Sunday, March 2, 2008

கற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு


விளையாட்டு முறையை பயிற்றியலில் மேற்கொள்வதன் மூலம் விளைபயன்மிக்க நன்மைகளை அடைய முடியும்.தற்போது தோன்றும் புதிய கல்வி முறைகள் பெரும்பாலும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் தோன்றுகின்றன.இவ்விளையாட்டு முறையினால் கற்றலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.இம்முறையில் காணப்படும் கட்டாயமின்மையினால் மாணவர்கள் ஆர்வத்தோடும் பற்றோடும் கற்றலில் ஈடுபடுகின்றனர்.

மொழி விளையாட்டானது விளையாட்டு முறையின் ஒரு கூறாகும்.மாணவர் எளிய முறையில் மொழியைக் கற்கவும்,மொழித் திறனை அடையவும், மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்தவும் இம்மொழிவிளையாட்டு ஓர் இன்றியமையாத பயிற்றியல் கருவியாகப் பயன்பட்டு வருகிறது.

கற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு என்பது மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டுதலையும் கொண்டு குறிப்பிட்ட உபகரணங்களுடன் நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.மொழி விளையாட்டு, மாணவர்கள் கேட்டல், பேச்சு, வாசிப்பு அல்லது எழுத்து போன்ற அடிப்படைத் திறன்களைப் பயன்படுத்தி மொழித்திறனை வளப்படுத்தவும் மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.

மாணவர்கள் சோர்வடையும் வேளையில் இம்மொழி விளையாட்டானது அவர்களுக்குக் கிளர்ச்சியூட்டி ஆர்வத்துடன் பங்கேற்க வழிவகுக்கின்றது.

மொழி விளையாட்டினைப் பயன்படுத்துவதன் மூலம் கொடுக்கப்படும் பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிந்தித்துத் தீர்வு கண்டறிவதால் மாணவர்களின் அறிவு வளப்படுத்தப்படுகின்றது. இம்மாதிரியான விளையாட்டின் போது மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று ஒருவருக்கொருவர் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறார்கள்.மொழி விளையாட்டு மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கி மொழித் திறனை மேம்படுத்த வழிவகுக்குகிறது.

மொழி விளையாட்டின் போது எல்லா மாணவர்களும் பொறுப்பை ஏற்கின்றனர்; தனிப்பட்டவர்களின் உரிமைகள் நன்கு மதிக்கப் பெறுகின்றன; சகோதரத்துவம் வளர்ச்சியடைகின்றது; வற்புறுத்தாமலேயே கூட்டுணர்ச்சியை எல்லோரும் மேற்கொள்கின்றனர். மேலும் கற்றலில் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை.மாணவர்கள் ஆர்வத்தோடும் பற்றோடும் கற்றலில் பங்கேற்க நல்லதொரு தூண்டுதலாக அமைகிறது.மொழி விளையாட்டின் போது மாணவர்கள் பல்வேறு பட்டறிவை அடைகின்றனர்.

இவ்வளளையாட்டின் போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஏரணமாகவும், புதுமையாகவும் நுணுக்கமாகவும் சிந்திக்கத் தூண்டுகிறது. வகுப்பறையிலும் வெளியிலும் ஒரே மாதிரியான சவால் மிகுந்த கற்றல் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புண்டாக்குகிறது.

2 comments:

')) said...

தனிப்பட்ட ஈடுபாடு மாணவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும்.மொழி விளையாட்டில் பெரும்பாலும் வாசிப்பே பயன்பாட்டில் உள்ளது.
அருமையான உங்கள் சிந்தனைகள் இன்றைய சூழலில் கவனிக்கப் படாமல் போவது வேதனையே.

')) said...

நீங்கள் கூறுவது சரிதான். இன்றைய நவீன கணினி வழி ( பல்லூடகச் செறிவட்டு )கற்றலிலும், மாணவர் விளையாட்டு முறையில்தான் பெரும்பாலும் மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.