
தவம் செய்வோர் எதுவரைச் செல்வர் ?
இதற்கு அன்னை அவ்வையார் விடையளிக்கிறார் பாருங்கள்:
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தனமும் தவமும் தான்செவா ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே!
விளக்கம்:
உலகில் மானிடப் பிறப்பே உயர்ந்தது. ஐந்தறிவிலிருந்து ஆறாவது அறிவுநிலைக்கு செல்வது என்பது விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்தப்படுவதாகும். இவ்வுலகில் தோன்றிய உயிரினங்களுள், மிக உயர்ந்த பிறவி மானிடப் பிறவியேயாகும். அவ்வாறு மனிதராய்ப் பிறப்பெடுதாலும் கூன் இல்லாமல், செவிடாய் இல்லாமல், பேடு இல்லாமல் பிறத்தல் அரிது என்று அவ்வை மூதாட்டி பகர்கின்றார். அவ்வாறு பிறந்தாலும் தானமும் தவமும் செய்வது என்பது எல்லாருக்கும் கிடைக்கும் வாய்ப்பில்லை, அரிது என்கிறார். யாரெல்லாம் தானமும் தவமும் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்களுக்கு வானவர் நாடு அதாவது தேவருலகம் வழிதிறந்திடுமாம். உண்மையான வாக்கு; அவ்வை வாக்கு!
அன்னை அவ்வையின் இந்தத் தெளிவான சான்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், மனிதராய் பிறந்தோர் ஒவ்வொருவரும் தனமும் தவமும் செய்வது 'கடமை' என்று அறிகிறோம்.