நாள்காட்டி கிழிக்கும் போது பாட்டு வருமா?
இன்று வந்ததே.. கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு!
இன்று கண்ணதாசன் பிறந்தநாள். (உண்மையா? )
நாள்காட்டி உபயம் தெரியவந்தது.
தத்துவ ஞானிகளின் கூற்று எப்போதுமே பொய்த்தது இல்லை.அறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பட்ட ஓர் அழகிய ஆடை என்கிறார்கள் வாழ்க்கையை!
இந்த வாழ்க்கைப் பயணத்தில் தடை நேர்கிறது என்றால்....அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் 'தொழில்நுட்பச் சிக்கல்' ஏற்பட்டுள்ளது என்று தெளிவு பெறுங்கள் என்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் விளங்காத விசயங்கள் கூட எளிதாகப் புரிந்துவிடும்.
உணர்ச்சிசார்ந்த சிக்கல்களுக்குக் கொஞ்சம் அறிவைக் கலந்தால் சரியாகிவிடும்; அறிவு சார்ந்த சிக்கல்களுக்குக் கொஞ்சம் உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.
கவியரசு கண்ணதாசன் பாடல்களிலும் இந்தச் சூட்சுமம் நிறைந்துள்ளது.
80களில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் என்று சொல்லத் தெரியாமல் எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று நண்பர்களுடன் அரட்டையடித்த காலங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
அது ஒரு கானாக் காலம்....
வாழ்க்கை பற்றிய பயமறியா விடலைப் பருவம்.உண்மையிலேயே வாழ்க்கையென்றால் என்னவென்று தெரியாது ...ஆனாலும் ஏதோ தெரிந்தது போல் காட்டிக் கொள்வதற்கு துணைகொடுத்தது கண்ணதாசன் பாடல்கள்தான்.
அப்படி அடிக்கடி அசைபோட்ட பாடல் இதுதான்...
வாழ்க்கையே அலைபோலே.....
நாமெல்லாம் அதன்மேலே...
ஓடம்போலே ஆடிடுவோமே......வாழ்நாளிலே...
சும்மா நையாண்டி செவதாக எண்ணிக்கொண்டு பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
போனால் போகட்டும் போடா..
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..
போனால் போகட்டும் போடா...!
ஆனாலும் உற்சாகம் குறையாமல் சுதந்திர மனப்பான்மையுடன் இரம்மியமாய்ப் பாடிய பாடலும் உண்டு.
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்!
சில சம்யங்களில் சோகம் கப்பிப் கொண்டு சோம்பி இருக்கும் போது ஒருகணத்தில் மனசு அதுபாட்டுக்கு நம்பிக்கையூட்டும் பாட்டைத் தட்டி விடும்....
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
அண்மைக் காலத்தில் மக்களின் மனதில் நம்பிக்கையூட்டி பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒரு கலக்கு கலக்கிய பாட்டு உண்டென்றால் அது "ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடல்தான். இப்பாடல் கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா" பாடலை ஒத்தது; ஒரு வகை தொடர்ச்சி என்று கூட சொல்லலாம்.
புதிய பாடல்களின் வரிகள் பெரும்பாலானவை அவ்வளவு விரைவில் மனதில் தங்காது.( புதிய பாடல் அபிமானிகள் பொறுத்துக் கொள்ளவும் ) ஆனால் கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தைக் கடந்து நினைவில் நிற்கிறது.
இன்னொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால்...அதன் இசையும் மனசின் இன்னொரு 'ட்ரெக்'கில் ஓடிக்கொண்டிருக்கும்.
இப்படித்தான் இன்று விட்டு விட்டு கண்ணதாசன் பாடல்கள் 'ஹம்மிங்' செய்து கொண்டிருக்கையில் புதியபாடல் ஒன்றும் 'க்ரொஸ் ட்ரெக்' செய்தது....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
காலத்தைக் கடந்து வாழும் கண்ணதாசன் புகழ் புதிய படாலாசிரியர்களையும் விட்டு வைக்க வில்லை போலும்.
பி.கு: நாள்காட்டியில் அச்சுப்பிழையா? ஏனெனில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24 என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். எது எப்படி இருப்பினும், வாழ்க அவரது புகழ்!
*வாழ்க்கை நெருக்கடிகளைக் குறைக்க இலக்கியமும் இசையும் கூட துணைபுரிகின்றது.
0 comments:
Post a Comment