Monday, February 25, 2008

உலகளவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்!

உலகத் தாய் மொழி நாள் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு.[ யுனேஸ்கோ மன்றம் 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் ஆலோசனை நடத்தி பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய் மொழி தினமாக அறிவித்துள்ளது. " எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக எடுத்துரைக்கவும் பாரம்பரிய பண்பாட்டைப் பேணவும் இன ஒற்றுமைக்கும் கருவியாக அமைவது தாய் மொழி ஒன்றுதான்".]
======================================================

கடந்த 21.02.2008 அன்று உலகத் தாய் மொழி நாள். யுனேஸ்கோ எனப்படும் 'ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல்,பண்பாட்டுக் கழகம்' அறிவித்துள்ளபடி உலகிலுள்ள அனைத்து மக்களும் தம் தாய் மொழியை கொண்டாடுகிறார்கள். உலகில் சுமார் 6,000 முதல் 7,000 வரைக்குமான மொழிகளில் எறக்குறைய பாதிக்கும் மேற்பட்டவை வழக்கழியும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பிட்டுச்சொன்னால், சிறுபான்மை மக்களால் பேசப்படும் மொழிகள்தாம் அத்தகைய நிலையை எதிர் கொண்டுள்ளன.

ஏன் இத்தகு நிலை ? அந்த மொழி பேசும் மக்கள் தாய்மொழிப்பற்று இல்லாமைதான் முழுமுதற் காரணம். உதாரணத்திற்கு, பண்டைய இலக்கிய வளமும், செழுமையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் இன்று இல்லாமல் போனதற்கு அன்றைய மக்கள் தாய்மொழி உனற்வின்றி இல்லாததே காரணம் ஆகும்.

உலக வரலாற்றுச் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கும் பொழுது தாய் மொழிக்காக நாடு சமைத்த வங்க மக்களின் மொழி வேட்கையும் தாய்மொழிப் பற்றும் இணையில்லாதது; ஈடற்றது. பிரெஞ்சு மொழியினரும்
ஜெர்மனியாளர்களும் கூட தாய் மொழிப் பற்று மிக்கவர்கள். தட்டுத் தடுமாறியேனும் தம் மொழியில்பேசுவோரைக் கண்டு பிரெஞ்சு மக்கள் உள்ளம் உவகை அடைகின்றனர்.

ஆங்கில மொழி வாடையின்றியே அறிவியல் சாதனை படைத்து வரும் ரஷ்யா, ஜப்பான், சீன மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டோரும் உலகில் போற்றத் தகுந்தவர்கள்.

மலேசிய மக்களின் தேசிய மொழியாக பவனி வரும் 'பஹாசா மலேசியா' ( முன்பு 'பஹாசா மெலாயு' என்றழைக்கப்பட்டது ) வழி 'பஹாசா ஜீவா பங்சா' (மொழியே இனத்தின் உயிர் - எனப் பொருள்படும்) என்பதை கொள்கை-பண்பாடு அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ள மலாய் மக்களின் மொழி ஆர்வமும் போற்றத்தகுந்ததுதான்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்து மலேசியத் தமிழ் மக்கள் அனைவரும் தம் தாய் மொழி மீது மங்காத பற்றும் மாறாத ஈடுபாடும் கொண்டு திகழ வேண்டும்.

மலேசியத் தமிழர்களிடையே குறிப்பாகத் தமிழ் இளைஞ்ர்களிடையே தமிழார்வம் தற்பொழுது வெகுவாக குன்றியுள்ள நிலையை மாற்றியமைக்க தமிழ்ச் சார்ந்த இயக்கங்கள் ஆவன செய்ய வேண்டும்.

மலேசியத் தமிழ் இளைஞ்ர் மணிமன்றம் தோற்றுவித்த காலத்தில் தமிழ் மொழியார்வம் செழித்து வளர்ந்தது. தமிழ் நெஞ்சர்களின் சீரிய வழிகாட்டுதலுடன் அன்று பட்டி தொட்டியெல்லாம் தமிழ் மொழி, கலை, பண்பாடு தொடர்பான நிகழவுகள் நடைபெற்றன. தமிழ் இளைஞர் மணி மன்ற வித்தகர், அமரர் கோ.சா அவர்களின் விழுமிய தமிழ்ச் சேவை- தமிழ் உணர்வு இன்று இருக்கிறதா என்றால் கேள்விக் குறியே!

"தாய்மொழி வழி முன்னேற்றம் காண மலேசியத் தமிழ் இளைஞர்கள் மணிமன்றப் படை களம் காண வேண்டும்' என்று தாய்மொழி குறித்து மன்றத்தின் தேசியத் தகைவர் திரு.பி.பொன்னையா அவர்கள் கூறியுள்ளார்.

தாய்மொழியும் சமயமும் இரு விழிகளுக்கு ஒப்பாகும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் இணைப்பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தாய்மொழி தினம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் சாரம்சம், " தமிழ்ர்க்குத் தாய் மொழி தமிழும் சமயமும் இரு விழிகள் போன்றவை. நன்னெறி சார்ந்த வாழ்க்கைக்கு சமயத் தெளிவு வேண்டும். அந்தச் சமயத் தெளிவு தாய் மொழி வழி பெற வேண்டும். இந்நாளில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் தாய் மொழி தினத்தில் தமிழ் வளர்ச்சி மீது தமிழர்கள் கருத்துற வேண்டும்" என்பதாகும்.

ஒன்றை மட்டும் இந்த உலகத் தாய் மொழி நாளில் நினைவில் கொள்வோம்; நிறைவேற்றுவோம்.

"உலகலவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்!"

5 comments:

Anonymous said...

Nice Article...!!

')) said...

உலகத் தாய்மொழி நாளைப் பற்றித் தெரியாமல் போய்விட்டதே. அடுத்த வருடமாவது நினைவில் நிற்கிறதா பார்க்கிறேன்.

')) said...

உங்கள் தமிழ் மொழி பற்றிற்கு என் வாழ்த்துக்கள்.

உங்கள் பணி தொடரட்டும்

நன்றி!

')) said...

//உலகலவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்//

தமிழ் மொழியை வீட்டு மொழியாக்கி விடாதீர்கள் நன்பரே!

தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். அந்த எண்ணம் தான் எமக்குள் இருக்க வேண்டும்.

நன்றி!

')) said...

கட்டுரை அனைத்தும் எளிமையாக உள்ளது.
உங்கள் எழுத்துப்பணி தொடர இனிய வாழ்த்துகள்.

நன்றி