Wednesday, June 24, 2009

அன்பும் நட்பும்



உயிரின் உறைவிடமே அன்பு. அன்பு இல்லாதவர்கள் எலும்பும் தோலும் வெறுமனே போர்த்திக்கொண்டு உலவும் தசைப் பிண்டங்கள் என்கிறார் வள்ளுவ மாமுனிவர்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.( குறள் 80 )

நம் உடலின் 'உள் உறுப்பாகிய' அன்பு என்னும் மின் ஆற்றல் இல்லாமல் வெளி உறுப்புகளாகிய ஐம்பொறிகளால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவப் பெருந்தகை.தொடு உணர்வுக்குத் தோல், சுவையுணர்வுக்கு வாய், நுகருணர்வுக்கு மூக்கு, பார்வைக்குக் கண் மற்றும் கேட்பதற்குச் செவி என ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய 'மனம்' எனும் ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான்.

அன்பு எப்படிப் பட்டதாய் இருக்க வேண்டும்? தேவைக்காகக் காட்டும் அன்பா ? இயல்பாய் மலரும் அன்பா ?

தேவக்காகக் காட்டும் அன்பு, தேவை முடிந்ததும் மறைந்து விடும். உண்மை அன்பு இயல்புகளால் இணைந்தது; ஒத்துப் போவதால் மலர்ந்தது.
தேவைக்காக் காட்டும் அன்பு ஏதோ ஒரு நோக்கத்தைச் சார்ந்தது. காரியம் நிறைவுபெற்றதும் மறையும். உண்மை அன்பு என்பது 'வேண்டுதல் வேண்டாமை இலான் அடி....' என்று திருக்குறள் வெளிக்கொணரும் கடவுள் த‌ன்மையை ஒத்தது.

அத்தகைய உண்மை அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தப்பட்டது.

அன்பின் அருமையை, மனம் உருகி வெளிப்படும் கண்ணீர் ஊரரிய உணர்த்திவிடும். அத்தகைய‌ அன்பை வெறும் தாழ்ப்பாள் இட்டா அடைக்க முடியும் ? அன்பு உடைமை எனும் அதிகாரத்தில் முதற்குறளாக வருகிறது இவ்வாறு...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும். ( குறள் 71 )

உண்மை அன்பு இயல்பாய் மலரும். மலர் பேசும் மொழி உலகறியும். மலரின் தன்மை பருவம் வந்ததும் மலர்வது; அவ்வளவுதான்.
அதை விடுத்து, "ஏன் மலர்ந்தது? எப்போது மலர்ந்த‌து? யாருக்காக மலர்ந்த‌து ? என்ற தர்க்கவாத வினாக்கள் எல்லாம் தேவையில்லாதது.

அதேபோல்தான் உண்மையான அன்பு, அதன் விளைவாய்ப் பிறக்கும் நட்பு கூட இப்படித்தான். உண்மையான நண்பர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. 'இங்குதான் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்' என்ற நினைப்பு மட்டும் இணைக்கும் உறவுப்பாலத்தை! எண்ண அலைகள், உணர்வலைகளாக இருவருக்கிடையே ஓடிக்கொண்டே இருக்கும். ஒத்த‌ சிந்தனை கொண்டவர்களின் எண்ண ஓட்டமும் அத்தகையது.

உண்மை அன்பை உணர்வோம்; அந்த அன்பின் வழி பிறக்கும் உண்மை நண்பர்களை அடையாளம் காண்போம். தன் தேவைகளுக்காக மட்டும் பழகும் போலி நட்புகளைப் புரிந்து கொள்வோம். இயல்பாய்ப் பொங்கும் அன்பே நிலைத்து வாழும்.

6 comments:

')) said...

"அன்பு என்பது தெய்வமானது" அதனால்தான் தெய்வப்புலவன் வள்ளுவனும் அதற்கு இத்தனை முக்கியத்துவம் தந்திருக்கிறார் தான் இயற்றிய திருக்குறளில் என்பதை அறியமுடிகிறது.

')) said...

சிவனேசு ,
உண்மைதான். அன்பு உள்ளம்
நிறைந்தவர்கள் இறைவனின்
நேரடி கண்காணிப்புக்கு ஆட்கொள்ளப்படுவர். தெய்வாம்சம் பொருந்திய சித்தர்களும் யோகிகளும் அத்தகையவர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

Anonymous said...

சிறப்பான கட்டுரை.

Anonymous said...

சிறப்பபான படைப்பு

Anonymous said...

சிறப்பபான படைப்பு

')) said...

தங்களின் படைப்பு சிறப்பாக இருக்கிறது. தொடர்க உங்கள் பணியை. தமிழோடு உயர்வோம்.