Sunday, January 27, 2008

திறம்படக் கற்றல் (Mastery Learning)

திறம்படக் கற்றல் என்பது கல்வித் துறையில் பல காலங்களாக வழங்கிவருகின்ற ஒரு முறைதான். திறம்படக் கற்றல் ( Mastery Learning ) என்பதுகற்பித்தலைப் பற்றிய ஒரு கோட்பாடு - Mastery learning is a philosophy abaout teaching. தகுந்த முறையில் அதே நேரத்தில் ஏற்புடைய சரியான வழிகளைப்பின்பற்றி கற்பித்தால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர் போதிக்கும் பாடங்களைமுழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இக்கொள்கையின் முதன்மையானகூற்றாகும்.

திறம்படக் கற்றலின் வெற்றி மாணவர்கள் எந்த அளவுக்குக் கற்றலில் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதிலும், எந்த அளவுக்குத் தேவையான பொழுது' கற்றல் சிக்கலை எதிர்நோக்குகின்ற காலத்தில்' பிரச்னைகளைக் களைய உதவப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகின்றது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

திறம்படக் கற்றலில் ஆசிரியரின் கற்பித்தல் அணுகுமுறை, பேச்சுமுறை, கட்டளை முறை,விளக்கும் பாங்கு, கற்பிக்கும் பாங்கு, கற்றலில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்கும் உதவி, திறம்படக் கற்றலுக்குத்தேவையான கால அவகாசம், ஆசிரியரின் தெளிவான கற்பித்தல் நோக்கம்,கற்பித்தல் விளைவு முறை( feed back ) குறைநீக்கல் முறை( corrective procedures )போன்றவை மாணவர்களின் அடைவுநிலை வேறுபாட்டிற்கு முக்கியக் காரணங்களாகவிளங்குகின்றன. இவற்றுள் உன்னதமான கற்றல் நடைபெற " கற்பித்தல் விளைவு அறிதல்"( feed back ), குறைநீக்கல் முறையும் ( corrective procedures ) முக்கியப் பங்குவகிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் திறம்படக் கற்றல் முறையைப் பற்றிச் செய்யப்பட்டஆய்வுகளிலிருந்து தெள்ளெனத் தெரிவது யாதெனில்,ஒரு பள்ளியில் நல்லகற்றல் சூழல் இருந்தால், கற்றலில் தனிமனித வேறுபாடு அர்த்தமற்றதாகிறது அதாவது பூஜ்யத்தை நோக்கிச் செல்கின்றது என்றும், பொருத்தமில்லாத சூழலில் அதிகப் பெரும்பான்மையான வேறுபாடு தோன்றுகின்றது என்பதுமே ஆகும்.

குறிப்பு: தமிழ்ப்பள்ளிகளில் திறம்படக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பலஆண்டுகள் ஆகின்றன என்பது ஒருபுறமிருக்க, தகுந்த கற்றல் சூழல் அமைந்திருக்கின்றதா? என்பதே தலையாயக் கேள்வி.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாமே!

Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல்!


பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பண்பாட்டுக்கு முத்திரை பதிக்கிற விழா. மண்பானையில் உலையிட்டு, பால் ஊற்றிக் கொதிக்க வைத்து, அரிசியைக் களைந்துபோட்டு அது வெந்ததும், வெல்லத்தை இடித்துப் போட்டு, இறக்கிவைப்பதும், கரும்புகளை வைத்து, பொங்கலிட்ட பானையுடன் படையல் செய்து கதிரவனுக்கு நன்றி கூறி வழிபடுவதும் வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள்.


அப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் உலகத் தமிழர்களே....


அமைதி, நிம்மதி, நேசம், ஒற்றுமை என்பதே உண்மையான கொண்டாட்டம்.

உங்களின் தூய உள்ளத்திலிருந்து வழங்குவதே வாழ்க்கையின் மகிழ்ச்சியாகும்.


அனைவரது உள்ளங்களிலும் குதூகலம், கலகலப்பு, புத்துணர்வு பரவட்டும்.

சூரிய ஒளிபோன்று - உள்ளூற பிரகாசிக்கின்ற ஒளியே மகத்தானது.

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

சிவகங்கை சுத்தானந்த பாரதி

அச்சமற்ற உண்மை - கிளியே
ஆண்மையுள்ள நெஞ்சம்.
கொச்சையற்ற பேச்சு - நல்ல
கொள்கை கொண்ட நட்பு.
இன்னலற்ற சாந்தம் - யார்க்கும்
இனிது செய்யும் பொறுமை
தன்னலத் தவிர்ப்பு - கிளியே
தருமமாகும் இவையே!

குறிப்பு: பாட்டுக்கொரு புலவன் எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி மட்டுமில்லை; சிவகங்கைசுத்தானந்த பாரதியும்தான். பாரதி பாடல்கள் போலவே படித்த மாத்திரத்தில் பாடம் ஆகிவிடுபவை அவருடைய பாடல்கள்.

மலேசிய நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் நிலை -2

ஒரு காலத்தில் மலேசியாவில் 900 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்றால் பலர் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இப்பொழுது அதன் எண்ணிக்கை 523. ஏன் குறைந்தது? முன்பு தோட்டப்புறத்தில் வாழ்ந்த இந்தியர்களின் அடுத்த தலைமுறை பிழைப்புத் தேடி நகர்ப்புறத்தை நாடினர்; மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததனால் மூடப்பட்டது. மேலும் தோட்டப்புறங்களில் உள்ள குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை( கட்டட அமைப்பைக் கண்டால் பள்ளி எனக் கூற இயலாது என்பது வேறு விசயம் ) கூட்டுச் சேர்த்து " கூட்டுத் தமிழ்ப்பள்ளி " என மாற்றம் கண்டதாலும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்தது. இம்மாதிரியான கூட்டுத்தமிழ்ப்பள்ளிகள் 1979-இன் இறுதியிலும் 1980-இன் ஆரம்பங்களிலும் பிரபலம். ஏனெனில், அடியேன் ஒரு கூட்டுத்தமிழ்ப்பள்ளியில் இருந்து வந்தவன். தீபகற்ப மலேசியாவில் தெற்கே உள்ள "ஜோரான" ஜொகூர் மாநிலத்தில் - சிகாமாட் மாவட்டத்தில் - ச்சா'ஆ ( சாகா வரம் பெற்ற ஊர் ) எனும் சிறு பட்டனத்தில் அமைந்துள்ள " ச்சா'ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளிதான் " அது.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: வரலாற்றில் ஒரு பகுதி!

மலேசியாவில் ( முன்பு மலாயா என்று வழங்கப்பட்டது ) தமிழ்ப்பள்ளிகளின் தொடக்கம் 19-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த காலக்கட்டத்தில்தான் இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் மலாயாவில் தோட்டப்புறங்களில் வேலைசெய்ய வரவழைக்கப்பட்டுள்ளனர்.1816 - இல் பினாங்கில் முதன் முதலாகத் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது என்று சரித்திரம் கூறுகிறது. இருப்பினும் அதன் எண்ணிக்கை மிகக் குறைவு. 1900-ஆம் இறுதியில் நாட்டின் விவசாயம் மற்றும் தோட்டப்புற மேம்பாடின் காரணமாக தென் இந்தியர்களின் வருகையும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டியது என்றால் மிகையாகாது.1912-இல் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஒரு தோட்டத்தில் குறைந்தது 10 சிறார்கள் பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தால் கட்டாயம் அங்கு ஒரு பள்ளி கட்டப்படவேண்டும் என்பது விதி. பெரும்பாலும் அவ்வகை பள்ளிகள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. பல தோட்ட மேலாளர்களின் மெத்தனத் தன்மையால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மோசமாகியது. சரியான கட்டடம் இல்லாதது அடிப்படை பிரச்னையானது. பிறகு மலாயா கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் தோன்றுவதற்கு வாய்ப்பளித்தது. தமிழ்ப்பள்ளிகளுக்குச் சாதகமான சூழல் 1930 முதல் 1937 ஏற்பட்டதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உண்டு. வேலையுண்டு என்று மலாயா வந்த இந்தியர்களின் நிலை கவலைக்கிடமாகியது. அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை அடிப்படை உரிமைகளும் இழந்த மாதிரியான நிலை ஏற்பட்டது. அப்போது இந்திய அரசாங்கம் மலாயா வாழ் இந்தியர்களுக்காக ( தமிழர்கள் பெரும்பான்மையினர் ) குரல் கொடுத்தது.அதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகளிக்கு அதிக மானியம் வழங்கப்பட்டது. தமிழாசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.பின்பு, 1956- இல் "ரசாக் அறிக்கை" ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. தனியார் கொள்கையின் கீழ் இருந்து வந்த சிறுபான்மையினர் பள்ளிகள் ( தமிழ்ப்பள்ளிகளோடு சினப்பள்ளிகளும் இதில் அடங்கும்) 1957-இன் கல்விச் சட்டதின் வழி அவை " தேசிய மாதிரி " எனும் அடைமொழியோடு புதிய தோற்றம் கண்டது.
குறிப்பு:இது மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் ஆரம்ப வரலாற்றின் ஒரு பகுதிதான் !

Thursday, January 10, 2008

நோட்டுப் புத்தகக் குறிப்பு என்ன செய்தது?

'குறிப்பெழுதும் மனிதன் குறிக்கோளுடன் வாழ்வான்' என்றார் பிளாட்டோ. எண்ணத்தில் உதித்தவற்றை உடனே சிறுகுறிப்புடன் எழுதி வைத்துக்கொள்வது சிறப்பு. தக்க தருணத்தில் கைகொடுக்கும்.

ஒருவருடைய உள்ளத்தில் எப்போது கருத்துக்கள் புத்தாக்கச்சிந்னைகள் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றலாம். அவற்றை எப்பொழுதுமே மனதில் பதிய வைக்கவும் முடியாது. ஒதுக்கி வைக்கவும் முடியாது. பதுக்கி வைக்கவும் முடியாது. ஏனெனில், மனித மனம் விசித்திரமானது. சாமானியர்கள் விளங்கிகொள்ள முடியாத விந்தையானது. மனிதன் அன்றாடம் ஆயிரக்கணக்கான எண்ணச் சூழலில் வாழ்பவன். அவன் நினைப்பவற்றையெல்லாம் மூளையானது தன்னுடைய அணுக்களில் பதிய வைத்துக் கொண்டாலும் திரும்ப நினைவுக்குக் கொணர முடியாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. ஆனால், கருத்துக்களையும் எண்ணங்களையும் , தான் கையாளும் குறிப்புப் புத்தகத்தில் ஒதுக்க முடியும், பதிக்க முடியும், பதுக்கவும் இயலும் !

இப்படித்தான், பத்துமொழிகளில் சிறப்புற அறிந்த பன்மொழி வித்தகர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். இந்திய விடுதலை இயக்கத் தீவிரதீரர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகத்தால் இங்கிலாந்தில் வசித்த போதே, தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர். கிரேக்கம் முதலான மொழி வல்லமை காரணமாகப் பல நூல்களைத் தமிழில் தந்தவர். திரு.வி.க. போன்றோர் ஈர்ப்பால் பத்திரிகை ஆசிரியர் ஆனவர். திருக்குறள் அவரை முழுவதுமாக ஆட்கொள்ள அதனை ஆங்கிலத்தில் " The Kural or The Maxim of Thiruvalluvar"(1916) எனும்
தலைப்பில் மொழிப்பெயர்த்தார். எமர்சனின் 'Self Reliance' எனும் கட்டுரையைத் தமிழில் 'தன்னம்பிகை' எனும் தலைப்பில் தந்தார்.

யாரந்த தேசபக்தர் ?

கம்பராமாயணத்திற்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் திறனாய்வு செய்த பெருமையாளர். மேலும், இவர்தான் தமிழில் முதல் சிறுகதையைப் பெற்றெடுத்த தந்தையுமாவார். ஆம். மொழியார்வம், முதிர்ந்த நாட்டுப்பற்று, முனிவர்க்குரிய மனப்பக்கும், வீரனுக்குரிய வேகம், நேர்மையாளருக்குரிய நெஞ்சுரம், பழமையில் பக்தி,புதுமையில் ஆர்வம், தொண்டுணர்வு என முழுவடிவமாக விளங்கியவர் - வ.வே.சுப்பிரமணிய ஐயர்.

வ.வே.சு ஐயர் தம்முடைய 'நோட்டுப் புத்தகத்தில்' தாம் நினைத்த நினைப்புகளை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு உள்ளார். இதில்
என்ன விஷேசம் என்றால், பிறர் பார்த்தாலும் அறியும் வண்ணம் சில குறிப்புகளை எழுதியிருக்கிறார். சில குறிப்புகள் மற்றவர்க்குப் புரியக்கூடாது என்று பதுக்கியும் வைத்து இருக்கிறார். அவர் பிரிட்டிஷாரால் எப்பொழுதும் வேவு பார்க்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சங்கேதக் குறியீடுகளால் சிலவற்றைக் குறித்துள்ளார்.

வ.வே.சு ஐயர், மகாகவி பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'இந்தியா' என்னும் வார இதழ் மடலில் பல உணர்ச்சி கொப்பளிக்கும் செய்தி விவரங்களைத் திரட்டிப் படிப்போருக்கு விழிப்புணர்வையும் நல்கியுள்ளார். உதாரணத்திற்கு இதைப் படிக்கவும்...
"....இதற்கெல்லாம் என்ன காரனம்? ஒரெ ஒரு காரணந்தான். அதாவது உலகத்தில் பரவி வரும் சுதந்திரமும் ஜன ஐக்கியமுமே. இதுவரை
ராஜாகங்கள் ஒன்றோடொன்று சிநெகம் செய்து கொண்டு தங்களுடைய பிரஜைகளை இம்சித்து வந்தார்கள். இன்னும் இம்சித்து
வருகிறார்கள். ஆனால் சென்ற நூறு வருஷங்களுக்குள் ஜனங்கள் விழித்துக் கொண்டார்கள். ராஜாங்கங்கள் செய்கிற அக்கிரமங்களைப்
பார்த்துக்கொண்டு ஜனங்கள் அதை எதிர்க்கத் தீர்மானித்து விட்டார்கள். .....கடைசியில் ஜனங்களுடைய கட்சி வெல்லும் என்பதில்
தடையில்லை..."
( ஆதாரம்: வ.வே.சு ஐயர்- இந்திய இலக்கியச் சிற்பிகள், கோ.செல்வம்(2000).சாகிக்திய அக்காதெமி )

Wednesday, January 9, 2008

சொந்த நூல் நிலையம் வேண்டும் !
வாசிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது, சுவாசிப்பதைப் போன்று. நூல்கள் வாசிப்பதை சிறுவயது முதல் பழக்கப்படுத்தியவர்கள் சிறந்த கல்விமான்களாகவும் அறிஞ்ர்களாகவும் திகழ்கிறார்கள். சிறுவர் சிறுமிகளுக்கு எவ்வாறாயினும் இப்பழக்கத்தை ஊட்டிவிட வேண்டும். ஆசிரியரின் தூண்டுதலைத் தவிர்த்து பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.நூல்களைக் கடன் வாங்கிக் கற்பது நல்லதன்று; சொந்தமாக வாங்கி வைத்துக்கொண்டு கற்க வேண்டும். அதில் சில நன்மையும் உண்டு. சொந்தமாக உள்ள நூல்களில் எந்தவிதமான சிறு குறிப்புகளையும் எழுதி வைக்கலாம். கடன் வாங்கிப் படிக்கும் நூல்களில் அப்படிச் செய்வது எப்படி முடியும்? ஆதலால், வீட்டில் சொந்தமாக நூல் நிலையம் இருக்க வேண்டும். நல்ல நூல்கள் முந்நூறாவது இருப்பது நன்று. கற்றவர் என்றால் அவரிடம் 3000 நல்ல நூல்கள் சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஆங்கில அறிஞர் மார்க் பட்டீசன் கூறியுள்ளார்.சொந்த நூல் நிலையம் குடுப்பச் சொத்தாக, கலைவளர்க்குங் கருவியாக, குடும்பத்தை உருவாக்கும் திருவாக அமையும். வீட்டில் நூல் நிலையம் இருந்தால் ஆண்களும் மட்டுமல்லாமல் பெண்களும் தாங்கள் விரும்பிய நூல்களை எடுத்துப் புலமை பெற்றுவிடக்கூடும். நூல்நிலையத்தில் அறிஞர்கள் நூல்வடிவாக இருந்து எந்த நேரத்திலும் வந்து உதவி செய்யக் காத்திருப்பார்கள்; நள்ளிரவிலும் நாடி வந்து ஐயம் தீர்ப்பார்கள்; தேடிவந்து இன்பமளிப்பார்கள். எந்த நிலையிலும் நடித்தரக் குடும்பத்தினர் சொந்தமாக தலைசிறந்த இலக்கியங்களை வாங்கி வைப்பது கடினமான செயலாகாது. மன்மிருந்தால் வழியுண்டு.

பண வறுமையினும் மன வறுமையே நூல்களை வாங்கத் தடையாகிறது எனலாம்.சொந்த நூல் நிலையம் குடும்பப் பண்பாட்டை வளர்க்குஞ் சாதனம் என்றுண்ர்வீர்!