Friday, February 29, 2008

கவிதை....இடைநிலை பள்ளியில் நம்மாணவர் நிலை!

இடைநிலைப் பள்ளியில் நம் இந்திய மாணவர்களில் சிலர் அடாவடித் தனமாக இருப்பதாகவும், ஆசிரியர்களை மதிக்காமல் சேட்டைகள் புரிபவர்களாகவும் இருப்பதை முன்பு கேட்டிருக்கின்றேன். தற்போது நேரடியாகப் பார்த்தும் வருகின்றேன். எல்லா மாணவர்களும் இப்படி இல்லை என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் பிரச்னையை எதிர்நோக்குகிறார்கள். விடலைப் பருவ மாணவர்களிடம் தமிழாசிரியர்கள் படும் பாட்டை.......எங்களூர் இளங்கவிஞர் - தமிழ்போதிக்கும் ஆசிரியர் - திரு.வாஞ்சிதேவன் சோமசன்மா தம் ஆதங்கத்தை கவிதையாய் வடித்துள்ளார்.


அக்கவிதையை உங்களுக்காக.....இதோ:
====================================
வீணாகும் மாணாக்கர்.

சிறகடிச்சிப் பறக்கமட்டும் துடிக்கிறீங்க - ஆனா
சிந்தனையை முடுக்கிவிட மறுக்குறீங்க !
அரட்டையிலும் ஆட்டத்திலும் கிடக்குறீங்க - நீங்க
சிரத்தைவச்சா பள்ளியில படிக்குறீங்க ?


திரைப்படத்தை நடைமுறையா நெனக்குறீங்க - கருத்தைச்
சிதறடிச்சு காதலுன்னு கொணிக்குறீங்க!
மறைகழன்ற மனுசனைப்போல் உடுத்துறீங்க - கையில்
மட்டையோடு அடிதடின்னு படுத்துறீங்க !


கதையளக்க வாயைநல்லா பிளக்குறீங்க - பிறர்
கரைசேர வாய்ப்பிழந்து தவிக்குறீங்க !
உதைபட்டும் வதைபட்டும் சிரிக்குறீங்க - மான
உணர்வற்றுப் பிழைபட்டுச் சறுக்குறீங்க !


தலைமுறைக்கே தலைகுனிவாய் இருக்குறீங்க - தவற்றை
சுட்டிக்காட்டும் தரப்பினரை வெறுக்குறீங்க !
பிழைபொறுத்தா தலையிலேறிக் குதிக்குறீங்க - பாவம்
பெத்தவங்க கனவிலேறி மிதிக்குறீங்க !


படிக்கிறப்ப திறமையுடன் உயர்ந்திடுங்க - அறிவு
படைச்சவர்க்கே தலைவணங்கும் உலகிதுங்க !
முடிவுபண்ணி அடாவடியை நிறுத்திடுங்க - நெனப்பை
முழுசாகக் கல்வியின்பால் செலுத்திடுங்க !

ஆக்கம் : கவிஞர் வாஞ்சிதேவன்,சோமசன்மா.

குறிப்பு: நாடறிந்த தலைசிறந்த கவியரசு சோமசன்மா அவர்களின் புதல்வர் ஆசிரியர் திரு. வாஞ்சிதேவன் அவர்கள். தற்போது குளுவாங்கில், இடைநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

4 comments:

')) said...

ரொம்ப நல்லா இருக்கு.. அதுவும் அந்த பிழை பொறுத்தா தலை மேல ... ரொம்பவும் அருமை..

( கொணிக்கிறீங்கன்னா என்ன அர்த்தம்)

Anonymous said...

//தலைமுறைக்கே தலைகுனிவாய் இருக்குறீங்க//

வேதனையான உண்மையுங்கூட...

')) said...

கயல்விழி முத்துலெட்சுமி,

கணிக்குறீங்க என்பதை கொணிக்குறீங்க என்று எழுதியிருக்கலாம். கவிஞரின் பானி என்று எடுத்துக்கொள்வோமா?

')) said...

இனியவள் புனிதா,

சில சம்யங்களில் பல்லின மாணவர்கள் ஆசிரியர்கள் இருக்கும் இடத்தில் நமக்கே தலைக்குனிவை ஏற்படுத்துவதுண்டு.