Sunday, March 2, 2008

அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதித்துவம் பறிபோகும்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி, 24ஆம் திகதி நாட்டின் 12வது தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. வரும் மார்ச், 8இல் நடைபெறவிருக்கும்
பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேசிய முன்னணி நம்பிக்கை கொண்டுள்ளது. ஒரு வார கால தேர்தல்
பிரச்சாரத்திற்குப் பிறகு பல்வெறு மாநிலங்களிலிருந்தும் மக்களின் மனப்போக்கும் பெற்ற விவரத்தின் அடிப்படையில் இந்த நம்பிக்கை எழுந்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேசிய முன்னணியில் மூன்றாவது பங்காளிக்கட்சியாக விளக்கும் ம.இ.காவின் ( அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி )
நிலையை நாடே கூர்ந்து கவனித்து வருகிறது. கடந்த 11 பொதுத்தேர்தலில் சந்திக்காத எதிர்ப்பலைகளை ம.இ.கா சந்தித்து வருகிறது. நாட்டின்
அனைத்து ( பிர மொழி ) நாளிதழ்களிலும் தற்போதைய தேர்தல் பிரச்சாரம் பற்றி விறுவிறுப்பான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
தேசிய முன்னணியின் இரண்டாவது பங்காளிக்கட்சியாக விளங்கும் ம.சீ.சவின் ( சீனர்களைப் பிரதிநிதிக்கும் முதன்மைக்கட்சி ) துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ சான் கோங் சோயின் திடீர் பதவி விலகல் மசீச உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல் சீன சமூகத்தினரின் மனங்களைப் பாதிப்படையச் செய்துள்ளது.
பினாங்கு, சீன சமூகத்தினர் அதிகமாக வாழும் தீவு. இங்கு பாதுகாப்பற்ற நாடாளுமன்ற தொகுதியாகக் கருதப்படுவது 'பத்து காவான்'
தொகுதியாகும். இங்கு பினாங்கு புதல்வர் டான்ஸ்ரீ கோ சூ கூன் பலத்த போட்டியைச் சந்திக்கிறார். நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை எனலாம். பினாங்கு வாழ் இந்திய மக்கள் மிகவும் விழிப்படைந்துள்ளனர். அவர்களின் ஓட்டும் மிகவும் அவசியம் என்பதை தேசிய முன்னணி அறியாமல் இல்லை.
பிரபல சீன நாளேடு ஒன்று 'இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியின் வாக்கு வங்கி' என வர்ணித்துள்ளது. வரும் பொதுத்தேர்தலில் இந்தியர்கள்
கடந்த காலம்போல் முழுமையான வாக்குகளை 'பாரிசான் நேஷனலுக்கு' வாக்களிப்பார்களா ? எப்படி இந்திய வாக்குகள் செயல்படும் என்று புரியாத
புதிராக உள்ளது.

இந்தியர்களின் உணர்வில் 'ஹிண்ராப்' குறிப்பிடத்தக்க அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தைப்பிங் கமுண்டிங் தடுப்பு முகாமில் - உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 'ஐவரில்' ஒருவரான மனோகரன் மலையாளம், கோத்தா அலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக செயல்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தம்முடைய வேட்புமனு தாக்கல் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை எண்ணி மகிழ்வதாகவும், விரைவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அங்கு தாம் வெற்றி பெற்றால் தமது பங்காக மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்குக் கடுமையாகப் பாடுபடப்போவதாகக் அறிவித்துள்ளார். இவரது சார்பில் இவரது மனைவி திருமதி பிஷ்பநீலா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ம.இ.காவைப் பொறுத்தவரை பெரும் வெற்றியுடன் சாதனைப் படைப்பதற்கு விவேகமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ம.இ.காவில் 6 இலட்சத்து 10
ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 85 சதவிதத்தினர் பதிவு பெற்ற வாக்காளர்கள் ஆவர். இவர்களோடு சேந்து அரசு சார்பற்ற இந்திய
இயக்கங்களின் ஆதரவும் பெருமளவில் உண்டு என ம.இ.கா நம்புகிறது.

ம.இ.கா வரலாற்றில் 28 ஆண்டு காலம் பதவி வகிக்கின்ற ஒரே தலைவர் எனப் பலராலும் 'பாராட்டைப்' பெறும் தலவர் ," இந்தியர்கள் இம்முறை
தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால், அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதித்துவம் பறிபோகும்!" என்று எச்சரிக்கிறார். அவரது
வழக்கமான 'பானி'யில் இந்தியர்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் உறுதி அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
வரும் பொதுத் தேர்தலில் ம.இ,காவைச் சேர்ந்த தேசிய முன்னணி வேட்பாளர்களை இந்தியர்கள் ஆதரிக்காமல் போனால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இருக்காது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

0 comments: