Friday, February 29, 2008

தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தீர்ந்தபாடில்லை!


மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னை என்றுதான் தீருமோ ? என்று ஆங்காங்கே மக்கள் வேதனையுடன் புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு
ஆண்டும் பள்ளித் தவனை தொடங்கும் போது இப்பிரச்னை குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. வருடம் தொடங்கி
இன்றோடு இரண்டாம் மாதம் முடிகிறது. ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் குறைந்தது 350இல் இருந்து 400வரைக்குமான ஆசிரியர்கள் நிரபப்பட

வேண்டும் என்ற தேவை நேர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது; வேதனையளிக்கிறது.

ஏன் தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் இந்த நிலை. தேசிய பள்ளிகளில் தேவைக்கும் அதிகமாகவே காணப்படுகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பலமுறை மாவட்டக் கல்வி இலாக்காவிடம் தெரியப்படுத்தியும் இந்த நிலை ஏற்படுகின்றது என்றால் யாரைக் குறைச் சொல்வது? ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கும் இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைத்தானே காட்டுகிறது ?கல்வி வல்லுநர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பிரச்னை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாநில கல்வி இலாக்கா, தேசிய கல்விப் பிரிவு இலாக்கா மற்றும் கல்வி அமைச்சு உடனடியாக பிரச்னைக்குத் தீர்வு காண
வேண்டும் என்பதுதான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

இப்பிரச்னையை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்திற்கு புகார்கள் கிடைத்த வண்ணம் இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் லோக் இம் பெங்
அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தங்கு தடையின்றி நடைபெறவும், தமிழ் மாணவர்களின் பாடத் திட்டங்களும் இதர புறப்பாட
நடவடிக்கைகளும் எவ்வித சுணக்கமும் இன்றி நடைபெற இந்த ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

அரசாங்கம் - கல்வி அமைச்சின் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன. 2006-2010 வரையிலான நாட்டின் கல்விப் பெருந்திட்டத்தின் வழி, நாட்டிலுள்ள ஆரம்பப் பள்ளிகள் அது தேசியப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, தமிழ்-சீனப் பள்லிகளாக இருந்தாலும் சரி அல்லது சமயப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, அவற்றின் அடைப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாவிடில், நோக்கம் நிறைவேறாது. மற்ற பள்ளிகளில் மட்டும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி விட்டு, தமிழ்ப்பள்ளிகளைக் கண்டும் காணாமல் இருந்தால், மாணவர்களுக்கு இழைக்கும் துரோகம்; இனத்தை இம்சிக்கும் நயவஞ்சகம். அரசாங்கம் இனியும், தமிழ்ப்பளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யதான் இந்தியர்களின் 'கட்சி' இருக்கிறதே - கேட்கும் போதெல்லாம் வாரி வழங்கியிருக்கிறோமே என்று பொறுப்பை பிறர் மீது தினித்தால்......என்னத்தச் சொல்வது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே......நேற்று இந்தியர்களைப் பிரதிந்திக்கும் ஒரே கட்சிக்கு வாழ்நாள் தலைவரின் கூற்று அவமானத்திற்குரியது.
"கடவுள், தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்ல கூலி கொப்பார்! " எனும் தோரணையில் வசைப்பாடுகிறார். கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜொகூர் மாநிலத்தில் 5
ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி ஒன்றில் இடப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் பெற்றோர்கள் "சாகும் வரை உண்ணாவிரதம் "- அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டித் தர வேண்டும்!" என்று அறிக்கைவிட்ட பின்னர், அரசாங்கம் 'கட்டித் தருகிறோம்' என்று எப்படியோ அந்த
போராட்டத்தை கைவிட வியூகம் அமைத்தனர். எவ்வளவு காலம்தான் மக்கள் பொறுத்திருப்பர் ?

ஒரு பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் தேவை. அதன் மூலமே நிறைவான கல்வியை அங்கு உறுதி செய்ய முடியும் எனும் அடிப்படை விசயத்தைக்
கூடவா அறியாமல் இருப்பார்கள்? கல்வி இலாக்காவில் முக்கியப் பொறுப்பளர்களுக்கு இதைவிட வேறு வேலைகள் முக்கியமாகப் படுகின்றதோ?
தமிழ்ப்பள்ளியில் படிப்பவர்களும் 'மலேசிய' மாணவர்கள்தான்.

2 comments:

')) said...

உண்மைதான் ஐயா, நானும் தமிழ் மொழியை முதல்ப் பாடமாகப் படித்து ஆசிரியர் துறையில் புகுந்தவன் தான். ஆனால் புகுந்த இடமோ மலாய்ப் பள்ளி. இன்றுவரையில் தமிழ்ப் பள்ளியில் பணிப்புரிய போராடிக் கொண்டிருக்கிறேன். இனியும் தமிழாசிரியர்களும் பெற்றோர்களும் தமிழ்ப்பள்ளிகளை மாற்றாந்தாய்ப் பிள்ளைகளாக நடத்திவரும் அரசாங்கத்தைக் கண்டித்து போர்கொடி எழுப்ப வேண்டும். எவ்வளவு காலம்தான் நமக்காக தொண்டூழிய அமைப்புகள் போர்கொடி தூக்கவதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது. வீட்டில் பிரச்சனை என்றால் வீட்டிலுள்ளவர்கள்தானே தீர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஆசிரிய வர்க்கமும் துணிவுடன் செயலில் இறங்க வேண்டும்..

')) said...

சதீஷ் குமார்,

கனிந்த வணக்கம். கருத்துரைத்தமைக்கு நன்றி.
விவேகமான சிந்தனை ஆசிரியர்களிடையே ஏற்பட வேண்டும்!
உங்களைப் போன்றவர்கள் இன்னும் பலர் புறப்பட வேண்டும்.

அன்புடன்.
வாசுதேவன் இலட்சுமணன்