Monday, June 22, 2009

தகவல் யுகத்தில் கல்விப் புரட்சி



உலகமயமாயிருக்கும் இன்றைய கணினி யுகத்தில் தமிழ் மின்னாக்கம் பெற்று இன்தமிழ் மின்தமிழாய் இணையத்தில் பவனிவருகின்றது. உலகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வழி துரித வளர்ச்சியைப் பெற்று வரும் இத்தருணத்தில் கல்வித் துறையில் கணினி மற்றும் இணையத்தின் வளர்ச்சியானது பிரமிக்கவைக்கின்றது.


கணினிவழி மொழி கற்பித்தல் கல்வித்துறையில் பல பரிணாமங்களைத் தாண்டி விட்டது. ஒருவர் புதிய பாடமொன்றைக் கற்றுக் கிரகித்தலின் காலம் வழக்கமான கற்றலைவிட கணினி மற்றும் பல்லூடகத்தின் துணை கொண்டு கற்கும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று ஜேம்ஸ் கூளிக் ( 1985,1988 ) எனும் கல்வியாளர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில், கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்லூடகத் துணைக்கருவிகளின் வருகை கல்வியுலகில் விவேகமான கற்றல் கற்பித்தல் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது.


தகவல் தொழில்நுட்பத் துறையை இரு அடிப்படைக் கூறுகளாகப் பகுக்கலாம். ஒன்று அறிவுக்கூறு; மற்றொன்று தொழில்நுட்பக்கூறாகும்.

தொழில்நுட்பக்கூறானது மின்னியல் ஊடகங்களான கணினி, தொலைத்தொடர்பு சாதனம், பல்லூடகத் தகவல் பெறுவழி மற்றும் இதைச்சார்ந்த புதிய தகவல் தொடர்பு நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.


கணப்பொழுதில் செய்தி பரவலாக்கம் என்பது சர்வசாதாரணமாகிவிட்ட இத்தகவல் யுகத்தில் இந்த அதிவிரைவுத் த‌கவல் பரிமாற்றமும் பரவலாக்கமும் புத்தாக்கச்சிந்தனைக்கு வழிவகுக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால், தகவலுக்கும் அறிவிற்கும் தனித் தன்மையை ஏற்படுத்துகின்றது.இந்தத் தகவலும் அறிவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அதன் தொடர்பான பணிகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன.


நுண்ணறிவு (Intelligence) கலந்த மனித அறிவானது(Human Knowledge) சிந்தனையாற்றலை(Thinking Skills முடக்கிவிடும்

வல்லமைபெற்றுள்ளது. இந்த மூன்றின் கலவைதான் தகவல் யுகத்தில், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்போகின்றன.


21ஆம் நூற்றாண்டின் கல்விப் புரட்சிக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் பல்லூடகப் பரவலாக்கமும் பெரும் பங்காற்றிவருகின்றன. தகவல் யுகம் எதிர்பார்க்கும் பண்புகளைக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதே கல்வித்துறையில் பாடத்திட்டதின் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை கல்வியாளர்கள் உண‌ர்ந்திருக்கிறார்கள்.


தகவல் யுகத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கல்வி முறையே இன்று தேவை என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பழைய கல்வி முறையையே பயன்படுத்திவரும் நாடுகள், தகவல் யுகம் கொண்டுவரும் அதிவிரைவு மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் வளர்ச்சி பெறாமல் போய்விடும் அபாயம் உண்டு.


இன்றைய தகவல் யுகத்தில் பயின்றுவரும் மாணவர்கள் பன்மடங்கு அதிகமான தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள், சவால்களையும் எதிர்நோக்குகிறார்கள். இந்நவீன தொழில்நுட்பப் பயன்பாடு விளைபயன்மிக்க மாற்றங்களை, புத்தாக்கச் சிந்தனைகளை மனிதவள மேம்பாட்டிற்கு ஏற்படுத்தவேண்டுமானால், தகவல் யுகத்திற்கான கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2 comments:

')) said...

//தகவல் யுகத்திற்கான கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்//

உண்மைதான், தங்களின் இந்த சிந்தனை செயல்வடிவம் பெற்றால் அது கற்கும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மையளிக்கும்.

')) said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.