 12வது பொதுத் தேர்தலில் நீடிக்குமா ? அதிருப்தியும் விரக்தியும் அடைந்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் தொடர்ந்து தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்களா ? எதிர்கட்சியினர் இந்தியர்களின் வாக்குகள் பெற மிகத் தீவிரமாக பிரச்சாரங்களை முடக்கியுள்ளது. தேசிய முன்னணியில் முக்கிய( இந்திய ) பங்காளிக் கட்சியான ம.இ.காவுக்கு பிளவுபடாத ஆதரவை நல்குமா ?

அமைதியான, அடக்கமான, அரசாங்கத்திற்கு கட்டுப்பட்ட, பெரும்பான்மையில் உழைக்கும் வர்க்கமாக இருந்த இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சியில் தங்களை இணைத்துக்கொள்ள உண்டாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் சீரமைப்புத் திட்டங்களைக் கொண்டிருந்தன. வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது, தொழியியல் துறைகளில் இனப்பாகுபாட்டைக் குறைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டிருந்தன. ஆனால், அவையாவும் 'பூமிபுத்ராக்களுக்காகவே' நடைமுறைப்படுத்தப்பட்டன். இந்தியர்களுக்கு என 'வழங்கப்பட்ட' வாய்ப்புகள் பெரும்பாலும் பணக்காரர்கள் அல்லது நடுத்தர வர்க்கத்தினருக்கே கிடைத்தது. பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கமாக இருந்த இந்தியர்களின் நிலையில் பெரிய மாற்றம் உருவாகவில்லை. அவர்களது அடிப்படைப் பிரச்னைகளாக பிரப்புப் பத்திரம் இல்லாமை, குடியுரிமை வழங்கப்படாமை, அரசாங்க பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகள், அதில் ஒவ்வொரு ஆண்டும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, சொந்த வீடு இல்லாத நிலை, நில உரிமையற்ற கோயில்கள், குறைந்த சம்பள வேலைகள், கல்வி பயிலும் வாய்ப்புகள், தகுதி இருந்தும் அரசாங்க இலாகாக்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படாமை என பல சூழ்ந்துள்ளன.

இதற்கிடையில் 25/11 சம்பவம் நிகழ்ந்து அதிர்ச்சியலை ஓய்ந்தபாடில்லை.

இம்மாத ஆரம்பத்தில் (பிப்ரவரி,2) பிரதமர் திடீரென்று அறிவிப்பு செய்தார்:
இந்தியர்களுக்கு உதவ திட்டங்கள்:

இந்திய சமுதாயத்தை அரசாங்கம் ஒருபோதும் ஓரம் கட்டாது.

அரசு சேவையில் இந்தியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கவுள்ளோம்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்க உதவி தொடரும்.

இந்தியர்களுக்கு உதவ நான் எப்போதும் தயார்.

தலைவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும்!

விழிப்படைந்த இந்திய சமூகம் மிகக் கூர்மையாக எல்லாவற்றையும் கவனித்து வருகிறது.நாட்டின் 12-வது பொதுத் தேர்தல் வரும் மார்ச்-8இல் நடைபெறும்.

25/11 ஓர் அலசல்

அன்றைய மாபெரும் பேரணியில் பங்கு பெற்றவர்கள் மாண்புக்கு உரியவர்கள். மலேசியா சரித்திரத்திலேயே சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் சுமார் 50 ஆயிரம் பேர் தலைநகர் கோலாலம்பூரில் அரசின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 'ஒற்றுமையாக' அணி திரண்டனர். உண்மையிலேயே, நாட்டின் முழுக்
கவனத்தையும் ஈர்த்த 'மக்கள் சக்தியின்' எழுச்சிப் பேரணி மலேசிய அரசை
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

24/11 வரை இந்தியர்கள் ஒற்றுமை குலைந்தவர்கள் என்று கருதப்பட்டார்கள். ஆனால், தம் உரிமைக்காக எத்தகைய சோதனையையும்
தாங்கக்கூடியவர்கள் என்று உணர்த்தினர் இந்தியர்கள்!

ஓர் இலட்சம் இந்தியர்களின் கையெழுத்தைத் தாங்கிய மகஜரை 25.11.2007இல் அம்பாங் தெருவில் பிரிட்டிஷ் தூதரகத்திடம் இந்தியர்கள் மாபெரும்
பேரணியாகச் சென்று வழங்குவது எனத் தீர்மாணிக்கப்பட்டது. அதற்கான போசீசாரின் அனுமதி கோரி இண்ராப்பின் தலைவர்கள் மனு செய்திருந்தனர்.
அம்மனு போலீசாரால் நிராகரிக்கப்பட்டதுடன், மேலும் இண்ராப்பின் தலைவர்கள் பேரணியில் கலந்துகொண்டு பிரிட்டிஷ் தூதரகத்தின் முன்
தோன்றுவதைத் தடுப்பதற்காக வழக்குமன்றத்தின் தடையுத்தரவும் பெறப்பட்டது. அவ்வுத்தரவை மீறுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டது. அத்தகைய பேரணி சட்ட விரோதமானது என்று ஊடகங்களின் வழி அதிகப்பட்ச நினைவூட்டல் வேறு.

இந்தியர்களை பயமுறுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உச்சக்கட்ட 'நட(வ/வே)டிக்கை' என்ன வென்றால், பிரிட்டிஷ் தூதரகத்தைச்
சுற்றி சுமார் 4 கி.மீ தூரத்திற்குப் போலீஸ் வளையம் உருவாக்கப்பட்டது. தலைநகரின் பல இடங்களில் சாலை தடுப்புகள் போடப்பட்டன. தெற்கே
ஜொகூரிலிந்தும் வடக்கே கடாரத்திலிருந்தும் நம் மக்கள் பேருந்து, சொந்த வாகனம் கொண்டு பேரணியில் கலந்துகொள்ள வரும் வழியில் எத்தனை
எத்தனை முடுக்கட்டைகள், தடங்கல்கள். வேண்டுமென்றே சாலைத் தடுப்பு உருவாக்கி, சாலையில் வாகன நெரிசலை ஏற்படுத்தி நயவஞ்சக
நாடகமாடியது காவல்துறை. நெடுஞ்ச்சாலையில் முதல்நாள் இரவு பயணித்த பேருந்தை நிறுத்தி, குறிப்பாக இந்தியர்களை கீழிறங்கச்சொல்லி
அவர்களது அடையாள அட்டை எண் குறிப்பெடுக்கப்பட்டது. நவம்பர் 25, 2007 விடிந்தது. தடையுத்தரவுகள், சாலைத் தடுப்புகள், கண்ணீர்ப்புகைகள், இரசாயணம் கலந்த தண்ணீர் வீச்சுகள் ஆகிய எல்லாவற்றையும் மீறி, அரசின் ஆணைகளைத் துச்சமாக எண்ணி இண்ட்ராப்பின் நியாயமான கோரிக்கையை ஏற்று பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அம்பாங் தெருவை ஆட்கொண்டனர்.

அன்று அரசாங்கத்தின் 'வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைத்தது'. சீனர்களின் புருவத்தை உயர்த்தியது. ம.இ.கா- மலேசிய இந்தியர் காங்கிரஸ்
தலைத்துவத்தின் தலை உச்சியின் ( ஒட்டவைத்த/ நட்டுவைத்த )சிண்டைப்பிடித்து ஆட்டவைத்திருக்கிறது.
இது எதிர் கட்சியினரின் சதி நாடகம். நாட்டின் நிலைத்தன்மையை குலைக்க திட்டம்தீட்டியுள்ளனர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அறிக்கைகளில்
வெளிப்பட்டன.

ஒரே நாட்டிலிருந்து கொண்டு சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்துவிட்டு, பெறும்பான்மையினர்க்குச் சிறப்புச் சலுகைகள் சர்வ சாராரணமாக
நடைமுறையாக்கப்பட்டதன் விழைவே மூலக்காரணம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரிகள்தாம். நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களிடமிருந்தும்
வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், வரியிலிருந்து மேம்பாட்டுத் திட்டங்களில் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகவல்லவா வழங்கப்பட்டிருக்க
வேண்டும்? கடந்த 50 ஆண்டுகளாக மலாய்ச் சமூகத்திற்கு சிறப்புச் சலுகைகள் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது.
சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் இதைத்தான் கேட்டார்கள், கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். உதாரணத்திற்கு:

எல்லாத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் முழு மானியம் இல்லை.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலருக்குப் பல்கலைக்கழகத்தில் இடமில்லை.
அரசாங்கத்தில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு பதவி உயர்வு சாத்தியமில்லை.
அரசாங்கக் குத்தகைகளில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பே இல்லை.
அரசாங்கத்தின் அக்கறையின்மை. இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சி தலைமைப் பொறுப்பாளர்களின் சுயநலத்தன்மை, சமுதாய அக்கறையின்மை எல்லமும்தான்.
கோயில்கள் உடைக்கப்படும்போது இந்தியர்களின் உணர்வுகளுகக்கு மதிப்பளிக்காது வளர்ச்சித்திட்டம் எனும் காரணத்தை முதன்மைப்படுத்துவது. இது போன்ற பல்வேறு சூழல்களை மலேசிய இந்தியர்கள் சந்தித்து வருவது அப்பட்டமான உண்மை.
நாடு 50 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தியர்கள் இரண்டாம்தர குடிமக்கள் எனும் உணர்வே நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது.

மலேசிய இந்தியர்கள் இனப் பாகுபாட்டின் வழி ஓரங்கட்டப்படுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Tuesday, February 26, 2008

மலாயா சரித்திரம்


மலேசியா என்று வழங்கப்படுவதற்கு முன்பு மலாயா என்றுதான் அழைத்தனர். கொஞ்சம், சரித்திரம் காண்போமா ? மலாயாவை ஆட்சி செய்தவர்களுக்கு பல காரணங்கள் இருப்பினும், முதன்மைக் காரணமாக இருப்பது அதன் இயற்கை வளம் என்றால் மிகையாகாது. மேலும் அதனால் கிடைக்கப்பெறும் வாணிப லாபம் என்றும் கூறலாம்.

ஏற்கனவே கூறியது போல், மலேசியா ( மலாயா ) இயற்கை வளம் மிகுந்தது. வரலாற்றுப் புகழ் பெற்றது. இங்கு வாசனைப் பொருட்கள் மிகுதியாகக்
கிடைத்தன. கிராம்பு, மிளகு, ஏலம்,பட்டை முதலியன வாசனைப் பொருட்களாகும். தங்கம், ஈயம் போன்ற உலோகப் பொருட்களும் கிடைத்தன.
இப்பொருட்களை வாங்குவதற்காக வந்த மேல் நாட்டவர் பலர் மலாயாவிற்கு வந்தனர். இங்குள்ள இயற்கை வளம் அவர்களைக் கவர்ந்ததால் அதைக்
தங்களின் உரிமையாக்கிக் கொள்ளவே மலாயாவை அவர்கள் கைப்பற்றினர்.
மலாயாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் போர்த்துகீசியர்கள் ஆவர். அவர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றினர். 130 ஆண்டுகள் வரையிலான அவர்களுடைய ஆட்சிகளுக்குப் பிறகு மலாக்கா டச்சுக்காரர்களின் வசமாயிற்று.19ஆம் நூற்றாண்டு முதல்ஆங்கிலேயர்கள் மலாயாவைச் சிறுகச் சிறுகத் தங்கள் வசமாக்கினர்.

அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தம் சொந்த இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவில்லை. இத்தகைய ஆட்சியை வெறுத்த மக்கள் சுதந்திரமாக வாழ விரும்பி அதற்காகப் போராடவும் செய்தனர். இப்போராட்டத்தின் விளைவாக 1957இல் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் மலாயா சுதந்திரம் பெற்றது.

Monday, February 25, 2008

மலேசிய ஆட்சி முறையில் மரபு வழிமுறை அம்சங்கள்


இன்றைய மலேசிய ஆட்சி முறைக்குப் பண்டைய மலாக்காவின் மரபுவழி ஆட்சி முறை அம்சங்களே அடிப்படையாக உள்ளன.

15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் முதலாவது மலாய் ஆட்சி மலாக்காவில் தோன்றியது. பரமேஸ்வரா மலாக்காவை நிறுவி அதன் முதல் சுல்தான் ஆனார். அவர் ஓர் இந்து சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சரித்திர புத்தகங்களில் பரமேஸ்வரா இஸ்லாத்தைத் தழுவினார் என்றே கூறப்பட்டு வந்தது.( அரசாங்க மாலாய்க்காரர்களின் ஆதிக்கம் வலுப்பெற சரித்திர விஷயங்கள் பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன என்பது காலத்தால் மறக்கப்படலாம்! உண்மை மௌனத்தில் வாழ்கிறதோ! ) அடியேன், ஆரம்பக் கல்வி பயிலும் போதே இத்தகைய சரித்திரத்தைத் திரித்து எழுதும் வழக்கம் இருந்துள்ளதை காலம் கடந்து தெரியவரும் போது, கல்வியாளன் என்ற அடிப்படையில் மிக வருந்தினேன்.

பரமேஸ்வரா மலாக்காவை நிறுவியதின் வழி அதுவே முதல் மலாய் அரசு என்று எங்களூர் சரித்திரம் பகர்கின்றது! இருப்பினும், அன்றைய காலத்தில் மலாக்கா ஒரு வாணிக மையமாய் விளங்கியது. பல நாட்டு மக்கள் அங்கு வாணிகம் புரிய வந்தனர். அரேபியா, இந்தியா முதலான நாடுகளிலிருந்து அதிகமான முஸ்லீம் வியாபாரிகள் இங்கு வந்தனர். அதன் காரணமாக மலாக்காவின் அரசன் முஸ்லீம் ஆனான்; அங்குள்ள மக்களும் முஸ்லீம்கள் ஆனார்கள். இஸ்லாம் அங்கு ஆட்சி மதமாயிற்று.

அப்படியானால், அதற்கு முன்பு எத்தகைய ஆட்சி முறை இருந்திருக்கும் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

அந்த காலக்கட்டத்தில், பல மொழிகள் பேசிய மக்கள் அங்கு வாணிகம் புரிந்தனர். மலாக்கா ஒரு முக்கிய வானிகத் தளமாக விளங்கிற்று. எனினும் மலாய் மொழியே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்ததாகக் கூறப்பட்டுவருகிறது. எனினும், அம்மொழிக்கு குறிப்பிடத்தக்க வரிவடிவம் இல்லாதது வியப்பில் ஆழ்த்துகிறது. மலாய் மொழியின் தந்தை என்று போற்றக்குடிய முன்ஷி அப்துல்லா (Munshi Abdullah ) என்பவரின் பூர்வீகம் இந்தியா என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் சரித்திரத்தில் இருட்டடிக்கப்பட்ட உண்மை!

எது எப்படியிருந்தாலும், அன்று முதல் ( இடையே போர்த்துகீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஜப்பானியர், மீண்டும் ஆங்கிலேயர்கள் போக) இன்று வரை மலாய் மொழியே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளங்குகிறது.

இஸ்லாமிய செல்வாக்கு மலாக்காவில் பரவியவுடன் வாணிகமும் அதிகரித்தது. மக்கள் தொகை பெருகியது. எனவே சட்டமும் ஒழுங்கு முறையும் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சி நிர்வாகம் முறையாக நடைபெற சுல்தானுக்கு உதவியாகத் திறமைமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சுல்தானுக்கு உதவியாக இருந்து நல்லாட்சி புரிந்தனர்.

'பெண்டஹாரா' என்னும் பொறுப்பு வகித்த அதிகாரி சுல்தானின் நேரடி உதவியாளராக, ஆட்சிக் குழுவின் தலைவராக விளங்கினார். 'பெண்டஹரி' எனும் பதவியில் இருந்தவர் நிதியாளராக இருந்து பொருளாதாரத்தைக் கவனித்து வந்தார். 'தெமெங்கோங்' எனும் பதவி வகித்தவர் சட்ட திட்டங்களை அமல்படுத்தும் காவல்துறை அதிகாரியாக விளங்கினார். 'ஷா பந்தார்' என்னும் பதவி வகித்தவர் துறைமுக அதிகாரியாகவும், 'இலக்சுமணா' எனும் பதவி வகித்தவர் கடற்படைத் தளபதியாகவும் பொறுப்பேற்றுச் சுல்தானுக்கு உதவியாக ஆட்சி புரிந்துவந்தார்.

எங்கள் மலேசியா.


மலேசியா எங்கள் தாய்நாடு. எங்கள் மூதாதையர் இந்திய நாடிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்தான். பெரும்பாலும் சஞ்சிக் கூளிகளாக

தருவிக்கப்பட்டவர்கள். அது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இருண்ட சரித்திரம். அதைப் பற்றி வேரொரு பதிவில் இடுகிறேன். இன்றைய
மலேசியா.....அன்று மலையகமாக இயற்கை சூழ்ந்திருந்ததால் மலாயா என்றழைக்கப்பட்டது.( மலையகம் ....பிறகு மலாய்க்காரர், 'மலாய்' மொழி என்று பெயர் உருவானதற்கு நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கும் )

முதலில், எழில் மிகுந்த எமது மலேசிய திருநாட்டைப் பற்றி சொல்லட்டுமா...? எங்கிருந்து ஆரம்பிப்பது ...சரி, அதன் அமைப்பில் இருந்து தொடங்குகிறேன்.

அழகிய மலேசியா- சிறந்த இயற்கை அமைப்பும், அழகும் ஒருங்கே பொருந்திய நாடு. மலேசியாவை, மேற்கு மலேசியா எனவும் கிழக்கு மலேசியா எனவும் நிலவியல் அடிப்படையில் பிரிக்கலாம். மேற்கு மலேசியாவின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே, இது தீபகற்ப மலேசியா எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா கலிமந்தான் தீவில் உள்ளது. சபா, சரவாக் எனும் மலேசியாவின் இரு மாநிலங்கள் இங்குதான் உள்ளன. மலேசியாவின் நிலவியலைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவை மலைகள், மலைத்தொடர்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளாகும்.

மலைகலும் மலைத்தொடர்களும்:
மலேசியாவின் நீண்ட மலைத்தொடர் 'தித்திவங்சா' மலைத்தொடர் ஆகும். வடக்கில் தொடங்கி தெற்கு வரை படர்ந்திருக்கும் இது தீபகற்ப மலேசியாவில் உள்ளது. மலேசியாவின் உயரமான மலைத்தொடர் 'குரோக்கர்'( Crocker).இது சபா மாநிலத்தில் உள்ளது. மலேசியாவின் முல்லிய
மலைத் தொடர்களில் லேடாங் மலைத்தொடர், தாஹான் மலைத்தொடர், நாக்காவான் மலைத்தொடர், ஈரான் மலைத்தொடர் போன்றவை
குறிப்பிடத்தக்கவையாகும்.

மலேசிய மலைப்பகுதிகளில் தேயிலை மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல்வகை பூச்செடிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, மலைப் பிரதேசங்களில் உள்ள உல்லாசத் துறையை ஊக்குவிக்கின்றன. இவற்றால் நாட்டிற்கு நல்ல வருவாய் கிடைக்கின்றது.
உதாரணத்திற்கு கேமரன் மலை, கெந்திங் மலை உல்லாசத் தளங்களைச் சொல்லலாம்.

சமவெளிகள்:
மலேசியாவில் பெரும்பாலும் பயிர்த்தொழில்கள் சமவெளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கெடா ( கடாரம் ஆண்ட இராஜேந்திர சோழன் ஞாபகம் வருகிறதா ) மாநிலத்தின் மூடா சமவெளி மிகவும் பெரியது. இங்கு அதிகமாக நெற்பயிரிடப்படுவதால் இச்சமவெளியை மலேசியாவின்
'நெற்களஞ்சியம்' என்று அழைப்பர்.

கிளந்தான் மாநில ஆற்றோரப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணாம் பகுதியும் பயிர்த்தொழிலுக்கு ஏற்ற சமவெளிகளாகும்.
மலேசியாவில் கிள்ளான் பள்ளத்தாக்கும் கிந்தா பள்ளத்தாக்கும் முக்கியமானவையாகும். மலேசிய மக்கள் தொகையில் அதிகமானோர் இங்குதான் வாழகின்றனர். பல பட்டணங்கள் இப்பள்ளத்தாக்குகளில் உருவாகியுள்ளன. கிந்தா பள்ளத்தாக்கு முன்பு உலகிலேயே அதிக அளவில் ஈயம் தோண்டப்பட்ட பகுதியாகும்.

கடற்கரைப் பகுதிகள்:
மலேசியாவின் கடற்கரைப் பகுதிகள் மிகவும் அழகானவை; பிரசித்திப் பெற்றவை. உலகமெங்கிருந்தும் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களில்
மலேசியக் கடற்கரையும் அடங்கும். அவை கிளந்தானில் 'ச்சாகாயா பூலான்' (Cahaya Bulan) கடற்கரை, பினாங்கில் பத்து பெர்ரிங்கி (Batu Peringgi)
கடற்கரை, லங்காவியில் பந்தாய் பாசீர் பூத்தே (Pantai Pasir Putih) கடற்கரை, நெகிரி செம்பிலானில் 'போர்ட்டிக்சன்' கடற்கரை போன்றவை அடங்கும்.
சதுப்பு நிலக்காடுகள்:மலேசியாவின் சில பகுதிகளில் சதுப்பு நிலங்களைக் காணலாம். சதுப்பு நிலங்களில் காண்டா மரக்காடுகள் நிறைந்துள்ளன. மலேசியாவில் ஜொகூர் மாநிலத்திலுள்ள எண்டாவ், ரொம்பின் பகுதிகளிலும் சிலாங்கூர் மாண்-இலத்திலுள்ள கோலாடிலாங்கூரிலும், சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும், சரவாக் மாநிலத்தின் தென்மேற்கு கரையோரத்திலும் சதுப்பு நிலங்கள் உள்ளன.

மலேசியா, பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் 'பூமத்திய ரேகை' வாநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை - ஆண்டு முழுதும் உயர்ந்தே
காணப்படுகிறது ( 26'C - 28'C ). இங்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும்.இருப்பினும் பருவ மழைக்காலங்களில் பெரும் மழை பெய்யும். பருவக் காற்றானது - வடகிழக்குப் பருவக்காற்று -( நவம்பர் முதல் மார்ச் வரை ) / தென்மேற்கு பருவக் காற்று - ( மே முதல் செம்டம்பர் வரை).

பல்லின மக்கள் வாழும் நாடு மலேசியா. இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பழங்குடியினர் மற்றும் பலர் 'ஒற்றுமையாக' வாழ்ந்து
வருகின்றனர். பல இன மக்களின் பல்வேறு கலை, கலாச்சாரங்கள் மலேசியாவுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன.

================

உலகளவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்!

உலகத் தாய் மொழி நாள் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு.[ யுனேஸ்கோ மன்றம் 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் ஆலோசனை நடத்தி பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய் மொழி தினமாக அறிவித்துள்ளது. " எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக எடுத்துரைக்கவும் பாரம்பரிய பண்பாட்டைப் பேணவும் இன ஒற்றுமைக்கும் கருவியாக அமைவது தாய் மொழி ஒன்றுதான்".]
======================================================

கடந்த 21.02.2008 அன்று உலகத் தாய் மொழி நாள். யுனேஸ்கோ எனப்படும் 'ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல்,பண்பாட்டுக் கழகம்' அறிவித்துள்ளபடி உலகிலுள்ள அனைத்து மக்களும் தம் தாய் மொழியை கொண்டாடுகிறார்கள். உலகில் சுமார் 6,000 முதல் 7,000 வரைக்குமான மொழிகளில் எறக்குறைய பாதிக்கும் மேற்பட்டவை வழக்கழியும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பிட்டுச்சொன்னால், சிறுபான்மை மக்களால் பேசப்படும் மொழிகள்தாம் அத்தகைய நிலையை எதிர் கொண்டுள்ளன.

ஏன் இத்தகு நிலை ? அந்த மொழி பேசும் மக்கள் தாய்மொழிப்பற்று இல்லாமைதான் முழுமுதற் காரணம். உதாரணத்திற்கு, பண்டைய இலக்கிய வளமும், செழுமையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் இன்று இல்லாமல் போனதற்கு அன்றைய மக்கள் தாய்மொழி உனற்வின்றி இல்லாததே காரணம் ஆகும்.

உலக வரலாற்றுச் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கும் பொழுது தாய் மொழிக்காக நாடு சமைத்த வங்க மக்களின் மொழி வேட்கையும் தாய்மொழிப் பற்றும் இணையில்லாதது; ஈடற்றது. பிரெஞ்சு மொழியினரும்
ஜெர்மனியாளர்களும் கூட தாய் மொழிப் பற்று மிக்கவர்கள். தட்டுத் தடுமாறியேனும் தம் மொழியில்பேசுவோரைக் கண்டு பிரெஞ்சு மக்கள் உள்ளம் உவகை அடைகின்றனர்.

ஆங்கில மொழி வாடையின்றியே அறிவியல் சாதனை படைத்து வரும் ரஷ்யா, ஜப்பான், சீன மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டோரும் உலகில் போற்றத் தகுந்தவர்கள்.

மலேசிய மக்களின் தேசிய மொழியாக பவனி வரும் 'பஹாசா மலேசியா' ( முன்பு 'பஹாசா மெலாயு' என்றழைக்கப்பட்டது ) வழி 'பஹாசா ஜீவா பங்சா' (மொழியே இனத்தின் உயிர் - எனப் பொருள்படும்) என்பதை கொள்கை-பண்பாடு அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ள மலாய் மக்களின் மொழி ஆர்வமும் போற்றத்தகுந்ததுதான்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்து மலேசியத் தமிழ் மக்கள் அனைவரும் தம் தாய் மொழி மீது மங்காத பற்றும் மாறாத ஈடுபாடும் கொண்டு திகழ வேண்டும்.

மலேசியத் தமிழர்களிடையே குறிப்பாகத் தமிழ் இளைஞ்ர்களிடையே தமிழார்வம் தற்பொழுது வெகுவாக குன்றியுள்ள நிலையை மாற்றியமைக்க தமிழ்ச் சார்ந்த இயக்கங்கள் ஆவன செய்ய வேண்டும்.

மலேசியத் தமிழ் இளைஞ்ர் மணிமன்றம் தோற்றுவித்த காலத்தில் தமிழ் மொழியார்வம் செழித்து வளர்ந்தது. தமிழ் நெஞ்சர்களின் சீரிய வழிகாட்டுதலுடன் அன்று பட்டி தொட்டியெல்லாம் தமிழ் மொழி, கலை, பண்பாடு தொடர்பான நிகழவுகள் நடைபெற்றன. தமிழ் இளைஞர் மணி மன்ற வித்தகர், அமரர் கோ.சா அவர்களின் விழுமிய தமிழ்ச் சேவை- தமிழ் உணர்வு இன்று இருக்கிறதா என்றால் கேள்விக் குறியே!

"தாய்மொழி வழி முன்னேற்றம் காண மலேசியத் தமிழ் இளைஞர்கள் மணிமன்றப் படை களம் காண வேண்டும்' என்று தாய்மொழி குறித்து மன்றத்தின் தேசியத் தகைவர் திரு.பி.பொன்னையா அவர்கள் கூறியுள்ளார்.

தாய்மொழியும் சமயமும் இரு விழிகளுக்கு ஒப்பாகும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் இணைப்பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தாய்மொழி தினம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் சாரம்சம், " தமிழ்ர்க்குத் தாய் மொழி தமிழும் சமயமும் இரு விழிகள் போன்றவை. நன்னெறி சார்ந்த வாழ்க்கைக்கு சமயத் தெளிவு வேண்டும். அந்தச் சமயத் தெளிவு தாய் மொழி வழி பெற வேண்டும். இந்நாளில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் தாய் மொழி தினத்தில் தமிழ் வளர்ச்சி மீது தமிழர்கள் கருத்துற வேண்டும்" என்பதாகும்.

ஒன்றை மட்டும் இந்த உலகத் தாய் மொழி நாளில் நினைவில் கொள்வோம்; நிறைவேற்றுவோம்.

"உலகலவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்!"

Saturday, February 23, 2008

நினைவுகள்- சிறுகதை பகுதி 1


அடடே....இவரும் சிறுகதை எழுத வந்துவிட்டாரே.....என்று எண்ணிவிடாதீர்கள்!

இச்சிறுகதை என் நண்பர், தமிழ் ஆர்வலர் திரு. பால.இளங்கோவன் என்பவரின் கன்னி முயற்சி. அவருக்கு ஆதரவு தரவேண்டும் என்ற எண்ணத்தாலும், அவர் மேலும் எழுதுவதற்கு இந்த வலைப்பு ஊடகம் உத்வேகத்தை வழங்கும் என்ற சிந்தனையாலுமே இந்த முயற்சி.

குறிப்பு: இச்சிறுகதை அவர் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

========================================================


"நினைவுகள்"- சிறுகதை - ஆக்கம் : பால. இளங்கோவன்( குளுவாங்,ஜொகூர், மலேசியா.)


========================================================

சூரியனின் முதல் கீற்று பூமியில் விழுவதற்கு இன்னும் ஏறக்குறைய மூன்று மணிநேரம் இருக்கும் இரவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தன் கண்சிமிட்டும் பணியை சரியாகவே செய்து கொண்டுருக்கும், நட்சத்திர குவியல்களின் ராஜாங்க வேலை அது. மொத்தத்தில், பூமி இன்னும் தன் இரவு உறக்கத்திலிருந்து கண்விழிக்காத நிசப்த அதிகாலை நேரம். நிதர்சனமான நிசப்தத்தைச் சப்தமாக்கிக்கொண்டு இரயில் தனது பயணத்தை தெற்கிலிருந்து வடக்கே கோலாலம்பூர் மாநகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

கிம்மாஸ்(Gemas) இரயில் நிலையத்தில் இருந்து அதிகாலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த இரயில், ஜொகூரை நோக்கி தன் பயணத்தில் ஈடுபட்டிருந்த இன்னொரு இரயிலுக்கு முதல் வழிவிடும் பொருட்டு கிம்மாஸுக்கு அடுத்து உள்ள ஆயிர் கூனிங் (Air Kuning) என்னும் இடத்தில் நின்றது. வழக்கமாக எந்த விரைவு இரயிலும் அங்கு நிற்பது கிடையாது. ஆனால் தவிர்க்க இயலாத நிலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரயில் அங்கே நிற்கும், எப்போதாவது. இன்றும் அவ்வாறே நின்றது. புறப்பட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இரயில் நின்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளிலும் இரவுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்த சில விழிகள் ஆங்காங்கு எழுந்து விடியல் இருட்டில் விழிகொண்டு ஊடிருவிக் கொண்டிருந்தன. சில மணித்துளிகளுக்குள், இரவு பயணத்திற்கு பொறுப்பு வகித்த பயண நிலைய அதிகாரி, இரயில் நின்றதற்கான காரணத்தை நடந்து கொண்டே பயணிகளுக்குத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக கடந்து கொண்டிருந்தார்.

சங்க காலத்து இலக்கியங்களில், முரசொலி கேட்டு, புஜம் உயர்த்தி போருக்குக்கெழும் வீரனைப்போல், அதிகாலை நிசப்தத்தை, சத்தமாக்கிய அதிகாரியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான், சங்கர். அதுவரை இருந்த அவனது ஆனந்த உறக்கம் அறுந்து விழுந்தது. இருந்தபோதும், அதிகாலை வேளையல்லவா, அக்னிக் குஞ்சின், அக்னி ஓமம் இன்னும் ஆரம்பிக்காத அமைதியான வேளை. கண்விழித்த சங்கர் மனமெங்கும், ஓர் ஆனந்தம்..மெல்லியதாய் படர்ந்து வியாபித்திருந்தது. அந்த இரவு இரயில் பயணத்தில் தற்காலிகத் தடையை முன்னிட்டு, தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்து இரயில் பெட்டியின் கதவருகே வந்த சங்கர் பெட்டியின் கதவைத் திறந்தான். அதிகாலை சில்லென்று வீசிய குளிர்காற்று அவனது மிச்சம் மீதி இருந்த உறக்கத்தையும், அவனது உள்ளத்து சோர்வையும் வாரி எடுத்துச் சென்றது. பூமியில் புதிதாய் பிறந்த குழந்தை போல் ஆனது அவனது மனம், இரயில் பெட்டியில் இரு படிகளைத் தாண்டி இரயில் நிலையத்திற்கும், இரயில் வண்டிக்கும் இடையில் நடைபாதையில் கால் பதித்தான் சங்கர்.

தொடர்ந்து வீசிக் கொண்டிருந்த சில்லென்ற தென்றலில் முழுமையாகக் குளிர்ந்தான் சங்கர். உறக்கம் கலைந்ததும், அவனுக்கு நாவரட்சி ஏற்பட்டது. இரயில் நிலையத்தில் அப்படியொன்றும் இரவு நேரத்து டீ, காப்பிக் கடை இருப்பதற்கான சுவடுகள் எதுவுமே இல்லாமல் இருள் சூழ்ந்திருந்தது.

சுற்றும் முற்றும் மீண்டும் தன் பார்வையை அகலமாக்கினான். மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில், ஒரு வீடு, அந்த வீட்டில் ஆள் புலங்குவதற்கான அறிகுறிகள் இருப்பதை, இரவும் விடியலும் ஒன்றாக நலம் விசாரித்துக் கொள்ளும் அந்த அதிகாலை நேரத்தில் கண்டான். காலம் தாழ்த்தாமல் தன் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த வீடு நோக்கி நடந்தான், சங்கர். வீட்டுக் கதவைத் தட்டினான், ஹலோ! என்ற வார்த்தையுடன். யாரும் கதவைத்திறந்ததாக இல்லை. ஒரு வினாடி மௌனித்து மீண்டும் தட்டினான். அப்பொழுது யாரும் கதவைத் திறக்கவில்லை.

வாசலில் இருந்து பின்வாங்கினான். வீட்டின் பின்புறம் அந்த அதிகாலை........ ( தொடரும் )


Saturday, February 9, 2008

சிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகள் - துன் டாக்டர் மகாதீர் கருத்து.



தலைவர்களாக வரக்கூடியவர்கள் நற்பண்புகளுடன் இருக்க வேண்டும். அவர்கள் சாதனை படைக்காமல் இருந்தாலும் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தால் போதும் என மலேசிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.


அவர் மேலும், நன்னெறியில்லாமல், ஆக்ரோஷமான முறையில் தலைவர்களாக வர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.


மலேசியாவில் தலைவருக்கான நன்னெறியுள்ள ஆயிரம் தலைவர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வெற்றி பெறாததற்கு காலம் அவர்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒருவர் நற்பண்புகள் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சமீபத்தில் 'பெர்னாமா'வுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஒருவர் சிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகளை துன் மகாதீர் பட்டியலிட்டார்.


1. ஒரு சிறந்தத் தலைவர் தன்னடக்கமாக இல்லாவிட்டாலும் பெரிதாக பேசக்கூடாது.


2. ஒருவர் தன் பொறுப்புகளை ஏற்று மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆனால், தலைமைத்துவத்தில் நெருக்குதல், கடுமை இருக்கக்கூடாது.


3. ஒருவர் தனது தோல்விக்கு அடுத்தவரை குறை சொல்லக்கூடாது. தனது பலவீனத்தை ஒப்பு கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குற்றஞ்சொல்வதற்கு அடுத்தவரை சுட்டிக் காட்டக்கூடாது.


4. அவர் புகழுக்கு மயங்காமல் கண்ணியமாக இருக்க வேண்டும்.


5. அவர் தனது ஆதரவாளர்களைக் கையாள தெரிந்திருக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து மதிப்பளிக்க வெண்டும்.


6. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். முன் மாதிரித் தலைவராக இருக்க வேண்டும்.


7. அவரது தலைமையின் கீழ் செயல்படுபவர்களுடன் ஒப்பிடுகையில் அவர் ஆற்றல்மிக்கவராகத் தலைவராக இருக்க வேண்டும்.


ஒரு சில முன்னணி நாடுகள் முன்னேற்றத்திற்கு ஒரு தலைவரின் சிறந்த ஆட்சி முறைதான் காரணம். ஒரு நாட்டுக்கு நல்ல தலைவர் இல்லை என்றால் சிறந்த ஆட்சி இருக்காது. நிறைந்த ஆட்சி இல்லை என்றால் மக்கள் அந்த ஆட்சியை விரும்பமாட்டார்கள் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத்துள்ளார்.


-நன்றி 'பெர்னாமா'
பி.குறிப்பு:டும்...டும்...டும்..... மலேசியாவில் மிக விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது!

இன்பமாக வாழ என்ன செய்யலாம்..?

சாதாரணமாக மனிதனுடைய உள்ளத்திலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து பெறக்கூடியதுதான் இன்பமான வாழ்க்கை. உண்மையில், மனிதனுக்கு வறுமை என்பது இல்லை. மேம்போக்காக எடுத்துக்கொள்ளாமல், சற்று ஆழ்ந்து யோசித்தால் இவ்வுண்மை புலப்படும். இப்புவியில் பிறந்த ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே, அவனது இறுதி காலம் வரையிலும் எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் ஒருவரைப் பார்த்து அவரைப்போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். அவன் தன்னிடம் உள்ள ஆற்றலை உணர்ந்து, வளர்த்துக் கொள்ளும் திறமை பெறாமையும், செயல்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டாமையுமே, சோர்வு, விரக்தி, வறுமை உண்டாவதற்குரிய காரணங்களாகும்.

மனத்தை அலைபாய விடுவது, அதைக் கட்டுபாட்டில் வைக்காமல் தேவையில்லா தாழ்வு எண்ணங்களையும், எதிர்மறையான விசயங்களையும் தேக்கி களங்கப்படுத்திக் கொண்டும், தனக்குத் தானே ஒரு எல்லை கட்டிக் கொண்டும், அதிலேயே மனதைச் சிக்க வைத்துக் கொண்டும் அங்கலாய்ப்பதாலேயே 'மனநிறைவு' எற்படாமைக்கு மற்றொரு காரணம்.

இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது..?

முதலில் இயற்கையை நேசியுங்கள். இயற்கையுடன் பேசுங்கள்; ஒன்றித்து விடுங்கள். சுருக்கமாச் சொன்னால், இயற்கை லயத்துடன் வாழ்வை ஓட்டுங்கள். இயற்கையுடன் பேசுவதா...? ஆம். மனதுடன் பெசுவது ஒரு கலை. தற்கருத்தேற்றம் வழி நேர்மறை எண்ணங்களை சுலபமாக மனதிடம் போட்டு வைத்தால் அது பாட்டுக்கு வேலையைச் செய்யும். சுயமுன்னேற்றப் பயிற்சிகளிலோ அல்லது புத்தகங்களில் படித்தோ இருப்பீர்கள்.

சற்றேரக்குறைய அதே போல்தான். நம்மைச் சுற்றி இந்த இயற்கையிடம் பேசுவதும் ஒரு கலைதான். சரி, நான் பேசுகிறேன்; இயற்கை பேசுமா...? என்றால் அதற்குப் பதில் நீங்கள் எவ்வளவு தீவிரமுடன் இயற்கையுடன் இணைகிறீர்கள் என்பதில் இருக்கிறது. சும்மா ஒரு வாரத்திற்கு ....இயற்கைப் பிரதிநிதிகளான மண்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் ஆரம்பியுங்கள்.

இயற்கையானது ஆயிரமாயிரம் இன்பங்கள் உள்ளடக்கியுள்ள ஒரு கூட்டமைப்பு என்பதை நன்றாக உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. உயர்வு உங்கள் சிந்தையில் ஆரம்பிக்கட்டும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.....இயற்கயின் பதில் கிடைத்தால் அதற்கென்றே ஒரு தனி 'வலைப்பூ' ஆரம்பிப்பீர்கள்!