Tuesday, February 24, 2009

ஆசிரியர் தன் மாணவர்களுக்கு எவற்றைக் கற்பிக்க வேண்டும் - ஆபிரகாம் லிங்கன்


ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுக்கு எவற்றைக் கற்பிக்க வேண்டும். எவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை உணர்த்த வேண்டி, உலகின் தலைசிறந்த அரசியல்வாதியாகிய ஆபிரகாம் லிங்கன், தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பியபோது பள்ளி ஆசிரியருக்கு எழுதிய மடல் தான் இது.


நிதானமாய்ப் படித்துப் பார்த்து ஆசிரியர்களும் தெளிவு பெறவேண்டும்; மாணவர்களும் தெளிவு பெறவேண்டும்; பெற்றோர்களும் தெளிவு பெறவெண்டும்.
அன்புள்ள ஆசிரியருக்கு,


எனது மகன் இன்று தன் பள்ளிப் படிப்பைத் தொடங்குகிறான். கொஞ்ச காலத்திற்குப் பள்ளிப் படிப்பு அவனுக்குப் புதிதாக இருக்கப் போகிறது. ஆதலால் அவனைப் பரிவோடு நடத்துவீர்கள் என நம்புகிறேன்.


எல்லா மனிதர்களும் நீதியானவர்களல்லர். நேர்மையானவர்களல்லர் என்ற உண்மையை அவன் கற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஒவ்வொஎரு கயவனும் - ஒரு வீரனை முன் மாதிரியாகக் கொண்டுள்ளான் என்றும்- ஒவ்வொரு ஒழுக்கங்கெட்ட அரசியல்வாதியும் ஒரு தன்னலமற்ற தலைவனை முன்மாதிரியாகக் கொண்டுள்ளான் என்றும் கற்றுத்தர வேண்டும். அவ்வாறே, ஒவ்வொரு பகைவனுக்கும் கூட ஒரு நண்பன் இருக்கிறான் என்ற உண்மையைக் கற்றுக் கொடுங்கள்.


பொறாமைப்படுவதிலிருந்து அவனைத் திசை திருப்புங்கள், முடிந்தால் அமைதியாகத் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வதன் இரகசியத்தைக் கற்றுக் கொடுங்கள்.


வலிமையற்றவர்களைக் கொடுமைப்படுத்தி அவர்கள் மீது வெற்றி கொண்டுவிட்டோம் என எண்ணுபவர்களே உண்மையில் தோல்வியைத் தழுவியவர்கள் என்பதை அவன் கற்றுக் கொள்ளட்டும்.


ஏமாற்றுவதைவிட தோல்வியடைவது எவ்வளவோ மேன்மையானதெனக் கற்றுத் தாருங்கள். எல்லோரும் தவறு என்று சொல்லும்போதும் - தன்னுள்ளத்தில் இயல்பாக எழும் சிந்தனைகள் மீது, உறுதியான நம்பிக்கை கொள்ளக் கற்றுத்தாருங்கள்.


எளியோரிடம் எளிமையாகவும், பரிவோடும் இருக்கவும், வலியோருடன் வன்மையாக இருக்கவும் அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.


முடிந்தால், புத்தகம் படிப்பதன் அதிசயத்தைக் கற்றுக் கொடுங்கள். அதே நேரத்தில், வானத்துப் பறவைகள் பற்றியும் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளைப்பற்றியும், இயற்கையெழில் பொங்கும் பச்சை மலைகளின் மீது வளர்ந்துள்ள வண்ண மலர்களைப் பற்றியும், ஆழமாக தியானிக்கக் கற்றுக் கொடுங்கள்.


எல்லோரும் சொல்வதுபோல், கூட்டத்தைப் பின்பற்றாமலிக்கத் தேவையான வலிமையை - முடிந்தால் என் மகனுக்குக் கொடுங்கள். எல்லோர் சொல்வதையும் கேட்கவும் - ஆனால் கேட்பதை உண்மை என்ற சல்லடையில் வடிகட்டி நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ளவும் - கற்றுக் கொடுங்கள்.


முடிந்தால் தான் வருத்தமாக இருக்கும்போதும் - எப்படிச் சிரித்துக் கொள்வது எனவும் கற்றுக் கொடுங்கள். அழுவதில் வெட்கப்பட எதுவுமில்லை எனக் கற்பியுங்கள்.


அவனது திறமைகளை நல்ல விலைக்கு விற்கவும் - அதே நேரத்தில், அவனது இதயத்துக்கும், ஆன்மாவுக்கும் விலை நிர்ணயிக்காமலிருக்கவும் - கற்பியுங்கள்.


ஊளையிடும் கூட்டத்தின் முன், தன் காதுகளை மூடிக் கொள்ளவம், தான் செய்வது சரி என்று பட்டால் அவர்களை எதிர்த்து நின்று மோதவும் கற்பியுங்கள்.


பொறுமையிழந்து துடிப்பாக வாழத் தேவையான துணிவை அவன் பெறட்டும்; எப்போதும் தன்மீது மேலான நம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுங்கள். அப்போதுதான், அவன் மனித குலத்தின் மீதும், கடவுளின் மீதும் மேலான நம்பிக்கை கொண்டிருப்பான்.


இது ஒரு மிகப்பெரிய கட்டளை; ஆனால் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். அவன் மிகவும் நல்ல சிறுவன்; ஏனெனில் அவன் என் மகன்.


அன்புடன்,


ஆபிரகாம்லிங்கன்

Monday, February 23, 2009

குறைந்த எழுத்துகள் உள்ள குறள்!மிகக் குறைந்த அளவு எழுத்துகள் கொண்ட குறள் என்னவென்று அறிவீரா....?

இதோ....

காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. ( 1242 )

விளக்கம்:
அந்த மனிதருக்கு என் மீது அன்பு இல்லாதபோது அன்பு நெஞ்சே, நீ மட்டும் அவரையே நினைந்து வாடுவது அறியாமையன்றோ!


எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது எதுவோ கிடைத்தது என்பார்களே....
அப்படித்தான் இதுவும்.......

கண்ணில் பட்டது.....பகிர்ந்து கொள்கிறேன்.