மலேசியாவில் ( முன்பு மலாயா என்று வழங்கப்பட்டது ) தமிழ்ப்பள்ளிகளின் தொடக்கம் 19-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த காலக்கட்டத்தில்தான் இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் மலாயாவில் தோட்டப்புறங்களில் வேலைசெய்ய வரவழைக்கப்பட்டுள்ளனர்.1816 - இல் பினாங்கில் முதன் முதலாகத் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது என்று சரித்திரம் கூறுகிறது. இருப்பினும் அதன் எண்ணிக்கை மிகக் குறைவு. 1900-ஆம் இறுதியில் நாட்டின் விவசாயம் மற்றும் தோட்டப்புற மேம்பாடின் காரணமாக தென் இந்தியர்களின் வருகையும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டியது என்றால் மிகையாகாது.1912-இல் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஒரு தோட்டத்தில் குறைந்தது 10 சிறார்கள் பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தால் கட்டாயம் அங்கு ஒரு பள்ளி கட்டப்படவேண்டும் என்பது விதி. பெரும்பாலும் அவ்வகை பள்ளிகள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. பல தோட்ட மேலாளர்களின் மெத்தனத் தன்மையால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மோசமாகியது. சரியான கட்டடம் இல்லாதது அடிப்படை பிரச்னையானது. பிறகு மலாயா கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் தோன்றுவதற்கு வாய்ப்பளித்தது. தமிழ்ப்பள்ளிகளுக்குச் சாதகமான சூழல் 1930 முதல் 1937 ஏற்பட்டதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உண்டு. வேலையுண்டு என்று மலாயா வந்த இந்தியர்களின் நிலை கவலைக்கிடமாகியது. அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை அடிப்படை உரிமைகளும் இழந்த மாதிரியான நிலை ஏற்பட்டது. அப்போது இந்திய அரசாங்கம் மலாயா வாழ் இந்தியர்களுக்காக ( தமிழர்கள் பெரும்பான்மையினர் ) குரல் கொடுத்தது.அதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகளிக்கு அதிக மானியம் வழங்கப்பட்டது. தமிழாசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.பின்பு, 1956- இல் "ரசாக் அறிக்கை" ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. தனியார் கொள்கையின் கீழ் இருந்து வந்த சிறுபான்மையினர் பள்ளிகள் ( தமிழ்ப்பள்ளிகளோடு சினப்பள்ளிகளும் இதில் அடங்கும்) 1957-இன் கல்விச் சட்டதின் வழி அவை " தேசிய மாதிரி " எனும் அடைமொழியோடு புதிய தோற்றம் கண்டது.
குறிப்பு:இது மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் ஆரம்ப வரலாற்றின் ஒரு பகுதிதான் !
0 comments:
Post a Comment