குறிப்பு: இப்படம் விமானம் புறப்பட்டு கொஞ்ச நேரத்தில் ( 11.24க்கு ) எடுக்கப்பட்டது.
நேரம்: இரவு மணி 10.00
விமான எண் 9W 17 என்று அச்சிடப்பட்ட 'போர்டிங் பாஸ்' இன்னும் சட்டைப்பையில் தான் இருந்தது.ஆனால், அப்போது நான் அதை மீண்டும் எடுத்துப் பார்த்தது ஐந்தாவது தடவையாக இருக்கும். ஏரணச் சிந்தனைக்குப் பழகிப் போன இந்த மனம் செய்யும் விளையாட்டை எண்ணி 'மனசுக்குள்' சிரித்தேன். சத்தம் போட்டு சிரித்தால் 'லூசா ?...பைத்தியமா ?' என்று எண்ணிவிடுவார்களோ எனும் போலி கௌரவம் வேறு!
வாழ்க்கையை ஒரு விளையாட்டாக பார்க்கத் தெரியாததால் தானே மனசுக்குள் போறாட்டம் ஏற்படுகிறது.
'வாழ்க்கையை வாழ்ந்து விடு...ஒவ்வொரு கணமும்'.... என்றோ படித்த விசயத்தை நினைவுக்கோப்பிலிருந்து எடுத்து அறிவு கொடுக்கும்.
மனம் ஏற்றுக்கொண்டால் எல்லாம் இன்பமயம்; உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தால் துன்பமயம்.
நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் அனுபவித்து ஏற்றுக்கொள்ளாமல் தடுமாற்றம் அடைபவர்களையே அதிர்ச்சிக்குள்ளான நிகழ்வுகள் ஏற்படும்போது நிலைகுலைந்து விடுகிறார்கள்.
'நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன்; மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!' என்று இறுகிய மனத்துடன் அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத்தோன்றும்.
வேறொன்றுமில்லை....விசயம் இதுதான்.
ஒரு மணி நேரத்திற்கு முன் நிகழ்ந்த சம்பவம்.......கேட்டால் சிரிப்பீர்கள்!
சொல்லட்டுமா.....சரி..சரி...
பெரிய பயணப்பையையும் சேர்த்து சிறியப்பையையும் தள்ளுவண்டியில் தள்ளி வந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா..?
ஒரு பயணியின் 'லக்கேஜ்'- பயணப்பை 20 கிலோ கிராமுக்குக் கூடுதலாக இருக்கக்கூடாது என்பது 'ஜெட் எர்வேஸ்' விமானத்துக்கான பொதுக் கட்டளை. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலத்திரன் நிறுவையில் பெரிய பயணப்பையை வைத்தேன்.
மேலே சிறிய மின் திரையில் ...22.27 கி.கிராம் என்று காட்டியது.
உடனே அப்பையைத்திறந்து கம்பளிச் சட்டையையும் இன்னும் சில பொருள்களையும் வெளியே எடுத்து தோளில் மாட்டிக்கொள்ளும் சிறிய பைக்குள் நுழைத்தேன்.
மீண்டும் நிறுவையில் வைத்துப் பார்த்தால் அளவை 19.25 கி.கிராம் என்றிருந்தது.
அதிகாரி ஒருவர் பெரிய பையை 'ஸ்கேன்' செய்து அதன் மேல் செவ்வக வடிவிலான 'பார்கோர்ட்' அச்சிடப்பட்ட வழவழப்புக் காகிதத்தை ஒட்டினார்.பிறகு ஏதோ ஒரு
விசையை அழுத்தினார். என் எதிரிலேயே பெரிய பை தானியங்கி இயந்திரத்தால் நகர்த்தப்பட்டு அதிகாரிக்குப் பின்னால் மறைந்திருந்த மற்றொரு தானியங்கி நகர்த்திக்குத் தள்ளப்பட்டு 'காணாமல்' போனது.
அட...மனுசன் ( அதிகாரி ) ஒன்றுமே நடக்காததுபோல் இயல்பாக புன்முறுவல் பூத்த வண்ணம் என்னிடம் ஆங்கிலத்தில் 'நன்றி' சொன்னார்.
இந்த பாழாய்ப்போன மனசுதான் 'பக்' 'பக்'கென கண நேரம் அடித்தது.
பத்திரமாய் நாம் ஏறவிருக்கும் விமானத்திற்குள் அனுப்பினால் சரி...என அந்த அதிகாரியைப் பார்த்து ஒப்புக்கு அவர் பானியில் 'நன்றி' சொன்னேன்.
முதற்சோதனை பெரிய பைக்கு என்றால், இரண்டாவது சோதனை சிறிய பைக்கும் எனக்கும். அங்கே சோதனை அதிகாரியாக நின்றவர்களில் சிலர் தமிழர்கள். அலைபேசி மற்றும் இதர தகவல் சாதனங்கள் இருந்தால் எல்லாவற்றையும் அங்கே ஒரு பெட்டியினுள் வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டார். என் கையில் இருந்த தமிழ் புத்தகத்தைப் பார்த்ததும் தமிழில் 'எங்க சார் போறீங்க ? மலேசியரா நீங்கள் ?' என்று கேட்டார்.
'மலேசியர்தான்....புது டெல்லிக்குச் செல்கிறேன்'
'நானும் மலேசியர்தான்' என்று அவர் கூறும்போது பொருள்கள் யாவும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு அடுத்த இடத்திற்கு நகர்த்தப்பட்டது. தோள்பையைத் திறந்து பார்த்தார். முதலில் நுழைத்த கம்பளி ஆடையும் இன்னும் சில புத்தகங்களும் இருத்தன. சரி பார்த்துவிட்டு என்னிடம் கொடுக்க அதை அப்படியே என் இடது தோளில் மாட்டிய வண்ணம் முன்னே நகர்ந்தேன். அது ஆளை முழுமையாக 'ஸ்கேன்' செய்யும் இடம் என்று உணர்ந்தபோது 'அலாரம்' ஒலித்தது.
தோளில் மாட்டியிருந்த பையை பக்கத்தில் உள்ள மேசையில் வைத்தேன்.
அதை மீண்டும் சோதனையிட்டார். ஒன்றும் கிடைக்கவில்லை போலும்!
சோதனை அதிகாரி மீண்டும் காற்சட்டைக்குள் ஏதேனும் இருக்கிறதா என வினவினார். உள்ளுக்குள் சற்றே பதற்றத்தில் இருந்ததை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பணப்பை மட்டும்தான் உள்ளது என்பதை எடுத்துக் காண்பித்தேன்.
மீண்டும் என்னை 'ஸ்கேன்' பகுதியைத் தாண்டி வரச்சொன்னார்.
இம்முறை எந்த சத்தமும் இல்லை!
'தப்பித்தோம்...அப்படா....! 'என்றிருந்தது.
சரி...பிறகு எப்படி 'அலார ஒலி' எழுப்பியது...?
புரியாத புதிராக இருக்கிறதே.....?
பயணம் தொடர்ந்தது.......விடைதெரியாமல்!
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
sirappaga irukirathu.thodarthu eluthunggal. vaaithugal
தங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எழுத எண்ணம் கொண்டுள்ளேன்.
தாங்களும், அடிக்கடி கருத்தும் மறுமொழியும் இடுங்கள்.
நன்றி.
சில சமயங்களில் என்ன படித்திருந்தாலும் இம்மாதிரியான சூழ்நிலைகளில் வெகுளித்தனம் வெளிபட்டுவிடுகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் தோன்றுகின்றது. அலாரம் ஏன் அடித்தது?
Post a Comment