Friday, January 1, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2010


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2010.
உங்கள் வாழ்வு வளம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Friday, November 6, 2009

இமயத்திலிருந்து கங்கை நதி...

[Permission is granted to copy, distribute and/or modify this document under the terms of the GNU Free Documentation License, Version 1.2 or any later version published by the Free Software Foundation; with no Invariant Sections, no Front-Cover Texts, and no Back-Cover Texts. Courtesy of GNU Free Documentation .]


இந்திய நாட்டில் கங்கை நதியானது பல கோணங்களில் பிரசித்திப்பெற்றது.ஆன்மீக யாத்திரீகளுக்கு கங்கை அன்னையாகக் காட்சியளிக்கிறாள். அப்பன் ஆதிசிவன் இப்புவியில் முதன் முதலில் குடிகொண்ட தளம் இமயமலையாகும்.



இமயமலையில் 14 அடி உயரத்தில் 'சூகோமுக்' என்ற குகையிலிருந்து கங்கை நதி உற்பத்தியாகிறது. அங்கு கங்கா தேவியின் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு ஒரு மகத்துவம் உள்ளது. நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை 'பனி' மூட்டம் காரணமாக இக்கோயிலை தரிசிக்க இயலாது. ஆனால் கோயிலை மூடும்போது உள்ளே ஒரே ஒரு தீபம் மட்டும் ஏற்றி விடுவார்கள். இந்த தீபம் கடுங்குளிர் பனியிலும் அனையாமல் கோடை காலத்தில் கோயிலை திறக்கும் போதுகூட எரிந்து கொண்டிருக்குமாம்.ஆச்சரியம் தானே!

Wednesday, November 4, 2009

மௌனம் ஒரு மொழி


தடாகம் நிறைந்த நீர்
ஒற்றையாய் மலர்ந்துள்ளது
வெள்ளை மனம்!


இலத்திரன் படம்தான்
காட்சிக்குள் சிக்க வைக்கும் இலாவகம்தான்
மௌனக்கலை!

நீர் உயர தான் உயரும்
ஓரறிவு நீர்வாழ்தாவர‌ இலை சொல்லும்
பற்றற்றத் தத்துவம்!
ஆக்கம்: தேவன்

Wednesday, July 15, 2009

சுவாமி சத்யானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா

[Image Source: Courtesy of http://thestar.com.my/health/story.asp?file=/2009/7/12/health/4297967&sec=health ]

மலாயாவில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பல மகான்கள் நாட்டிற்காகவும், இனம், மொழி, சமயம் மற்றும் பண்பாடிற்காகவும் சேவையாற்றியவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களைப் பற்றி இன்றைய இளையோர் அறியாமல் இருக்கின்றனர். புனித சேவையாற்றியர்களை மறக்கக்கூடாது.

அவர்களில் உயர்ந்த ஜீவனாக மலாயா மக்களிடையே 1940 களில் சேவையால் பிரபலமடைந்த, சுவாமி சத்யானந்தா என்பவர் ஆவார். இந்த மகான்தான் 1950இல் சுத்த சமாஜம் (Pure Life Society)எனும் சேவையமைப்பையும் பின்னர் 1956இல் அனைத்துச் சமய புரிந்துணர்வு மன்றத்தையும் ( Malayan chapter of World Council for Interfaith Cooperation,WCIC ) தோற்றுவித்தார்.

இன்று மலேசிய சுத்த சமாஜம் சுவாமி சத்யானந்தாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.

சுவாமி சத்யானந்தா ஜூலை 15, 1909இல் இலங்கையில் பிறந்தார். சிறுவனாகத் தம் பெற்றோருடன் ஈப்போவில் குடிபெயர்ந்தார். அவர் தந்தை அங்கு விவசாயத்தில் ஈடுபட்டார். அவரது 10வது வயதில் அவரின் தந்தை காலமானார்;ஓராண்டிற்குப் பிறகு அவர் தாயையும் இழந்தார். உறவினர் ஒருவரின் ஆதரவில் சேய்ன்ட் மைக்கல் எனும் கிருஸ்துவப் பள்ளியில் கல்வியை ஆரம்பித்தார். வீட்டில் இந்து சமயத்தையும் புத்த சமயத்தையும் பயின்று வாழ்ந்த வேளையில், வெளியே இஸ்லாம் சமயத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டார். எனவே, இளமையிலேயே ஆன்மீக நாட்டமும் ஈடுபாடும் வெளிப்பட்டது.

தம்முடைய இளமைக் காலத்தில் உலகத்தில் உயர்ந்த மகான்கள், அறிஞர்கள், துறவிகள், அடியார்கள் பற்றிய பல விசயங்களைக் கற்று வந்தார். ஆன்மீக நாட்டம் இவரை பிற்காலத்தில் பிரமச்சாரியாக, சுவாமியாக செப்பனிட வழிவகுத்தது.

இளவயதிலேயே சிங்கப்பூருக்குச் சென்று விவேகானந்தர் பள்ளியிலும், இராமகிருஷ்ண பணிமனையிலும் சேவையாற்றினார். பிற்காலத்தில், மகான் இராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி விஜ்னானந்தா அவர்களின் சீடரானார்.

அடிப்படை ஆன்மீக விசயங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், முறையாக சமயக் கல்வியையும், தத்துவம், சமஸ்கிருதம், தமிழ் மொழியென பல்வேறு கல்வி நிலையங்களில் பாடம் பயின்றார். இவர் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1940 இல் சிங்கப்பூர் திரும்பிய சுவாமி சத்யானந்தா அவர்கள், அங்கு விவேகானந்தா ‍ஆண்கள் பள்ளி மற்றும் சரமணி பெண்கள் பள்ளியிலும் முதல்வராகச் சேவையாற்றினார்.அக்காலக் காட்டத்தில், சமூக விழிப்புணர்வு, மொழி, கலை மற்றும் பண்பாடு தொடர்பான கட்டுரைகளைத் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் எழுதி வந்தார்.அவர் எழுதிய " Glimpses of Malayan History and Influences of Indian Culture on Malaya " எனும் நூல் Malayan Civil Service Examination - MCSE " தேர்வுக்கான பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமயம் மற்றும் அனைத்து சமய நல்லினக்கம் பற்றி பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1940களில் "சுத்த சமாஜம்" வழி அனாதைக் குழந்தைகளுக்கான ஆசிரமத்தை நிறுவியதுடன் மலாயாவின் அரசியல் சமூக வரலாறுகள் பற்றியும் இந்து சமயம் பற்றியும் நூல்கள் எழுதினார். பிரமச்சாரி கைலாசம் என்பது அவருடைய மற்றொரு பெயராகத் திகழ்ந்தது. அவருடைய நூல்களில் குறிப்பிடத்தக்கன: 1940இல் "மலாயா சரித்திரம்"; 1941 இல் "மலாயா தேசிய சரித்திரக் காட்சிகள்"; 1950 இல் "கண்ணன் சரித்திரம்"; 1952 இல் " நமது சமய விளக்கம்" மற்றும் 1953 இல் "உயர்ந்தோர் உலகு" போன்றவையாகும்.

ஏழைகளுக்கும் அனாடைக் குழந்தைகளுக்கும் தமது சேவையை சிங்கப்பூரிலும் மலாயாவிலும் தொடர்ந்தார். அவரது சீடராக அம்மா 'மங்களம்' இன்றுவரை மலேசியாவில் சுத்த சமாஜத்தை நிர்வகிக்கிறார்.

சுவாமி அரவிந்தரின் சீடரான யோகி சுத்தானந்த பாரதியின் வழிகாட்டுதலின் பேரிலும் கேட்டுக்கொண்டதற்காகவும் சுவாமி சத்யானந்தா அவர்கள் "Pure Life Soceity" மலாயாவில் தோற்றுவித்தார்.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் 1948இல் "Pure Life Soceity " சுத்த சமாஜம் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் த‌ம்முடைய 41வது பிறந்த நாளின் போது, ஜூலை 15, 1950 இல் முறையாக பதிவுசெய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் பல ஆனாதக் குழந்தைகள் சுவாமி சத்யானந்தாவின் ஆதரவிலும் மங்கலம் அம்மா அவர்களின் அன்பிலும் வளர்ந்திருக்கிறார்கள். தூய அன்பின் ஊற்றாக 'சுத்த சமாஜம்' திகழ்ந்து வந்துள்ளது. சுவாமி சத்யானந்தாவின் நூற்றாண்டு விழா இன்று முதல் ( 15 - 18th JULY, 2009 ) வரை பல்வேறு கண்காட்சி, மாநாடு, சொற்பொழிவு என நடைபெறுகின்றது.


‍நன்றி:The Star கட்டுரை மூலத்திலிருந்து ஒரு பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.

மேல்விவரங்கள் பெற தொடர்பு கொள்க: 03-77829391, 03-77851087, 03-77828303 மின்னஞ்சல் முகவரி info@purelife.org.my

“The more the ego is eliminated, the nearer man goes to the source of his life.” – Swami Satyananda.





Wednesday, June 24, 2009

அன்பும் நட்பும்



உயிரின் உறைவிடமே அன்பு. அன்பு இல்லாதவர்கள் எலும்பும் தோலும் வெறுமனே போர்த்திக்கொண்டு உலவும் தசைப் பிண்டங்கள் என்கிறார் வள்ளுவ மாமுனிவர்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.( குறள் 80 )

நம் உடலின் 'உள் உறுப்பாகிய' அன்பு என்னும் மின் ஆற்றல் இல்லாமல் வெளி உறுப்புகளாகிய ஐம்பொறிகளால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவப் பெருந்தகை.தொடு உணர்வுக்குத் தோல், சுவையுணர்வுக்கு வாய், நுகருணர்வுக்கு மூக்கு, பார்வைக்குக் கண் மற்றும் கேட்பதற்குச் செவி என ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய 'மனம்' எனும் ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான்.

அன்பு எப்படிப் பட்டதாய் இருக்க வேண்டும்? தேவைக்காகக் காட்டும் அன்பா ? இயல்பாய் மலரும் அன்பா ?

தேவக்காகக் காட்டும் அன்பு, தேவை முடிந்ததும் மறைந்து விடும். உண்மை அன்பு இயல்புகளால் இணைந்தது; ஒத்துப் போவதால் மலர்ந்தது.
தேவைக்காக் காட்டும் அன்பு ஏதோ ஒரு நோக்கத்தைச் சார்ந்தது. காரியம் நிறைவுபெற்றதும் மறையும். உண்மை அன்பு என்பது 'வேண்டுதல் வேண்டாமை இலான் அடி....' என்று திருக்குறள் வெளிக்கொணரும் கடவுள் த‌ன்மையை ஒத்தது.

அத்தகைய உண்மை அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தப்பட்டது.

அன்பின் அருமையை, மனம் உருகி வெளிப்படும் கண்ணீர் ஊரரிய உணர்த்திவிடும். அத்தகைய‌ அன்பை வெறும் தாழ்ப்பாள் இட்டா அடைக்க முடியும் ? அன்பு உடைமை எனும் அதிகாரத்தில் முதற்குறளாக வருகிறது இவ்வாறு...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும். ( குறள் 71 )

உண்மை அன்பு இயல்பாய் மலரும். மலர் பேசும் மொழி உலகறியும். மலரின் தன்மை பருவம் வந்ததும் மலர்வது; அவ்வளவுதான்.
அதை விடுத்து, "ஏன் மலர்ந்தது? எப்போது மலர்ந்த‌து? யாருக்காக மலர்ந்த‌து ? என்ற தர்க்கவாத வினாக்கள் எல்லாம் தேவையில்லாதது.

அதேபோல்தான் உண்மையான அன்பு, அதன் விளைவாய்ப் பிறக்கும் நட்பு கூட இப்படித்தான். உண்மையான நண்பர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. 'இங்குதான் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்' என்ற நினைப்பு மட்டும் இணைக்கும் உறவுப்பாலத்தை! எண்ண அலைகள், உணர்வலைகளாக இருவருக்கிடையே ஓடிக்கொண்டே இருக்கும். ஒத்த‌ சிந்தனை கொண்டவர்களின் எண்ண ஓட்டமும் அத்தகையது.

உண்மை அன்பை உணர்வோம்; அந்த அன்பின் வழி பிறக்கும் உண்மை நண்பர்களை அடையாளம் காண்போம். தன் தேவைகளுக்காக மட்டும் பழகும் போலி நட்புகளைப் புரிந்து கொள்வோம். இயல்பாய்ப் பொங்கும் அன்பே நிலைத்து வாழும்.

Monday, June 22, 2009

தகவல் யுகத்தில் கல்விப் புரட்சி



உலகமயமாயிருக்கும் இன்றைய கணினி யுகத்தில் தமிழ் மின்னாக்கம் பெற்று இன்தமிழ் மின்தமிழாய் இணையத்தில் பவனிவருகின்றது. உலகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வழி துரித வளர்ச்சியைப் பெற்று வரும் இத்தருணத்தில் கல்வித் துறையில் கணினி மற்றும் இணையத்தின் வளர்ச்சியானது பிரமிக்கவைக்கின்றது.


கணினிவழி மொழி கற்பித்தல் கல்வித்துறையில் பல பரிணாமங்களைத் தாண்டி விட்டது. ஒருவர் புதிய பாடமொன்றைக் கற்றுக் கிரகித்தலின் காலம் வழக்கமான கற்றலைவிட கணினி மற்றும் பல்லூடகத்தின் துணை கொண்டு கற்கும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று ஜேம்ஸ் கூளிக் ( 1985,1988 ) எனும் கல்வியாளர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில், கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்லூடகத் துணைக்கருவிகளின் வருகை கல்வியுலகில் விவேகமான கற்றல் கற்பித்தல் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது.


தகவல் தொழில்நுட்பத் துறையை இரு அடிப்படைக் கூறுகளாகப் பகுக்கலாம். ஒன்று அறிவுக்கூறு; மற்றொன்று தொழில்நுட்பக்கூறாகும்.

தொழில்நுட்பக்கூறானது மின்னியல் ஊடகங்களான கணினி, தொலைத்தொடர்பு சாதனம், பல்லூடகத் தகவல் பெறுவழி மற்றும் இதைச்சார்ந்த புதிய தகவல் தொடர்பு நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.


கணப்பொழுதில் செய்தி பரவலாக்கம் என்பது சர்வசாதாரணமாகிவிட்ட இத்தகவல் யுகத்தில் இந்த அதிவிரைவுத் த‌கவல் பரிமாற்றமும் பரவலாக்கமும் புத்தாக்கச்சிந்தனைக்கு வழிவகுக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால், தகவலுக்கும் அறிவிற்கும் தனித் தன்மையை ஏற்படுத்துகின்றது.இந்தத் தகவலும் அறிவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அதன் தொடர்பான பணிகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன.


நுண்ணறிவு (Intelligence) கலந்த மனித அறிவானது(Human Knowledge) சிந்தனையாற்றலை(Thinking Skills முடக்கிவிடும்

வல்லமைபெற்றுள்ளது. இந்த மூன்றின் கலவைதான் தகவல் யுகத்தில், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்போகின்றன.


21ஆம் நூற்றாண்டின் கல்விப் புரட்சிக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் பல்லூடகப் பரவலாக்கமும் பெரும் பங்காற்றிவருகின்றன. தகவல் யுகம் எதிர்பார்க்கும் பண்புகளைக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதே கல்வித்துறையில் பாடத்திட்டதின் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை கல்வியாளர்கள் உண‌ர்ந்திருக்கிறார்கள்.


தகவல் யுகத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கல்வி முறையே இன்று தேவை என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பழைய கல்வி முறையையே பயன்படுத்திவரும் நாடுகள், தகவல் யுகம் கொண்டுவரும் அதிவிரைவு மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் வளர்ச்சி பெறாமல் போய்விடும் அபாயம் உண்டு.


இன்றைய தகவல் யுகத்தில் பயின்றுவரும் மாணவர்கள் பன்மடங்கு அதிகமான தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள், சவால்களையும் எதிர்நோக்குகிறார்கள். இந்நவீன தொழில்நுட்பப் பயன்பாடு விளைபயன்மிக்க மாற்றங்களை, புத்தாக்கச் சிந்தனைகளை மனிதவள மேம்பாட்டிற்கு ஏற்படுத்தவேண்டுமானால், தகவல் யுகத்திற்கான கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Saturday, June 20, 2009

நாள் காட்டியும் கண்ணதாசனும்



நாள்காட்டி கிழிக்கும் போது பாட்டு வருமா?
இன்று வந்ததே.. கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு!
இன்று கண்ணதாசன் பிறந்தநாள். (உண்மையா? )
நாள்காட்டி உபயம் தெரியவந்தது.

தத்துவ ஞானிகளின் கூற்று எப்போதுமே பொய்த்தது இல்லை.அறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பட்ட ஓர் அழகிய ஆடை என்கிறார்கள் வாழ்க்கையை!


இந்த வாழ்க்கைப் பயணத்தில் தடை நேர்கிறது என்றால்....அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் 'தொழில்நுட்பச் சிக்கல்' ஏற்பட்டுள்ளது என்று தெளிவு பெறுங்கள் என்கிறார்கள்.


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் விளங்காத விசயங்கள் கூட‌ எளிதாகப் புரிந்துவிடும்.


உணர்ச்சிசார்ந்த சிக்கல்களுக்குக் கொஞ்சம் அறிவைக் கலந்தால் சரியாகிவிடும்; அறிவு சார்ந்த சிக்கல்களுக்குக் கொஞ்சம் உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.

கவியரசு கண்ணதாசன் பாடல்களிலும் இந்தச் சூட்சுமம் நிறைந்துள்ளது.

80களில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் என்று சொல்லத் தெரியாமல் எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று நண்பர்களுடன் அரட்டையடித்த காலங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

அது ஒரு கானாக் காலம்....

வாழ்க்கை பற்றிய பயமறியா விடலைப் பருவம்.உண்மையிலேயே வாழ்க்கையென்றால் என்னவென்று தெரியாது ...ஆனாலும் ஏதோ தெரிந்தது போல் காட்டிக் கொள்வதற்கு துணைகொடுத்தது கண்ணதாசன் பாடல்கள்தான்.
அப்படி அடிக்கடி அசைபோட்ட பாடல் இதுதான்...

வாழ்க்கையே அலைபோலே.....
நாமெல்லாம் அதன்மேலே...
ஓடம்போலே ஆடிடுவோமே......வாழ்நாளிலே...

சும்மா நையாண்டி செவதாக எண்ணிக்கொண்டு பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

போனால் போகட்டும் போடா..
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..
போனால் போகட்டும் போடா...!

ஆனாலும் உற்சாகம் குறையாமல் சுதந்திர மனப்பான்மையுடன் இரம்மியமாய்ப் பாடிய‌ பாடலும் உண்டு.


காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!

சில சம்யங்களில் சோகம் கப்பிப் கொண்டு சோம்பி இருக்கும் போது ஒருகணத்தில் மனசு அதுபாட்டுக்கு நம்பிக்கையூட்டும் பாட்டைத் தட்டி விடும்....

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

அண்மைக் காலத்தில் மக்களின் மனதில் நம்பிக்கையூட்டி பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒரு கலக்கு கலக்கிய பாட்டு உண்டென்றால் அது "ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடல்தான். இப்பாடல் கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா" பாடலை ஒத்தது; ஒரு வகை தொடர்ச்சி என்று கூட சொல்லலாம்.

புதிய பாடல்களின் வரிகள் பெரும்பாலானவை அவ்வளவு விரைவில் மனதில் தங்காது.( புதிய பாடல் அபிமானிகள் பொறுத்துக் கொள்ளவும் ) ஆனால் கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தைக் கடந்து நினைவில் நிற்கிறது.

இன்னொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால்...அதன் இசையும் மனசின் இன்னொரு 'ட்ரெக்'கில் ஓடிக்கொண்டிருக்கும்.

இப்படித்தான் இன்று விட்டு விட்டு கண்ணதாசன் பாடல்கள் 'ஹம்மிங்' செய்து கொண்டிருக்கையில் புதிய‌பாடல் ஒன்றும் 'க்ரொஸ் ட்ரெக்' செய்தது....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

காலத்தைக் கடந்து வாழும் கண்ணதாசன் புகழ் புதிய படாலாசிரியர்களையும் விட்டு வைக்க வில்லை போலும்.

பி.கு: நாள்காட்டியில் அச்சுப்பிழையா? ஏனெனில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24 என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். எது எப்படி இருப்பினும், வாழ்க அவரது புகழ்!
*வாழ்க்கை நெருக்கடிகளைக் குறைக்க இலக்கியமும் இசையும் கூட துணைபுரிகின்றது.