Tuesday, April 26, 2011

தவம் செய்வோர் எதுவரைச் செல்வர் ?



தவம் செய்வோர் எதுவரைச் செல்வர் ?
இதற்கு அன்னை அவ்வையார் விடையளிக்கிறார் பாருங்கள்:

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தனமும் தவமும் தான்செவா ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே!

விளக்கம்:

உலகில் மானிடப் பிறப்பே உயர்ந்தது. ஐந்தறிவிலிருந்து ஆறாவது அறிவுநிலைக்கு செல்வது என்பது விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்தப்படுவதாகும். இவ்வுலகில் தோன்றிய உயிரினங்களுள், மிக உயர்ந்த பிறவி மானிடப் பிறவியேயாகும். அவ்வாறு மனிதராய்ப் பிறப்பெடுதாலும் கூன் இல்லாமல், செவிடாய் இல்லாமல், பேடு இல்லாமல் பிறத்தல் அரிது என்று அவ்வை மூதாட்டி பகர்கின்றார். அவ்வாறு பிறந்தாலும் தானமும் தவமும் செய்வது என்பது எல்லாருக்கும் கிடைக்கும் வாய்ப்பில்லை, அரிது என்கிறார். யாரெல்லாம் தானமும் தவமும் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்களுக்கு வானவர் நாடு அதாவது தேவருலகம் வழிதிறந்திடுமாம். உண்மையான வாக்கு; அவ்வை வாக்கு!


அன்னை அவ்வையின் இந்தத் தெளிவான சான்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், மனிதராய் பிறந்தோர் ஒவ்வொருவரும் தனமும் தவமும் செய்வது 'கடமை' என்று அறிகிறோம்.

Tuesday, April 19, 2011

அந்தக்கரணங்கள்



ஆறாவது அறிவாகிய மனம், ஒரு மாயைத்திரை. அது கண்ணுக்குத் தெரியாத ஓர் எந்திரம். மனத்தை வென்று வெட்டவெளிக்குச் செல்லும் மகான்கள் மனத்தை மிக நுட்பமாக ஆராய்ந்தவர்கள் ஆவர். மனதிற்குள் ஐந்து அங்கங்கள் இருப்பதாக உணர்த்திச் சென்றுள்ளனர். மனத்தின் இந்த அங்கங்களை அந்தக்கரணங்கள் என்று எடுத்துரைத்தனர்.

சைவச் சித்தாந்தம் வகுத்த மகான்கள் மனதை நான்கு உறுப்புகளாகப் பெயரிட்டனர்: அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவாம். திருஅருட்பிரகாச வள்ளலார்தான் ஐந்தாவது உறுப்பாகிய 'உள்ளம்' என்ற ஒன்று இருப்பதை உறுதி செய்தார். இவை ஐந்தும் அகக்கருவிகள் எனத் தெளிவுபடுத்தினார்.

Saturday, April 16, 2011

வான் பார்க்கும் நேரம்



வான் பார்க்கும் நேரம்

வாய் பேச‌க் கூசும்..!


கண் பார்க்கும் நேரம்

மனம் பேசாமல் பேசும்..!


உன் பார்வை போதும்

வெண் நிலாவும் உற‌வாடும்...!

Tuesday, April 12, 2011

ஆணவம் ஒழிய...



'நிலத்திலிருந்து முளை எழுந்தபோது
முரசோன்றும் முழங்கவில்லை! பழம்பழுத்துப் பக்குவமடந்தபோது ஊதுகொம்பின் ஒலியில்லை! ஒளிதரும் ஞாயிறு நிலவுகள் எழும்போது வீர முழக்கம் இல்லை! உன் உதடுகளைத் தைத்திடுவாய் மக்குதிம்மா!'
'மக்குத் திம்மன் பிதற்றல்கள்' ‍மகான் குண்டப்பா


கன்னட மண்ணில் வாழ்ந்த மகான் இவர். எங்கிருந்தால் என்ன, மகான்களின் வார்த்தைகள் அர்த்தம் மிகுந்தவை. நம்மிடமிருக்கும் ஆணவமாகிய முகமுடியைச் சுக்கு நூறாகச் சிதைக்கிறார், பாருங்கள்!