Monday, March 21, 2011

இருவேறு உலகத்து இயற்கை...



'இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு' (குறள்:374)

விளக்கம்:
இந்த உலகம் இரண்டு வேறுபட்ட இயல்புகளை உடையது. பொருளை முதன்மையாகக் கொண்டு வாழ்வோர் ஒரு வகை; அறிவை முதன்மையாய்க் கொண்டோர் மற்றொரு வகை.

'திருவேறு' என்பது பொருள்களையும் புலன்களையும் அடைப்படையாகக் கொண்ட இகலோகத் தவ வாழ்க்கை. புறக்கண்களைத் திறந்துகொண்டு பெறும் அனுபவங்கள் அத்தனையும் இதில் அடங்கும்.

'தெள்ளியர் ஆதலும் வேறு' என்பது ஞானத் தெளிவு பெற்று ஆன்மா அனுபவம், இறை அனுபவம் பெறுவதை அடிப்படையாகக் கொண்ட பரலோகத் தவ வாழ்வு. அகக் கண்ணைய் திறந்து கொண்டு அனுபவங்களைக் கொண்டது.

அறிவுத் தெளிவும் மனப் பக்குவமும்தான் தவத்தின்வழி பெறப்படும் பயன்கள்.
எத்தனை பக்தி இருந்தாலும் ஏராளமாய் தான தர்மங்கள் செய்திருந்தாலும் 'ஞானத்தெளிவு' பெறாதவரை முழுமையான அனுபவத்தைப் பெற முடியாது. பிறவித் தொடரிலிருந்து விடுபடவும் முடியாது!

வினை விளைவுத் தத்துவங்களைக் கொண்ட நம் வாழ்க்கை என்பது இந்த பூமி சார்ந்தது. இகலோகம் எனும் புவிசார்ந்த வெற்றிகளை மட்டுமே கொடுக்க வல்லது.

தவம் என்பது இந்த வினை விளைவு வாழ்க்கையிலிருந்து 'விடுபட்டுப் பரத்தை' நோக்கிப் பயணிக்கும் வானம் சார்ந்த ஒரு...வகை வித்தை. பரலோகம் எனும் பரம்பொருளை அடையும் சாதனா வெற்றிகளைச் சார்ந்தது.

Saturday, March 19, 2011

தெய்வம் நமக்காக வருமா?



காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.



கேள்வி:
அருமையானத் திருக்குறள் ஐயா. கண்கள் இருந்தும் நாம் குருடர்களாக வாழ்கிறோமா என்ற அச்சம் தீடீரெனத் தோன்றிவிட்டது...எங்கே செல்கிறோம் நாம்? இதனைப் பற்றி திருவள்ளுவர் ஏதாவது கூறியிருக்கிறாரா?

நல்ல கேள்வி....பதில் சொல்ல முயல்கிறேன்.

அதாவது சமுதாய வாழ்க்கை என்பது ஒரு கூட்டு முயற்சி. 'எனக்கென்ன?' என்று ஒருநேரம் இருந்தாலும் மறுகணம் இருக்கத்தோன்றாது. நல்ல மனிதத்தன்மையின் இயல்பான பண்பு அது.

ஒருவர் மற்றவருக்கு உதவியாய் இருப்பதில் இந்தப்... பிரபஞ்சத்தின் அடிப்படை சூட்சுமம் அடங்கியுள்ளது. சிறிதளவாவது...எந்த வகையிலாவது...இயன்றளவு என்று உதவிசெய்பவர்களை இயற்கை கூர்ந்து கவனிக்கிறது என்கிற உண்மை பலர் அறிவதில்லை. இவையெல்லாம் 'மறைந்து கிடக்கும்' இரகசியங்கள்.

இந்த உதவும் மனப்பான்மையிலிருந்துதான் நாம் 'சமூக அக்கறை' எனும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுவோம்.

சமூக அக்கறையுடன் பொதுத்தொண்டு செய்ய வருவோருடன் மட்டுமே இயற்கை தொடர்பு கொள்ளும். இறையருளும் இறங்கிவரும். 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று வாழும் சுயநலமிகளை இயற்கை திரும்பியும் பார்க்காது. இறையருளும் அவர்களுக்கு வாய்க்காது.

ஒருவகையில், சமூக அக்கறையுடன் செய்யும் தொண்டு என்பது பிறருக்கு செய்யும் உதவி கிடையாது. அது நமக்கு நாமே மறைமுகமாகச் செய்யும் உதவியே ஆகும். ( இதுவும் 'சுயநலம்' தானே என்று எண்ணிவிடாதீர்கள். இது 'அதையும் தாண்டியது. வேண்டுமானால்..."யார் யார் சிவம்? நீ நான் சிவம்..!" எனும் பாடலை மனதிற்குள் ஓடவிட்டுப் புரிந்து கொள்ளுங்கள்! )

இதோ நீங்கள் கேட்ட குறள்:
'குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்தூறும்' (குறள் ; 1023)
விளக்கம்: 'சமூக அக்கறையுடன் பொதுத்தொண்டு செய்வோர்க்குத் தெய்வமே வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்யும்' என்பதே இதன் பொருள்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு அய்யன் திருவள்ளுவரை ( தமிழ்ஞானச் சித்தர் )
துணைக்கழைத்தேன். எல்லாப் புகழும் அய்யனைச் சாரும்.

Wednesday, March 16, 2011

பயணங்கள் நிற்பதில்லை... தேடல்கள் போலவே!



நெடுஞ்சாலைப் பயணம்
நெடுகிலும் வாகனம்
நெஞ்சிலும் புகைச்சல்!

ஆன்மீகப் பயணம்
ஆசையை அறுத்துத்தகனம்
ஆறுவது சினம்!

Tuesday, March 15, 2011

எதிரில் விளையாடுபவன் எதிரியல்ல!



சாதாரண பந்து விளையாட்டைப் பார்த்திருக்கிறோம். எதிர் அணியில் விளையாடுபவனை எதிரியாகப் பார்ப்பவர்களை ( பாதகமாக விளையாடுபவர்களை ) 'விளையாடத் தகுதியற்றவன்!' என்று ஒதுக்கி வைப்பதுதானே விளையாட்டுக்குரிய விதியாக உள்ளது!

இந்த உலகமும் ஒரு விளையாட்டுத் திடலே! வாழ்க்கையில் உங்களுடன் உடன்பாடாக நடந்து கொள்பவர்கள் உங்கள் அணியின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். உங்களுடன் இணைந்து பாடுபடுகிறார்கள்.

உங்களுக்கு எதிர்ப்பாக நடந்து கொள்பவர்கள் ஏதோ ஓர் எதிர் அணியின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். உங்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.

இந்த இயல்பைப் புரிந்து கொண்டால் எதிர்ப்பாக நடந்து கொள்பவர்கள் மீது கோபமோ, ஆத்திரமோ தோன்றாது.

உங்களுக்கு எதிர்ப்பாக விளையாடவேண்டி, விதியினால் தேர்ந்தெடுக்கப்பெற்றோர் எதிரியின் களத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் களத்தில் உங்கள் அருகிலேயே இருந்துகொண்டு கூட உங்களுக்கு எதிராக விளையாடலாம்.

எந்த நிலையில் விளையாடினாலும் அந்த நபரை எதிர் அணியில் விளையாடுபவராய்த்தான் பார்க்க வேண்டுமே தவிர எதிரியாய்ப் பார்க்கக் கூடாது.

விளையாட்டு முடிந்தவுடன் அன்பைப் பரிமாறிக் கொள்லத் தயங்கவும்கூடாது. இதுதான் இந்தப் புவிவாழ்க்கை என்னும் விளையாட்டிற்குரிய அடிப்படை விதியாகும்.

இந்தக் கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்கப் பழகிக் கொண்டால் விருப்பு வெறுப்பை வெல்லலாம். மனத்துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண‌
நன்னயம் செய்து விடல்.' (குறள்: 314)

என்னும் தமிழ்மறையின் தத்துவத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

அன்பே சிவம்!