Tuesday, March 4, 2008

மலாய் மொழியை விரைவாக கற்கலாம் !

மலேசியாவின் தேசிய மொழி 'பஹாசா மலேசியா'- Bahasa Malaysia'. மலாய்க்காரர்கள் தங்கள் மொழியை முன்னிருத்த எண்ணி 'பஹாசா மெலாயு' - Bahasa Melayu என்று எழுதலாயினர். பிறகு அரசாங்கம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தில் மீண்டும் 'Bahasa Malaysia' என்றே பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனப்படுத்தியுள்ளது. அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக மலாய் மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அரசாங்க வேலையே கிடைக்கும்.

ஒரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால், இந்தியர்களில் இங்கு உயர் கல்வி படித்தவர்கள் பலர் 'தேசிய மொழியில்' மிகச் சரளமாக, மொழியாற்றலுடன் பேசும் திறன் பெற்றுள்ளனர்.
அடிப்படையில் இந்தியர்கள் மிக விரைவாக மலாய் மொழியை கற்றுவிடுகிறார்கள், தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் பாமர மக்கள் உட்பட.


இங்கே தமிழ்-சமஸ்கிருதம் எப்படியெல்லம் மலாய் மொழியில் நீக்கமர கலந்துள்ளது பார்த்தீர்களா ?

உதாரணத்துற்கு சில :
1. adi = ஆதி
2. adikara = அதிகாரம்
3. adiwangsa = ஆதிவம்சம்
4. adipati = அதிபதி
5. agama = ஆகமம்
6. angkasa = ஆகாஷம்
7. asal = அசல்
8. asrama = ஆஷ்ரமம்
9. ayah = ஐயா
10.bahagiya = பாக்கியம்
11.baiduri = வைடூரியம்
12.baris = வரிசை

மற்றதை பிறகு தொகுக்கட்டுமா ?

Sunday, March 2, 2008

அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதித்துவம் பறிபோகும்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி, 24ஆம் திகதி நாட்டின் 12வது தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. வரும் மார்ச், 8இல் நடைபெறவிருக்கும்
பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேசிய முன்னணி நம்பிக்கை கொண்டுள்ளது. ஒரு வார கால தேர்தல்
பிரச்சாரத்திற்குப் பிறகு பல்வெறு மாநிலங்களிலிருந்தும் மக்களின் மனப்போக்கும் பெற்ற விவரத்தின் அடிப்படையில் இந்த நம்பிக்கை எழுந்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேசிய முன்னணியில் மூன்றாவது பங்காளிக்கட்சியாக விளக்கும் ம.இ.காவின் ( அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி )
நிலையை நாடே கூர்ந்து கவனித்து வருகிறது. கடந்த 11 பொதுத்தேர்தலில் சந்திக்காத எதிர்ப்பலைகளை ம.இ.கா சந்தித்து வருகிறது. நாட்டின்
அனைத்து ( பிர மொழி ) நாளிதழ்களிலும் தற்போதைய தேர்தல் பிரச்சாரம் பற்றி விறுவிறுப்பான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
தேசிய முன்னணியின் இரண்டாவது பங்காளிக்கட்சியாக விளங்கும் ம.சீ.சவின் ( சீனர்களைப் பிரதிநிதிக்கும் முதன்மைக்கட்சி ) துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ சான் கோங் சோயின் திடீர் பதவி விலகல் மசீச உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல் சீன சமூகத்தினரின் மனங்களைப் பாதிப்படையச் செய்துள்ளது.
பினாங்கு, சீன சமூகத்தினர் அதிகமாக வாழும் தீவு. இங்கு பாதுகாப்பற்ற நாடாளுமன்ற தொகுதியாகக் கருதப்படுவது 'பத்து காவான்'
தொகுதியாகும். இங்கு பினாங்கு புதல்வர் டான்ஸ்ரீ கோ சூ கூன் பலத்த போட்டியைச் சந்திக்கிறார். நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை எனலாம். பினாங்கு வாழ் இந்திய மக்கள் மிகவும் விழிப்படைந்துள்ளனர். அவர்களின் ஓட்டும் மிகவும் அவசியம் என்பதை தேசிய முன்னணி அறியாமல் இல்லை.
பிரபல சீன நாளேடு ஒன்று 'இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியின் வாக்கு வங்கி' என வர்ணித்துள்ளது. வரும் பொதுத்தேர்தலில் இந்தியர்கள்
கடந்த காலம்போல் முழுமையான வாக்குகளை 'பாரிசான் நேஷனலுக்கு' வாக்களிப்பார்களா ? எப்படி இந்திய வாக்குகள் செயல்படும் என்று புரியாத
புதிராக உள்ளது.

இந்தியர்களின் உணர்வில் 'ஹிண்ராப்' குறிப்பிடத்தக்க அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தைப்பிங் கமுண்டிங் தடுப்பு முகாமில் - உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 'ஐவரில்' ஒருவரான மனோகரன் மலையாளம், கோத்தா அலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக செயல்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தம்முடைய வேட்புமனு தாக்கல் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை எண்ணி மகிழ்வதாகவும், விரைவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அங்கு தாம் வெற்றி பெற்றால் தமது பங்காக மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்குக் கடுமையாகப் பாடுபடப்போவதாகக் அறிவித்துள்ளார். இவரது சார்பில் இவரது மனைவி திருமதி பிஷ்பநீலா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ம.இ.காவைப் பொறுத்தவரை பெரும் வெற்றியுடன் சாதனைப் படைப்பதற்கு விவேகமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ம.இ.காவில் 6 இலட்சத்து 10
ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 85 சதவிதத்தினர் பதிவு பெற்ற வாக்காளர்கள் ஆவர். இவர்களோடு சேந்து அரசு சார்பற்ற இந்திய
இயக்கங்களின் ஆதரவும் பெருமளவில் உண்டு என ம.இ.கா நம்புகிறது.

ம.இ.கா வரலாற்றில் 28 ஆண்டு காலம் பதவி வகிக்கின்ற ஒரே தலைவர் எனப் பலராலும் 'பாராட்டைப்' பெறும் தலவர் ," இந்தியர்கள் இம்முறை
தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால், அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதித்துவம் பறிபோகும்!" என்று எச்சரிக்கிறார். அவரது
வழக்கமான 'பானி'யில் இந்தியர்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் உறுதி அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
வரும் பொதுத் தேர்தலில் ம.இ,காவைச் சேர்ந்த தேசிய முன்னணி வேட்பாளர்களை இந்தியர்கள் ஆதரிக்காமல் போனால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இருக்காது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு


விளையாட்டு முறையை பயிற்றியலில் மேற்கொள்வதன் மூலம் விளைபயன்மிக்க நன்மைகளை அடைய முடியும்.தற்போது தோன்றும் புதிய கல்வி முறைகள் பெரும்பாலும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் தோன்றுகின்றன.இவ்விளையாட்டு முறையினால் கற்றலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.இம்முறையில் காணப்படும் கட்டாயமின்மையினால் மாணவர்கள் ஆர்வத்தோடும் பற்றோடும் கற்றலில் ஈடுபடுகின்றனர்.

மொழி விளையாட்டானது விளையாட்டு முறையின் ஒரு கூறாகும்.மாணவர் எளிய முறையில் மொழியைக் கற்கவும்,மொழித் திறனை அடையவும், மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்தவும் இம்மொழிவிளையாட்டு ஓர் இன்றியமையாத பயிற்றியல் கருவியாகப் பயன்பட்டு வருகிறது.

கற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு என்பது மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டுதலையும் கொண்டு குறிப்பிட்ட உபகரணங்களுடன் நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.மொழி விளையாட்டு, மாணவர்கள் கேட்டல், பேச்சு, வாசிப்பு அல்லது எழுத்து போன்ற அடிப்படைத் திறன்களைப் பயன்படுத்தி மொழித்திறனை வளப்படுத்தவும் மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.

மாணவர்கள் சோர்வடையும் வேளையில் இம்மொழி விளையாட்டானது அவர்களுக்குக் கிளர்ச்சியூட்டி ஆர்வத்துடன் பங்கேற்க வழிவகுக்கின்றது.

மொழி விளையாட்டினைப் பயன்படுத்துவதன் மூலம் கொடுக்கப்படும் பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிந்தித்துத் தீர்வு கண்டறிவதால் மாணவர்களின் அறிவு வளப்படுத்தப்படுகின்றது. இம்மாதிரியான விளையாட்டின் போது மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று ஒருவருக்கொருவர் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறார்கள்.மொழி விளையாட்டு மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கி மொழித் திறனை மேம்படுத்த வழிவகுக்குகிறது.

மொழி விளையாட்டின் போது எல்லா மாணவர்களும் பொறுப்பை ஏற்கின்றனர்; தனிப்பட்டவர்களின் உரிமைகள் நன்கு மதிக்கப் பெறுகின்றன; சகோதரத்துவம் வளர்ச்சியடைகின்றது; வற்புறுத்தாமலேயே கூட்டுணர்ச்சியை எல்லோரும் மேற்கொள்கின்றனர். மேலும் கற்றலில் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை.மாணவர்கள் ஆர்வத்தோடும் பற்றோடும் கற்றலில் பங்கேற்க நல்லதொரு தூண்டுதலாக அமைகிறது.மொழி விளையாட்டின் போது மாணவர்கள் பல்வேறு பட்டறிவை அடைகின்றனர்.

இவ்வளளையாட்டின் போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஏரணமாகவும், புதுமையாகவும் நுணுக்கமாகவும் சிந்திக்கத் தூண்டுகிறது. வகுப்பறையிலும் வெளியிலும் ஒரே மாதிரியான சவால் மிகுந்த கற்றல் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புண்டாக்குகிறது.

நல்லாசிரியருக்குரிய குணநலன்கள்!

நல்லாசிரியர் என்று யாரைக் குறிக்கிறோம்? சமூகத்தில் இயல்பாகவே ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு உண்டு. ஆசிரியர் நல்லாசிரியர் ஆகும் போது சிறப்புமதிப்பு வழங்கப்படுகிறது. முதலில் வழங்குபவர்கள் மாணாக்கர்களே மாணவர்களின் வழிபெற்றோர்களுக்கும் தெரிய வரும்போது நல்லாசிரியர்களின் நன்மதிப்பு சமூக அங்கீகாரம்பெற்று விடுகின்றது.

சரி, நல்லாசிரியருக்குறிய குணநலன்கள் எப்படி இருக்க வேண்டும் ?

முதலில், அவர் மாணவர் நலனுக்காகப் பாடுபடுபவராயிருத்தல் வேண்டும். வகுப்பறையின்உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு எவை நன்மை பயக்கும் விசயங்கள் என்று தீர்மாணித்து அதற்காகப் போராடுபவரே நல்லாசிரியர் தகுதிக்கு உரியவவர் ஆவார். ஆசிரியரின் எந்த முடிவும் மாணவர்களிடன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை விழிப்புணர்ந்துமிகச் சரியான, மாணவர்களின் உயர்வுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கும் தீர்க்கச் சிந்தனை படைத்தவராயிருத்தல் வேண்டும். நல்லாசிரியர் இயல்பாகவே தன்னலமற்றவராவார். அவர்எப்போதுமே மாணவர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்.

இரண்டாவது, நல்லாசிரியர் என்பவர் மற்றவரை மதிக்கும் நற்பண்பு உடையவர். அவர்கள்தங்கள் வகுப்பு மாணவர்களை மதிக்கிறார்கள்;
வகுப்பறையில் மாணவர்களின் செயலூக்கங்களையும் நிர்வாகத்தையும் மதிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களையும், சமூக அங்கத்தினரையும்மதிக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு உரிய தரத்தை சுயமதிப்பிட்டு தங்கள் துறையில் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.
மூன்றாவது யாதெனில், நல்லாசிரியர் தொடர்ந்து கற்கிறார். பொதுவாக தம்மைச் சுற்றி நடைபெறும்அனைத்துத் துறைகளிலும் ஓரளவு விசயஞானம் பெற்றவராயிருக்கிறார். அவர் தொடர்ந்து தம் துறையைச்சார்ந்த நூலகளை வாசித்து காலத்துக்கேற்பத் தயார்நிலையில் இருக்கிறார். அறிவுசார்ந்த விசயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுகிறார்.

நான்காவது, நல்லாசிரியர் ஒரு நல்ல உரையாளராகவும் திகழ்கிறார். ஒரு கருத்தை சபையறிந்து நன்கு விளக்கும்ஆற்றல் மிக்கவராவார். அதே சமயத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களையும் நன்கு கேட்கிறார். மாணவராகட்டும் பெற்றோராகட்டும் அவர்கள் சொல்வதை நன்கு உள்வாங்கிக் கொள்கிறார். பிறகு சமயோசித உத்தியில் பிரச்னைகளுக்குவழி காண்கிறார்.

இறுதியாக, கற்றல் தொடர்ந்து நிகழ மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் எந்தனை வலியுறுத்துகிறார்.நல்லாசிரியர், மாணவர்களின் 'கற்றல் நோக்கங்கள் ' அடைவதற்கு அவர்களுடன் இணைந்தே செயல் திட்டங்கள்வகுக்கிறார். அவற்றை விவேகமான முறையில் செயல்படுத்தி 'கற்றல் இலக்கு ' அடைவதற்கு மாணவர்களுக்கு எப்போதும் உதவுகிறார்.
பி.கு : தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..? ஒவ்வொரு ஆசிரியரும் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்!

Saturday, March 1, 2008

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு
நம்மில் பெரும்பாலோர், மேற்கத்திய பானியின் தாக்கத்தால் இன்று இந்நவீன உலகில் சிக்குண்டு இருக்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ ஒருவகை
மனப்பாதிப்புக்கும், சில சமயம் உளைச்சலுக்கும் ஆளாகிறோம். சில சமயம் என்ன இது செக்கு மாட்டு வாழ்க்கை ? என்று நொந்துகொள்கிறோம். ஏன் ?


நமக்குப் பல கடமைகள். நம் பணி, நம் குடும்பம், நம் நண்பர்கள் வட்டம், நம் சமூகக்கடப்பாடு மற்றும் அரசியல் என்று தொடர்பு ஏற்படுத்தி
விரிவுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். சாதாரண பொழுது போக்குக் காரியங்களில் கூட நம் செயல்பாடும் சக்தியும் மிகுதியாகத் தேவைபடுகிறது.


ஏன் இந்நிலை ? ஏனெனில், நாம் அளவுக்கு அதிகமாக வெளிநோக்கிய விசயங்களில் மூழ்கியுள்ளோம். வெளிநோக்கிய பயணக் களைப்பை ஈடுசெய்ய உள்நோக்கியப் பயணம் (inner journey) தேவைப்படுகிறது.
உடனடி நிவாரணம் ஒன்று இருக்கிறது. நம் ஆதாரத்துடம் தொடர்பு கொண்டு உயர் உணர்வுகளின் சக்திகளைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை!
நம் ஒவ்வொருவரின் மனமும் மகத்தான சக்தி படைத்தது என்பதை மனோவியல் அறிஞர்கள் மற்றுமன்றி ஆன்மீக குருமார்களும் நிரூபித்து
வருகிறார்கள்.


வாழ்க்கைப் பாதையில் எல்லாமே மகிழ்ச்சி நிறைந்தவையாக இருப்பதில்லை! சில இடர்பாடுகளும் சோதனைகளும் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கின்ற கோணதில் அந்தந்த சமயத்தில் நம் மனநிலை எப்படி இருக்கிறதோ அவ்வாறே பிரதிபலிக்கின்றோம்.

சில சம்யங்களில் அளவுக்கு அதிகமாக வெளி விசயங்களில் சுழன்றுக் கொண்டிருப்பதால் ஆழ்மனத் தொடர்பு தடைபடுகிறது. தற்காலிகமாக பிரபஞ்சப் பேருணர்வின் தொடர்பிலிருந்து விடுபட்டுள்ளோம். ஆழ்மனதிற்கும்( subconscious mind ) பிரபஞ்ச மனதிற்கும் ( cosmic conscious mind ) உள்ள தொடர்பு, அது சம்பந்தமான அறிவு எல்லாம் நம் பள்ளிகளில் இன்னும் போதிக்கப்படவில்லை. வருங்காலங்களில் அவை முக்கியத்துவம் பெறலாம்! நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கும் நமக்குப் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது. உள் மன உயர் உணர்வுடன் கலக்க சிறிது காலம் நம்மையே சுய சோதனைக்கு ஆளாக்க வேண்டியுள்ளது.நமக்கும் புற சூழ்நிலையில் ஏற்படுகின்ற மாற்றஙகளையும் கூர்ந்து கவனிக்க விழிப்புணர்வும் அவசியம்.


ஆழ்மனதையும் பிரபஞ்ச அறிவையும் திறக்கும் நல்ல திறவுகொல் - தியானம் மட்டுமே! பிரார்த்தனை, தியானம், யோகம் இவையெல்லாம் பத்திரமான திறவுகோல்கள். இவற்றுடன் மனதைப்பற்றியும்,எண்ணங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த பயிற்சியும்,பொறுமையும்,
ஆதரவும் தேவைப்படுகிறது.


உண்மையிலேயே இது இயற்கையான ஒன்று. நம் சமூகத்தினர் "அர்ப்பணிப்பு"எனும் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவகள். முயற்சிக்கு, வெற்றி - தோல்வி என்ற இரண்டு முடிவுகள் உண்டு. "அர்ப்பணிப்புக்கு" வெற்றி என்ற ஒரு முடிவுதான் இருக்க முடியும். அத்தகைய மனநிலை வாய்க்க, அல்லது பழக்கப்படுத்திக்கொள்ள விழைவது நன்மை பயக்கும். ஆழ்மனத் தொடர்பும், பிரபஞ்சத் தொடர்பும் கிட்ட வேண்டும் என்ற மனதைக் கடந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் காரியங்கள் ஆற்றும் போது,இயற்கை அந்தப் பிரபஞ்ச பேராற்றல் நமக்குப் பலனை வாரி வழங்கும்! அதன் பிறகு, அப்பேராற்றலோடு தொடர்ந்து பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அவா கூடுவதை மெய்யாக உணரலாம். உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாமே பேசும்.

'நாம்தான் இந்தப் பிரபஞ்சம்; இப்பிரபஞ்சம்தான் நாம்' - அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம்! என்பதைப் போல உயர் சிந்தனை-
உயர் எண்ன அலைகள் நம்மைச் சுழ்ந்திருக்கும்.

பினாங்கில் - மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி !
பினாங்கு மாநிலம் பல வரலாறுச் சிறப்புக்கள் கொண்டது. தமிழகத்தினர்க்கு பெரும்பாலும் பினாங்கு நிரம்ப பிரபலம்; மலாயா என்பதைவிட! முதன் முதலாக பிரிட்டிஷார் காலெடுத்து வைத்ததும் இந்த பினாங்குத் தீவில்தான்.


இங்கிருந்து தங்களின் துரைத்தனத்ந்த் (காலனித்துவம்) தென்கிழக்காசியாவில் பல இடங்களுக்கு விரிவுபடுத்தினர். மற்றொரு சிறப்பு யாதெனில், இங்குதான் தென்கிழக்காசியாவிலேயே முதன் முதலாக ஆங்கிலப் பள்ளியைத் தோற்றுவிக்கப்பட்டது.


1816இல், அக்டோபர் 21ஆம் திகதியன்று இந்த ( மேலே காணப்படும் ) 'பிரி ஸ்கூல்' ( Penang Free School ) -ஆங்கிலப் பள்ளி தொடங்கப் பெற்றது. அன்றைய பிரிட்டீஷ் அரசின் மத குருவாக இருந்த ரெவரெண்ட் ஆர்.எஸ்.ஹட்சிங்ஸ் என்பவரே இப்பள்ளி தோன்றக் காரணமாக இருந்தவர்.


இன்று இது மாநில அருங்காடியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1927இல் 'பிரி ஸ்கூல்' "கிரீன் லேன்" பகுதிக்க் மாற்றப்பட்டது. ரெவரெண்ட் ஹட்சிங்ஸ், ஆரம்பத்தில் ஏழைக்குழந்தைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் கல்வி போதிக்கும் நோக்கத்திலும், அக்காலக்கட்டத்தில் பினாங்கில் வசித்து கொண்டிருந்தவர்களுக்குத் தாய் மொழியையும் போதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளியை அமைக்க அன்றைய அரசிடம் முறையாக அனுமதி பெற்றார்.


குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், அப்பள்ளியில் பயில்கின்ற பல்லின குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பினால் ஆங்கிலமும் போதிக்கப்பட்டது. மேலும் உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு இப்பள்ளியில் தமிழும், மலாய் மொழியும் போதிக்கப்பட்டது.


தாய்மொழிக் கல்வியுடன் தொழில் கல்வியும் இந்த 'பிரி ஸ்கூலில்' போதிக்கப்பட்டது என்பதும் கூடுதல் தகவல்.


இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு பொதிய ஆதரவு இல்லாத காரணத்தால் தமிழ், மலாய் மற்றும் தொழில் கல்வி போதிப்பது நிறுத்தப்பட்டது!