Thursday, December 23, 2010

அடைக்கலம்



உள்ளத்தை உருக்குகின்ற உணர்ச்சியுள்ள நூலைப் பற்றி ஒரு பழமொழியுண்டு. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்". திருவாசகத்திற்கு ஒரு உள்ளம் உருக வில்லையென்றால் ஒருவாசகத்திற்கும் உருகாது. கல்லைப் பிசைந்து கனியாக்கும் தன்மை திருவாசகத்திற்கு உண்டு.

சரணாகதி என்ற வடசொல்லுக்கு நேர் தமிழ்ச்சொல் இருக்கிறதா என்ற வினாவுக்கு திருவாசகம் விடைதருகின்றது.
ஆண்டவன் அருளைப் பெறுவதற்குத் திருவாசகம் அருமையான நெறியைக் காட்டுகிறது.அதுதான் அடைக்கலம் என்ற நெறி. அது அருமையான தமிழ்ச்சொல். சரணாகதி என்றாலும் அடைக்கலம் என்றாலும் பொருள் ஒன்றே.

அடைக்கலம் என்பது திருவாசகத்தில் அருளிச்செய்யப்பட்ட ஒருபகுதி. அடைக்கலத்தில் மாணிக்கவாசகர் தன்னை அடைக்கலப்பொருளாக ஆண்டவனிடன் ஒப்புவிக்கிறார்.

திருவாசகத்தில் வரும் ஒரு அருமையான வாசகம்:

"வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்குகங்கை சடைச்

செறுப்பவனே நின் திருவருளால் என்பிறவியை வேர்

அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே."


விளக்கம்:
நான்வெறுப்பனவே செய்கின்றவன்தான். என் சிறுமையை எல்லாம் ஆண்டவனே! உன்பெருமையினாலே பொறுத்து என் பிறவியின் வேரறுத்துவிட வகைசெய்ய வேண்டும். அடியேன் உன் அடைக்கலம். இத்தகைய பெரிய உதவியை அடியேனுக்குச் செய்யவேண்டும் என்று அவர் சொல்லுகிறார்.

0 comments: